இஸ்ரேல் ஏற்கும் காசா போர் நிறுத்தம்!… ஹமாஸ் நிராகரிக்கும் இருபது அம்ச திட்டம்…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(காசாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் படிப்படியாக வெளியேறும் இருபது அம்ச போர் நிறுத்த திட்டம் ஹமாசால் நிராகரிக்கப்பட்டுள்ளது)
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட இருபது அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதை ஏற்பதாக இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், ஹமாஸ் முதலில் மவுனம் காத்தது. தற்போது நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் நிராகரித்தால் அழிவே மிச்சம்?
காசாவில் உள்ள ஹமாஸின் இராணுவப் பிரிவின் தலைவர்
புதிய போர்நிறுத்தத் திட்டத்திற்கு உடன்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ஹமாஸை அழித்து முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டதாக இராணுவப் பிரிவின் தலைவர் இஸ் அல்-தின் அல்-ஹதாத் தெரிவித்துள்ளார். ஹமாஸ்
அமைப்பு இதை ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், அவர் தொடர்ந்து போராடத் தீர்மானித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இந்த திட்டம் இஸ்ரேலால் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்பட வேண்டும், மேலும் காசாவை நிர்வகிப்பதில் எதிர்காலப் பங்கு எதுவும் இல்லை என்று கூறுகிறது.

கட்டாரில் உள்ள ஹமாஸின் சில அரசியல் தலைமைகள் மாற்றங்களுடன் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஆனால் ஹமாஸ் அமைப்பால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் மீது அவர்களுக்கு கட்டுப்பாடு இல்லாததால் அவர்களின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இன்னமும் 48 பணயக்கைதிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஹமாஸில் உள்ள சிலருக்கு மற்றொரு தடையாக இருப்பது என்னவென்றால், போர்நிறுத்தத்தின் முதல் 72 மணி நேரத்திற்குள் அனைத்து பணயக் கைதிகளையும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்த திட்டம் கோருகிறது. இது அவர்களின் ஒரே பேரம் பேசும் திறனை அழிக்கிறது.
இஸ்ரேல் விதிமுறைகளுக்குக் கட்டுப்படும் என்று டிரம்ப் உத்தரவாதம் அளித்தாலும், பணயக்கைதிகளை ஏற்றுக்கொண்டவுடன் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்காது என்ற நம்பிக்கை ஹமாஸ் அமைப்புக்கு இல்லை. குறிப்பாக கடந்த மாதம் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி கட்டாரில் ஹமாஸ் தலைமையை வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்ய முயன்ற பிறகு நம்பிக்கையை இழந்து விட்டனர்.
பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு மீது கடந்த 2023 அக்டோபர் 7இல் இஸ்ரேல் துவங்கிய போர், இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது. இந்தப் போரில் பாலஸ்தீன தரப்பில், 66,000 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகவும், மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.
அரபு நாடுகள் ஆதரவு:
காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பல நாடுகள் கூறியுள்ளன.
பல அரபு நாடுகள் வரவேற்றதுடன், இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர முன்மொழிந்துள்ள அமைதி திட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. சவுதி அரேபியா, கட்டார், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், துருக்கி, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டு டிரம்பின் முயற்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும், செயல்படுத்தவதற்கும் அமெரிக்கா மற்றும் பிற தரப்பினருடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக அவை தெரிவித்துள்ளன. இதேவேளை பல உலகத் தலைவர்கள் இந்த திட்டத்தை ஆதரித்து உள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இத்திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல் உறுதியுடன் ஈடுபடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவித்து, இந்த அமைதி திட்டத்தை பின்பற்றுவதைத் தவிர ஹமாசுக்கு வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனி, இந்த அமைதித் திட்டம், ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். இது மோதலை நிரந்தரமாக நிறுத்துவதற்கும், அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும், பொதுமக்களுக்கு முழுமையான மற்றும் பாதுகாப்பான மனிதாபிமான அணுகலை அனுமதிப்பதற்கும் வழிவகுக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
20 அம்ச அமைதித் திட்டம்:
ஆனாலும் காசா மீதான ஹமாஸின் அரசியல் மற்றும் ராணுவ கட்டமைப்பை கலைப்பதே இந்த அமைதி திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, வெடிபொருள் சுரங்கங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் உட்பட ராணுவ கட்டமைப்புகளை கலைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கமாகும்.
அத்துடன் ஹமாஸ் அமைப்பு, நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது எந்த வடிவத்திலோ காசா அரசில் எந்த பதவியும் வகிக்க முடியாது. உயிருடன் அல்லது இறந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் திருப்பி அனுப்ப வேண்டும். பதிலுக்கு ஆயுள் தண்டனை அனுபவித்த 250 பாலஸ்தீனியர்களையும், மோதல் துவங்கியதில் இருந்து கைது செய்யப்பட்ட அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளையும் சேர்த்து 1,700 காசா மக்களையும், இஸ்ரேல் விடுவிக்கும்.
மேலும் இறந்த இஸ்ரேலிய பிணைக் கைதிகளை திருப்பி தந்தால், போரின் போது கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அமைதியான வாழ்வுக்கு உறுதியளிக்கும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு காசாவில் தொடர்ந்து வாழ்வதற்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். அங்கிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு, அவர்களை ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு பாதுகாப்பான பயணம் வழங்கப்படும்.
இறுதியாக போர் முடிவுக்கு வந்ததும், ஆரம்பத்தில் அரசியல் சார்பற்ற பாலஸ்தீன குழுவால் காசா நிர்வகிக்கப்படும். இக்குழுவில் தகுதிவாய்ந்த பாலஸ்தீனியர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் இருப்பர். பொது சேவைகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு இக்குழு பொறுப்பேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் தலைமையில் அமைதி குழு:
இந்த அமைதிக்கான இடைக்காலக் குழு, அமைதி வாரியம் என்ற ஒரு புதிய சர்வதேச அமைப்பால் கண்காணிக்கப்படும். இவ்வாரியத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமை தாங்குவார். பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் போன்ற உலக தலைவர்களும் இதில் இடம் பெறுவர். இவ்வாரியம் காசாவின் புனரமைப்புக்கான நிதி மற்றும் கட்டமைப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்.
தற்போதைய பாலஸ்தீன அதிகார சபை (PA) ஒரு சீர்திருத்தத் திட்டத்தை நிறைவு செய்த பின்னரே, காசாவின் கட்டுப்பாட்டை எடுக்க முடியும். ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்த காலக்கெடு அறிவிக்கப்படவில்லை.
இந்த அமைதி திட்டம் ஆனது ஹமாசை அதிகாரத்தில் இருந்து அகற்றி, அதற்கு பதிலாக சர்வதேச மேற்பார்வையில் ஒரு நிர்வாகத்தை நிறுவி, இறுதியில் கட்டுப்பாட்டை பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்க முன்மொழிகிறது என்பதே உண்மை ஆகும்.
சர்வதேச அமைதி படை :
காசா பகுதியில் உடனடி போர்நிறுத்தம் ஏற்பட்டால் இந்த அமைதி திட்டத்தின் கீழ், ஹமாஸ் ஆயுதங்களை களைய வேண்டியிருக்கும், மேலும் அமெரிக்கா அரபு மற்றும் சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து தற்காலிக சர்வதேச படையை நிறுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸ் எந்தப் பங்கையும் வகிக்காது என்றும் இந்த திட்டம் கூறுகிறது. அதன் உறுப்பினர்கள் அமைதியான சகவாழ்வுக்கு உறுதியளித்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். அதே நேரத்தில் அந்த இடத்தை விட்டு வெளியேற விரும்புவோருக்கு வெளிநாடுகளுக்கு பாதுகாப்பான பாதை வழங்கப்படும்.
மேலும் காசாவில் தினசரி சேவைகளை வழங்க பாலஸ்தீன தொழில்நுட்ப வல்லுநர்களின் இடைக்கால அரசாங்கம், சுயாட்சி, இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்களின் மீள் வருகை மற்றும் காசா மக்கள் அகற்றப்பட மாட்டார்கள் என்ற உறுதி மொழிகளையும் இந்த திட்டம் மூலம் தெரியவருகிறது.
கட்டாரிடம் மன்னிப்பு கோரிய இஸ்ரேல்:

செப்டம்பர் மாத தொடக்கத்தில் கட்டார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தற்போது கட்டாரிடம் மன்னிப்பு கோரியுள்ளது இஸ்ரேல் அரசு.
மேலும் இஸ்ரேலிய பிரதமர் மன்னிப்புக் கோரியதை அடுத்து, காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தொடரத் தயாராக இருப்பதாக கட்டார் பிரதமர் கூறியுள்ளார்.
ஆனாலும் ஹமாஸ் ஒப்புக்கொண்டால் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும், இல்லையென்றால் இஸ்ரேல் ராணுவ நடிவடிக்கை வாயிலாக ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிக்க, இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவளிக்கும் என கூறப்பட்டுள்ளது.
![]()