தாஜுதினின் ஆத்மாவை அவமதிக்க வேண்டாம்!; அரசாங்கத்திற்கு நாமல் கோரிக்கை

தாஜுதினின் மரணம் தொடர்பில் தனது அரசியல் மேடையை உருவாக்கி அவரின் ஆத்மாவை அவமதிக்காது, பக்கச் சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னரும் இதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போதும் ராஜபக்ஸக்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எங்களை பற்றி 2015ஆம் ஆண்டு முதல் விசாரணைகள் நடத்தப்பட்டன. தங்களின் மேடைகளில் கூறப்பட்ட விடயங்களை உண்மையாக நிரூபிக்க முயற்சித்தனர். நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அதிகாரிகள் பலவந்தமாக பொய் சாட்சிம் கூறவும் வைத்தனர். அந்த அதிகாரிகளே இன்று அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தாஜுதின் மரணம் தொடர்பில் ஊடகங்களுக்கு முன்னால் கூறியுள்ளார். நீதிமன்றத்தில் கூற வேண்டிய விடயத்தை ஊடகங்களின் முன்னால் கூறுவதானது அரசியல் ரீதியில் இது தொடர்பான கருத்தாடல்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆகும். பக்கச்சார்பின்றி விசாரணைகளை நடத்துங்கள் என்று அரசாங்கத்தை கோருகின்றோம்.
தாஜுதின் தொடர்பில் தனது அரசியல் மேடையை உருவாக்க கஸ்டப்பட்டுக்கொண்டிருக்காது அவர்கள் ஏதேனும் அநீதிகளுக்கு இலக்காகி இருந்தால் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துங்கள். அவ்வாறு செய்யாமல் தாஜுதினின் ஆத்மாவை அவமதிக்க வேண்டாம்.
ரணில் வாரம் முடிந்ததும் ஐஸ் வாரம் ஆரம்பமானது. பின்னர் இப்போது தாஜுதின் வாரம் ஆரம்பமாகியுள்ளது. அடுத்து என்ன வாரம் என்று தெரியவில்லை என்றார்.
![]()