முச்சந்தி

ஐ.நா உளவாளிகளை வெளியேற்றிய இப்ராகிம் தராரே!….  மேற்குலக சிம்ம சொப்பனமான ஆபிரிக்க விடிவெள்ளி….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(நீண்ட காலமாகவே துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கும் ஆபிரிக்க மண்ணில் புதிய காற்று வீசுகிறது. ஒட்டு மொத்த ஆபிரிக்காவுக்கும் புதுச் சுவாசம் பெற வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.)

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி புர்கினே பாசோ (Burkina Faso) நாட்டின் இன்றைய இளம் அதிபர் இப்ராகிம் தராரே (Ibrahim Traore) ஒருதுணிச்சலான அதிரடி முடிவை எடுத்தார். ஐ.நா வின் ஒருங்கிணைப்பாளர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்பதுதான் அந்த முடிவு.

உலகின் இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆபிரிக்காவிலயே விடிவெள்ளி என்று தற்காலத்தில் கூறப்படும் இப்ராகிம் தராரே தான் இந்த அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

உலகில் உள்ள ஏழை நாடுகளிலும் அரசியல் மாற்றம் சாத்தியம் என்பதற்கு இப்ராகிம் தராரே என்ற இளம் வீரரின் வருகை விடிவெள்ளியாக மிளிர்கிறது. ஆபிரிக்காவில் புதிய இளம் தலைவரான, மேற்குலகின் சிம்ம சொப்பனமாக இப்ராகிம் தராரே விளங்குகிறார்.

ஆபிரிக்காவின் இளம் சூரியன்:

இப்ராகிம் தராரே அந்நாட்டின் தலைமைப் பொறுப்பை எடுத்தவுடன், அங்கிருந்த தொலைத்தொடர்பு மற்றும் செய்திப்பரிமாற்ற அலவலகங்களை இரகசியமாக கையிலெடுத்துக் கொண்டார். அப்போதிருந்து ஐ.நாவின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மேற்குலக நாடுகளின் தூதுவராலயங்களுடன் தொடர்பிலிருந்து ஒற்றனாக வேலைசெய்ததைக் கண்டறிந்தார்.

ஐ.நா அடுத்ததாக என்ன செய்யும் என்பது இப்ராகிம் தராரேக்கு நன்றாகத் தெரியும். எதிர்க்கட்சியிலிருந்து யாராவது ஒருவருக்கு உருவேற்றி கிளர்ச்சியை உண்டுபண்டும். பின்னர் அமைதி பேணும் படை என்ற பெயரில் பன்னாட்டுப் படையை அனுப்பி, அந்நாட்டு வளத்தைக் கொள்ளையடிக்கும் மேற்குலக நிறுவனங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும்.

இறுதியில் ஏதோ ஒரு நாடு சமாதானம் செய்கிறோம் என்ற பெயரில் புகுந்து தன் மண்ணின் வளங்களைக் காப்பவனுக்கெதிராகச் சதிசெய்து அவனை அழிக்கும். இதுதான் காலாதிகாலமாக ஆபிரிக்காவிலும் கீழைத்தேய நாடுகளிலும் நடக்கும் விடயமாகும்.

இது எனது நாடு, எனது வளங்கள் எனது மக்களுக்கே, நீ வெளியே போ, இவ்வளவும்தான் இப்ராகிம் தராரேவின் அடிப்படை. அவருக்கு மக்கள் ஆதரவும் பெருகிக்கொண்டே போகிறது. தோமஸ் சங்காரா (Thomas Sankara) அளவிற்கு இல்லாவிடினும் இப்ராகிம் தராரே மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறார்.

உலகிற்கு நாட்டாமை என்ற பெயரில் மேற்குலக அரசுகளுக்குச் சார்பாக ஐ,நா செய்யும் திருகுதாளங்களையும். ஒற்றர் வேலைகளையும் இப்ராகிம் தராரே அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை அறிந்து அமெரிக்கா கடுங்கோபம் கொண்டுள்ளது.

அந்நாட்டில் மேம்பாடு, மறுசீரமைப்பு என்ற பெயரில் அனைத்துப் பகுதிகளுக்கும் உள்நுழைந்து, ஐ.நா அலுவலகங்களுக்குள் பணிபுரிந்தவர்கள், இராணுவ தளங்கள் பற்றிய தகவல்களை மின்னஞ்சல்களூடாக வெளியே அனுப்பிக் கொண்டிருப்பதை
இப்ராகிம் தராரே உளவாளிகள் மூலம் உறுதி செய்தார்.

உள்நாட்டுக்குள் கிளர்ச்சி ஆர்ப்பாட்டங்களை ஊக்குவிக்கும். அதனால் தலைமை அமைதியாகவே இருந்தது. ஆனாலும் ஐ.நா தம்மிடம் வளமாகச் சிக்கும் என்பதும் இப்ராகிம் தராரேக்கு நம்பிக்கையாக தெரியும்.

ஆனால் மேற்குலக ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட இப்ராகிம் தராரே சீனாவோடும், ரஷ்யாவோடும் கூட்டுச் சேர்ந்திருக்கிறார். அவரே ஐ.நா மண்டபம் இன்னும் சிலவருடங்களில் கண்காட்சிக் கூடமாகும் என அடிக்கடி சொல்வார்.

பிரெஞ்சு அரசு தனது சொந்த நலனுக்காக ஆபிரிக்காவில் அதிகார வர்க்கங்களின் போட்டிகளை கையாள்வதில் நீண்ட கால சாதனையை கொண்டுள்ளது. அத்துடன் பாரிஸ் அதன் முன்னாள் ஆபிரிக்க காலனித்துவ சாம்ராஜ்யத்தில் எண்ணற்ற இராணுவ சதிகளையும் ஏற்படுத்தி வெற்றி கண்டுள்ளது.

தராரே என்ற புரட்சியாளன்:

இன்று மேற்குலகத்தைக் கலங்கடித்து, மேற்குலக ஆதிக்கத்திலிருந்து முழு ஆபிரிக்காவையும் மீட்டெடுப்போம் என்று சபதமிட்டு அதற்காகத் துரிதமாகாக் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் இப்ராகிம் தராரே என்ற இளம் ஆபிரிக்க வீரர்.

அன்றைய புர்கினா பாசோ (Burkina Faso) நாட்டின் புரட்சியாளன் தோமஸ் சங்காரா கிளர்ந்தெழுந்தபோது உலக அரச பயங்கரவாதத்தால் அவர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் தற்போது அந்த வரலாறு மீள திரும்புகிறது. மூன்று தசாப்தங்கள் கழித்து அந்த மண்ணிலிருந்து இப்ராகிம் தராரே என்ற புரட்சியாளன் வெடித்துக் கிளம்பியிருக்கிறான்.

பாட்ரிஸ் லுமும்பாவில் தொடங்கி சமோரா மோசஸ் மார்சல், தோமஸ் சங்கரா என்று ஆபிரிக்கப் புரட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. அதில் தற்போது இப்ராகிம் தராரே இணைந்து கொள்கிறார்.

காலனித்துவ காலத்தின் பின்னர் தாம் வெளியேறும் போது தமது கனிமவள சுரண்டலை தொடர்வதற்க்காக ‘ஒரு பொம்மை அரசை’ நிறுவுவது மேற்கு ஜரோப்பியர்களின் வழக்கம். அப்படியான பொம்மை அரசை உதறித் தவிர்த்து சுயாதீன அரசை நிறுவியவர். ஜரோப்பிய – பிரான்ஸ் படைகளை ஆபிரிக்க நாடான புர்கினோ பாசோவை விட்டு வெளியேற்றியவர் இப்ராகிம் தராரே ஆவார்.

புர்கினா பாசோவின் விடிவெள்ளி:

தற்போது மாலி உட்பட பல ஆபிரிக்க நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகிறார். பலமிக்க ஒன்றிணைந்த ஒற்றுமையான ஆபிரிக்க பொருளாதாரம் மூலமே உலக சாம்ராஜியங்களின் சுரண்டலை ஒழிக்கலாம் என்பதை உணர்ந்து புரிந்தவர்.

அமெரிக்கா, மேற்கு ஜரோப்பிய முதலாளித்துவத்தை நிராகரித்து ஏழை நாடுகள் எப்படி உலகில் அரசியல் செய்ய முடியும், என்ற கேள்விக்கு விடையை அறியத் தந்துள்ளார். அதாவது சமத்துவ தேடலின் விடிவெள்ளியாக, சங்காராவின் அரசியல் வாரிசாக, மேற்கு ஆபிரிக்காவின் இளம் சூரியனாக தோற்றம் பெற்றுள்ளார் இந்த இப்ராகிம் தரோரே ( Ibrahim Traore).

பாரிஸின் காலனித்துவ கொள்கைகளை விமர்சித்துவந்த ஆபிரிக்க ஆட்சிகளை வெளியேற்றுவதற்கு, ஆபிரிக்க நாடுகளில் பல சதிப்புரட்சிகளை பிரான்ஷ் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளது.

1987 இல், புர்கினா பாசோவில், சோவியத் சார்பு ஜனாதிபதி தோமஸ் சங்கராவை தூக்கியெறிந்து, அவரை கொலை செய்த பின்னர் பிளைஸ் கம்போரேவை பிரெஞ்சு அரசாங்கம் ஆதரித்தது. ஆபிரிக்காவின் மிக மோசமான அகதிகள் நெருக்கடிகளில் ஒன்றான, புர்கினா பாசோவில் நடந்துவரும் சண்டையால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியின் விளிம்பிற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக புர்கினா பாசோ, நைஜர், மாலியில் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சை தங்கள் நாடுகளில் இருந்து, அதனது படைகளை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டன. தற்போது மேற்கு ஆபிரிக்கா முழுவதும் அரசியல் ரீதியாக பிரான்சை எதிர்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *