கதைப்பதை மட்டுமே அரசியல் என நினைப்பவர்கள் தமிழரசியல் வாதிகள்… ஏலையா க.முருகதாசன்

இன்று இலங்கையைத் தமது அரசியல் நிர்வாகத்தின் மூலம் வழிநடத்தபவர்கள் மிராசுதர்கள் பரம்பரையிலிருந்து வழிவந்தவர்கள் அல்ல.
இலங்கையில் மக்களுக்கான அரசியலல்லாத அரசியல் மூலமாக தம்மைத் தக்க வைத்த முதலாளித்துவ சிந்தனையைக் கொண்ட தம்மை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்வதை அறிந்தவர்கள் மீது கோபத்துடன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து அது தவறு என்பதை உணர்ந்து தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்து சனநாயக வழிக்குத் திரும்பியவர்கள்.
இவர்களின் கொள்கையும் கோட்பாடும் ஒன்றுதான் அதன் அரசியல் வடிவம் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சனநாயக சோசலிச வழியாகும்.
உலக நாடுகளை இலங்கையுடன் ஒப்பிட்டு இலங்கை போன்ற நாட்டுக்கு எத்தகைய பொருளாதாரக் கொள்கை தேவையென்பதை நடைமுறைப்படுத்த நினைப்பவர்கள்.
இவர்கள் அலங்கார வீட்டில் சோபா செற்றியில் உட்கார்ந்து கொண்டு அரசியல் விவாதங்களையும்,கருத்துப் பரிமாறல்களையும் செய்தவர்கள் அல்ல.
கிராமப்புறச் சனசமூக நிலையங்களிலும்,தேநீர்க்கடை வாங்குகளிலும் ,உட்கார்ந்து தேநீர் குடித்தபடியே கடைக்கு வருவோர் நாட்டைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும், அந்த மந்திரியைப் பிடித்து அலுவல் பார்த்தேன் இந்த மந்திரிக்கு இலஞ்சம் கொடுத்து அலுவல் பார்த்தேன் அந்த மாபியாத் தலைவனின் யாலுவதான் இந்த அதிகாரி என்பதை காற்றில் வரும் இரகசியமாக கதையோடு கதையாகக் கேட்டறிந்தவர்கள்.
அரச இயந்திரத்தில் எந்த உறுப்பை மாற்ற வேண்டும் என்ற தெரிந்தவர்கள்.தனிமனிதப் பசியையும் நாட்டின் பசியையும்,நாட்டின் வறுமை நிலையையும் பல ஆண்டுக் கவனிப்பில் அறிந்தவர்கள்.
ஒரு சதத்தின் வலு என்னவென்பதன் நிதித் தன்மையை அதற்கான கல்வியைப் பெற்றவர்கள்.இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள்,அதிலும் கணிசமான தொகையினர் அரசியலைப் பாடமாகக் கற்றவர்கள்.
தமிழர் பகுதிக்கான தனது முதல் பொதுக்கூட்டத்தையே வல்வெட்டித்துறையில் வைத்து தமிழர்களின் நாடித்துடிப்பை அறிந்த ஒரு சாமனியன்தான் இலங்கையின் இன்றைய ஜனாதிபதியான ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கா.
முன்னால் ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் கைதான போது இதெல்லாம் சின்ன விசயம் என்பது போல பெரும் துக்கத்தைக் கொண்டாடியவர்கள் தமிழர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
தவறுகளைக் கண்டிக்கத் துணிவில்லாத தமிழரசியல்வாதிகளை இன்னுமா தமிழர்கள் நம்ப வேண்டும்.
அனைவருக்கும் சட்டம் பொதுவானது நீதி பொதுவானது என்று கையை உயர்த்திப் பேசிவரும் தமிழரசியல்வாதிகளின் பொது நியாயம் எங்கே போய்விட்டது.
இவர்களில் சிலரின் மதுபானக் கடைகளுக்கு திரு.ரணில் விக்கிரமசிங்காவிடமிருந்து
அன்பளிப்பாகப் பணம் வாங்கியதாக கதை நடக்குதே உண்மையா?.
யார் செய்தாலும் தவறு தவறுதான் என இனிமேல் தமிழரசியல்வாதிகளால் கதைக்க முடியாது.
அரசுக்கெதிராக ஒன்று சேர்ந்த ஊழல்வாதிகளை ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் இனங்காட்டியது போல,கழுவின மீனில் நழுவின மீனாக நழுவிய தமிழரசியல்வாதிகளையும் தமிழர்களுக்கு இனங்காட்டியுள்ளது இக்கைது.
இனியாவது எவ்வித அரசியல்வாதிகள் எமக்குத் தேவையென்பதை தமிழர்கள் உணர்வார்களா?
தமிழரசியல்வாதிகளை முன்னாள் ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்காவின் கைது இனங்காட்டிவிட்டது.
![]()