பாராளுமன்றத்துக்கு ஏக்யராஜ்ய அரசியலமைப்பு வந்தால் தமிழரசு எதிர்க்கும்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி எந்த இலக்குக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலக்கில் இருந்து வழுவாமல் பயணிப்போம் எனத் தெரிவித்த அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்,ஏக்யராஜ்ய அரசியலமைப்பு பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டால் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதனை எதிர்த்து வாக்களிக்கும் என்று தெரிவித்ததுடன், ஏக்ய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியும் அல்ல சமஷ்டி ஆட்சியும் அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்வதாவும் கூறினார்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்பந்தனோ, சுமந்திரனோமாகாணசபை முறையை நிராகரிக்கவில்லை. அதேநேரம் அது எமது தீர்வு என்றும் சொல்லவில்லை. நான் கடந்த ஊடக சந்திப்பில் சொன்ன விடயங்களை
ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் மறுதலிக்கவில்லை. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அதற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
கஜேந்திரகுமார் 13ம் திருத்தத்தையும் அரசியலமைப்பையும் குழப்பி ஏக்ய ராஜ்ய மற்றும் ஒற்றையாட்சி என இரண்டையும் கூறுகிறார். மாகாண சபை 38 வருடமாக தோல்வியடைந்த முறை என சொல்கிறார்.
மாகாண சபை சட்டத்தின் மூலம் தான் தற்போது உள்ள உள்ளூராட்சி சபைகள் முறைமை காணப்படுகின்றது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கஜேந்திரகுமாரின் கட்சியும் போட்டியிட்டது. அது ஒற்றையாட்சி இல்லை என சொல்கிறாரா என விளங்கவில்லை.
எங்களைப் பொறுத்தவரையில் 1987க்கு முன்னர் பாராளுமன்ற கட்டமைப்புக்கு பிறகு உள்ளூராட்சி சபை முறைமை தான் காணப்பட்டது. 1988க்கு பின்னர் 13ம் திருத்த சட்ட மூலம் ஒரு கட்டமைப்பாக மாகாண சபை கொண்டுவரப்பட்டது.பாராளுமன்றுக்கு அடுத்ததாக உப சட்டவாக்க அலுவலகமாக அது காணப்பட்டது.
13ம் திருத்தமும் மாகாண சபையும் எமது அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு அல்ல. எமது கட்சியின் நிலைப்பாடும் அதுவே.
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை அரசாங்கம் நடைமுறைப்படுத்த நீங்கள் வலியுறுத்த வேண்டும் என ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளோம். பிறகு எவ்வாறு தமிழ் அரசுக் கட்சி சமஷ்டியை கைவிட்டு விட்டதாக கூறமுடியும்.
சுமந்திரன் பிரித்தானிய சென்று இலங்கை தொடர்பான ஐ.நா.வரைபை நீர்த்து போக செய்தார் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கிறார். சுமந்திரனுக்கு சர்வதேச அங்கீகாரம் இருக்கிறது. ஆனால் இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகளின் நிலைப்பாட்டை மாற்றக்கூடிய பலம் தனி நபருக்கு இருக்குமா என்பது சந்தேகமே. சுமந்திரன் போய் கதைக்கும் போது நீங்கள் பார்த்துக்கொண்டு இருந்தீர்களா?
ஏக்யராஜ்ய அரசியலமைப்பு பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்ப்பட்டால் இலங்கை தமிழ் அரசுக் கட்சி எதிர்த்து வாக்களிக்கும். அதேவேளை ஏக்ய ராஜ்ய ஒற்றையாட்சியும் அல்ல சமஷ்டி ஆட்சியும் அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறோம். ஒருமித்த நாடு என்றால் ஒரு நாடா? ஒன்றுக்கு மேற்பட்டவையையே ஒருமித்த நாடு என்பர். தமிழ் அர்த்தத்தை விட்டு சிங்களத்தை பிடித்து கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு போதியஅறிவு இருக்கிறது. எனக்கு விளங்காது என கஜேந்திரகுமார் நினைப்பது பொருத்தமற்றது.
ஏக்ய ராஜ்ய பற்றி நிஹால் அபேசிங்க சுவிற்சர்லாந்தில் சொன்னதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கிறார்.
நிஹால் அபேசிங்க உத்தியோகபூர்வமானவரா? அனுர குமார திஸாநாயக்க, பிமல் ரத்நாயக்க சொல்லவேண்டும். மக்களை திசை திருப்புகின்றனர் எனச் சொல்லி காங்கிரஸே குழப்புகிறது.
1988 நவம்பரில் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலம் மாகாண சபை நடைமுறையில் உள்ளது தானே என்றார்.
![]()