பாதீட்டு நிதியை நீதி அமைச்சு விடுவிக்காததால் செம்மணிப் புதைகுழியை தோண்டுவதில் தாமதம்; எதிர்வரும் 13ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீட்டுக்கு நீதி அமைச்சு நிதியை விடுவிக்காத நிலையில் செம்மணி மனித புதைகுழி வழக்கு எதிர்வரும் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான பாதீடு கடந்த மாதம் 18ம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் , சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் சமர்ப்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நேற்றைய தினத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் , முதல் கட்டமாக 9 நாட்களும் , இரண்டாம் கட்டமாக 45 நாட்களுமாக கட்டம் கட்டமாக 54 நாட்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றில் 239 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு ,நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் போது மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகள் , மற்றும் பேராசிரியர் சோமதேவாவின் செய்மதி மூல அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் மனித புதைகுழி காணப்படும் இடங்களுக்கு அண்மையில் மேலும் மனித புதைகுழிகள் காணப்படுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதால் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 08 வார கால அனுமதி வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மன்றில் விண்ணப்பம் செய்ததை அடுத்து , அதற்கான செலவீன பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று உத்தரவிட்டதை அடுத்தே கடந்த தவணையின்போது பாதீடு சமர்ப்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இருந்து இந்தப் பாதீடு அனுப்பப்பட்டு மேல் நீதிமன்றம் ஊடாக நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட நிலையில் பாதீட்டுக்கான அனுமதி இன்றையதினம்(நேற்று)வரையில் கிடைக்கவில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு எதிர்வரும் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அன்றைய தினத்திற்குள் பாதீட்டுக்கு நிதி ஒதுக்கப்படுமாக இருந்தால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணி எப்போது ஆரம்பிக்கப்படும் என தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கில் பருவமழை (மாரிமழை) ஆரம்பிக்கவுள்ள நிலையில், புதைகுழியை தோண்டுவதில் தாமதம் ஏற்படுமானால், சதுப்பு நிலத்தை கொண்ட செம்மணி பகுதியில் நீண்ட காலத்திற்கு நீர் தேங்கி நிற்கும் என்பதால் அடுத்த ஏப்ரல் மாதம் வரை புதைகுழியை தோண்டமுடியாத நிலைமை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
![]()