தாந்தியான் சிதம்பரப்பிள்ளையின் ‘வாழும் வசந்தன்’ தொகுப்பு நூல் அறிமுகமும் நோக்கும் போக்கும்… சோலையூர் குருபரன்

இலங்கை மட்டக்களப்பின் தென்பாலுள்ள முனைக்காடு என்னும் அழகிய கிராமத்தில் பிறந்து 1995 முதல் அவுஸ்திரேலியாவின் மெர்பேர்ன் நகரத்தில் நிரந்தரமாக வசித்து வரும் தாந்தியான் சிதம்பரப்பிள்ளை அவர்களின் ‘வாழும் வசந்தன்’ தொகுப்பு நூல் 03.08.2025 அன்று மண்முனை தென் மேற்கு, கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் வெளியிடப்பட்டது. அந்தத் தொகுப்பு நூலைப் பற்றிக் கூறுவதற்கு முன்பாக….
மனித பண்பாடு, நாகரிகம் என்பது திடுதிப்பென ஏற்பட்ட ஒன்றல்ல. நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதன் நதிக்கரையோரங்களை அண்டி கூட்டங் கூட்டமாக நிலையான வாழ்க்கை வாழ ஆரம்பித்ததில் இருந்து தோற்றம் பெற்றது. படிப்படியாக மனித செயற்பாடுகளில் மாற்றங்கள் நிகழ வாழ்க்கை முறைகளும் மாற்றம் பெற்றன. கூட்டமாக வாழ்ந்த மனிதர் ஓய்வு நேரங்களில் ஆடல், பாடல், கூத்துக் கும்மாளம் என்று சந்தோசமாகக் காலத்தைக் கழித்தனர். தமிழ் நாரிகம் என்பது நாப்பதாயிரம் வருடங்களுக்கு மேற்பட்டதாக இருக்கலாம் என அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.
இருந்தும் பொ.ஆ.மு நான்காயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதான சான்றாதாரங்கள் சிந்துவெளி, ஆதிச்ச நல்லூர், கீழடி, கங்கை போன்ற இன்றும் பல இடங்களில் இருந்து கிடைக்கும் ஆய்வு மூலமான சான்றாதாரங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. உலகத்துக்கு நாகரிகத்தையும் மொழியையும் கொண்டு சென்றவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என்ற ஆதாரங்களும் கிடைத்து வருகின்றன.
உலகிலே பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டில் முதன் முதல் தனக்கென (அகத்தியம்,தொல்காப்பியம்) இலக்கணம் வகுத்த மொழி தமிழ் மொழி. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கில் இருந்த தமிழ், லத்தின், சமஸ்கிருதம், சீனம், கீப்புறு, ஹெல ஆகிய ஆறு மொழிகளுள் தமிழ் மொழிக்கு மாத்திரமே அப்போது இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தது. இந்த ஆறு மொழிகளுள் தழிழு, சீனம் ஆகிய இரு மொழிகள் மாத்திரமே இன்றும் பேச்சு வழக்கில் உள்ளன. இதில் தமிழ் மொழியே உலகில் முதல் தோன்றிய ஆதி மொழி என்பது குமரிக் கண்டத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
உலகத்துக்குக் கலை, கலாசாரம், நாரிகத்தைப் போதித்த தமிழர் நாகரிகம் உலகில் பயன்பாட்டிலுள்ள சகல மொழிகளுக்குள்ளும் 200 முதல் 1000 வரையான தமிழ் சொற்களை வழங்கி விட்டிருக்கிறது. தற்பொழுது தமிழ் மொழி ஆரியர், பிராமணர், திராவிடர்களின் பிடிக்குள்ளும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளுக்குள்ளும் அகப்பட்டுத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தமிழ் மொழி மொழி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. திட்டமிட்டுத் தமிழர்கள் மத்தியில் ஆரியர், பிராமணர், திராவிடர்கள் பிற மொழிகளைத் திணித்துத் தேசியம், தனித்துவம் என்பவற்றைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். திட்டமிட்டுத் திணிக்கப்பட்ட மொழி, கலை, கலாசாரக் கலப்பினால் தமிழரின் கலை, கலாசார விழுமியங்கள் காலப்போக்கில் சிதைந்து விடுமோ என்ற அச்சம் தமிழரின் முதுசங்களைப் பேணிப் பாதுகாக்க விரும்பும் பலரிடம் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
கூட்டமாக வாழ்ந்த காலத்தில் தமிழரின் வாழ்வியலில் தோன்றிய கலை உணர்வு ஆடல், பாடலுடன் கூடிய சமய, கலை, கலாசார, ஒழுக்க, விழுமியங்களுடன் கூடிய நாகரிகம் தோன்றி வளர்வதற்கும் காரணமாய் அமைந்தது. ஆரம்பத்தில் ஆடல், பாடலுடன் கூடிய கலை வடிவம் காலப்போக்கில் இசை, தாளம் கலந்தனவாக மாறின. தமிழரிடம் முதலில் தோன்றிய கலை வடிவங்களில் வசந்தன், கோலாட்டம், கூத்து, நடனம் என அவரவர் வாழ்க்கை முறைக்கு ஏற்றால் போல் மாற்றமுற்றுச் சென்றிருக்கலாம் என மானிடவியல் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மிக முந்தைய கலை, பண்பாட்டுப் பாரம்பரிய அம்சங்களுள் வசந்தன், கோலாட்டம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தனவாக சிறு சிறு மாற்றங்களுடன் தமிழர் வாழும் பிரதேசங்கள் சிலவற்றில் இன்றும் ஆடப்பட்டு வருகின்றது.
நாட்டார் கலை வடிவங்களுள் ஒன்றான வசந்தன் கூத்து ஆரம்பத்தில் கிராம மக்களால் பொதுவியலாகக் கொள்ளப்பட்டு ஆடி வந்தனர். பிற்காலத்தில் தெய்வங்கள், அரசர்கள், நிலச்சுவாந்தார்களையும் மையப்படுத்தி ஆடப்பட்டு வந்தமையால் வேத்தியலுக்குள்ளும் அடக்கப்பட்டன. பெரும்பாலான பாடல்கள் சந்த ஓசையுடையதாக யாப்பிலக்கணப் பரிச்சயமில்லாத கிராமத்துப் புலவர்களால் பாடப்பட்ட பாடல்களாகவே வசந்தன் பாடல்கள் உள்ளன. வசந்தன் ஆடல், பாடல், தாளம் (இசை) ஆகியன கொண்டதாகக் அமைந்திருந்தது. வசந்தன் ஆடலின்போது மத்தனம், சல்ல்லாரி ஆகிய பக்க வாத்தியங்களும் இசைக்கப்படும். வசந்தன் ஆட்டத்தின்போது அண்ணாவியார், ஆட்டக்காரர்கள், பக்கப்பாட்டுப் பாடுவோர், சல்லாரி தட்டுவோ் பிரதானமானவர்களாகக் காணப்படுவார்கள். மட்டக்களப்பில் ஆடப்படும் வசந்தனில் பத்து அல்லத பன்னிரெண்டு வயதுடைய ஆண் சிறுவர்களை மாத்திரமே பய்படுத்துவார்கள். ஆறு, எட்டு, பத்து, பன்னிரெண்டு, பதினான்கு, பதினாறு வரையான சிறுவர்கள் ஆட்டத்தில் பங்கு கொள்வார்கள், ஒரு முளம் நீளமான தடிகளை இவ்விரு கைளிலும் கொண்டு சோடி சோடியாக வட்டமாக நின்று பாடல், தாளம் என்பவற்றுக்கு அமைவாக ஆடுவார்கள். வசந்தன், கோலாட்டம் போன்றவற்றில் தென்மோடி நாட்டுக் கூத்தின் ஆட்டமுறையிலான சாயல் கலந்திருக்கும்.
வசந்தன் ஆட்டமும் கோலாட்டமும் பாட்டுத் தாளம், ஓசை, ஆட்டம் என்பவற்றில் ஒன்று போலவே காணப்படும். இரண்டிலும் பயன்படுத்தும் தடி மாத்திரம் சிறிது அளவு வித்தியாசம் கொதண்டதாக காணப்படும். வசந்தன் பாடல்கள் யாரால், எப்போது பாடப்பட்டன என்பதற்குப் போதிய சான்றாதாரங்கள் எதுவும் இதவரை கிடைக்கப் பெறவில்லை. செவிவழியாகவும், ஏட்டுப் பிரதிகளிலும், கையெழுத்துக் கொப்பிகளிலும் இருந்த பாடல்கள் முடிந்தவரை நூல்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. செவிவழியாகவும் ஏட்டுவடிவிலும் இருந்த பெரும்பாலான பாடல்கள் செல்லரித்தும் அவர்களோடும் மறைந்து பொய்விட்டன. அவை இனிமேலும் கிடைக்குமா என்பது கேள்விக் குறிதான். இன்னும் சில பாடல்கள் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் முதியோர்களிடம் இருக்கின்றன.

அவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்தெடுப்பது முன்னோர்களுக்கும் நமது தமிழ் பாரம்பரியத்துக்கும் செய்யும் அரிய பணியாகும்.
இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட தென்பகுதிப் பாடசாலைகள் பரிசோதகராக இருந்த யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.தி.சாதாசிவ ஐயர் அவர்கள் 1940 ஆம் ஆண்டு முதன் முதலாக ‘மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு’ என்றொரு நூலைத் தொகுத்திருந்தார். ஆங்கில மொழியில் கற்று. காலணித்துவ கால அரச தொழிலில் பணியாற்றி, காலையில் இருந்து மாலை வரை ஆங்கிலத்தையே பேசிப் பழக்கப்பட்ட ஒருவரால் தமிழ் மொழியில் இந்நூல் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்நூலை மட்டக்களப்பு தெற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் (1940) வெளியிட்டிருந்தது. 1963 க்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக எல்லை வெருகல் மன்னம்பிட்டி முதல் குமுக்கன் ஆறவரை பரந்திருந்தது. மட்டக்களப்புக்குத் தென்பாலுள்ள காரைதீவு முதல் தம்பிலுவில வரை உள்ள கிராமங்களில் ஆடப்பட்டுவந்த வசந்தன் கூத்துக்களின் பாடல்களைச் (வாய்மொழி, ஏட்டுச் சுவடிகள், கொப்பிகள்) செவ்வை பார்த்து யாழ்ப்பாணம் சுண்ணாகம் திருமகள் அச்சகத்தில பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றார். பல சிரமங்கள், வேலைப்பழுக்களுக்கு மத்தியில் இற்றைக்கு 85 வருடங்களுக்கு முன்னர் தொகுத்து வெளியிட்டிருப்பது வியக்கத்தக்கது.
வசந்தன் பாடல்களைத் (வாய்மொழி, ஏட்டுச் சுவடி, கொப்பிகள்) தொகுத்தெடுத்து, பாடல்களை ஒப்பு நோக்கி, சரவை பார்த்து தமிழிலும் ஆங்கிலத்திலும் தனது நீண்டதொரு முன்னுரையோடு பதிப்பித்து வெளியிட்டிருப்பது மிகப் பெரிய காரியமாகும். இந்நூலுக்குப் பதிப்புரையினையும் முகவுரையினையும் மட்டக்களப்பு தெற்கு தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவரும் அட்டப்பள்ளத்ரதப் பிறப்பிடமாக் கொண்டவரும் பல ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்துத் தொகுத்துப் பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவருமாகிய முன்னாள் அதிபர் இ.கணபதிப்பிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு கட்டியம், தோத்திரம், சரித்திரம், தொழில், வேடிக்கை, விளையட்டு ஆகிய ஆறு பாகங்களைக் கொண்டு அதற்குள் 62 பாடல்களை உள்ளடக்கியதாகத் தொகுக்கப்பட்டுள்ளது. வசந்தன் ஆடப்படும் முறை, பாடல்கள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் ‘நாட்டார் கலை மரபில் வசந்தன் கூத்து ஓர் ஆய்வு’ (சிந்தனை, 1985) என்ற கட்டுரையில் பின்வருமாறு வகைப்படுத்தி இருக்கின்றார்.
1. வசந்தராசன் கொலு.
2. வழிபாட்டுடன் தொடர்புடைய வந்தன் கூத்துக்கள்.
3. வரலாறு சார்ந்த வசந்தன் கூத்துக்கள்.
4. தொழில்முறை சார்ந்த வசந்தன் கூத்துக்கள்.
5. நகைச்சுவை சார்ந்த வசந்தன் கூத்துக்கள்.
6. கதை கூறும் வசந்தன் கூத்துக்கள்.
7. விளையாட்டுச் சார்ந்த வசந்தன் கூத்துக்கள்.
மக்களின் வாழ்வியல் அம்சங்களொடு தொடர்புபட்ட பாடல்களை உள்ளடக்கிய மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு 2018 இல் கணிணகி கலை இலக்கியக் கூடல் மற்றும் 2022 இல் குமரன் அச்சகத்தினராலும் மீளபதிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது.
இத்தொகுப்பில் தற்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்டுதொட்டு ஆடப்பட்டுவந்த வசந்தன் பாடல்கள் எதுவும் சேர்க்கப்படசில்லை. களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், படுவான்கரைப் பிரதேசம், வாழைச்சேனை ஆகியு இடங்களில் ஆடப்பட்டுவந்த நூற்றுக் கணக்கான வசந்தன் பாடல்கள் வாய்மொழி, ஏட்டுப் பிரதிகள், கையால் எழுதப்பட்ட கொப்பிகளில் பேனப்பட்டு வந்தன. அவற்றுள் பல உரியவர்கள் இறந்தபோது அவர்களோடு நேர்த்து மறைந்துவிட்டன.
வசந்தன் கவித் திரட்டில் (பக் 33) 16 வது பாடல் மாத்திரம் செட்டிபாளையம் கண்ணகி அம்மனைப் பாடும் பாடலாக அமைந்திருக்கின்றது. பல பாடல்கள் முறையாக ஒப்பு நொக்கப்படாமையால் பல இடங்களில் இரட்டித்தும் வந்திருக்கின்றன. மேலும் பல பாடல்கள் நாலடிச் சீரில் தொகுக்கப்பட்டிருப்பது ஆட்டத்தின்போது இராகம், தாள முறிவை ஏற்படுத்துவனவாக அமைந்து விடுகின்றன. இன்னும் சில பாடல்களில் இடைச் செருகல்கள் காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. இருந்தும் 1940 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி தமிழ் கூறும் நல்லுலகுக்கு செய்த அரும்பெரும் பணியாகும்.
தாந்தியன் சிதம்பரப்பிள்ளை 85 வருடங்களின் பின்னர் தொகுத்திருக்கும் வாழும் வசந்தன் தொகுப்பு நூல் மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டில் உள்ள பல குறைகளை நிவர்த்தி செய்வதாக அமைகின்றது. 167 பக்கங்களைக் கொண்ட இந்நூல் வசந்தம் ஆடல்கலையைப் பிரதிபலிக்கும் அழகான அட்டைப்படத்துடன் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு காந்தள் அச்சகத்தினரின் அச்சுப் பதிப்பில் வெளிவந்திருக்கிறது. வசந்தன் கூத்து மட்டக்களப்பு மக்களின் மக்கள் மத்தியில் நீடித்து நிலைத்து வாழ வேண்டிய கலை, கலாசார விழுமியம் என்பதனால் இந்நூலுக்கு ‘வாழும் வசந்தன்’ எனப் பெயரிட்டிருக்கிறார் போலும். பேராசிரியர் சு.சிவரெத்தினம், திரு.செ.எதிர்மன்னசிங்கம் ஆகியோர் மிகச் சிறப்பான வாழத்துச் செய்திகளையும், பேராசிரியர் முனைவர் இ.பாலசுந்தரம் (சிந்தனை, 1985) அவர்களின் நீண்டதொரு ஆய்வுக் கட்டுரை ஒன்றும், திரு.அழகு.குணசீலன், திரு. சி.வரதசீலன், திரு.பா.நல்லதம்பி, திரு.வ.துஷாந்தன் ஆகியோரின் கட்டுரைகளையும் தொகுப்பாசிரியர் உரையினையுடன் வசந்தன் கூத்தினை முனைக்காடு கிராமத்தில் வாழ வைத்த பெருந்தகைகளின் புகைப்படங்களும், பல்வகைப்பட்ட கருப்பொருள்களை மையப்படுத்திய 50 வசந்தன் பாடல்களையும் உள்ளடக்கியதாக வாழும் வசந்தன் தொகுப்பு நூல் வெளிவந்திருக்கிறது.
இந்நூல் தொகுக்கப்பட்ட பின்னரே இதற்கு முன்னர் தி.சதாசிவ ஐயர் அவர்களால் மட்டக்களப்பு வசந்தன் கவித் திரட்டு என்றொரு நூலும் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பதும் பலருக்குத் தெரியவந்தது. திரு.தாந்தியன் சிதம்பரப்பிள்ளை 10 வயதாக இருக்கும்போது பல வசந்தன் கூத்துக்களை ஆடிய அனுபவமும், முனைக்காடு கலைக்கதிர் கலாமன்றத்தில் தலைவராக இருந்தபோது பல வசந்தன் கூத்துக்களைத் தயாரித்து மேடையேற்றிய அனுபவமும் அதன்மீது கொண்ட பற்றுதலும் இந்நூலைத் தொகுக்கும் ஆர்வத்தைத் தூண்டியிருக்க வேண்டும். அவுஸ்திரேலியாவில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து சென்ற போதெல்லாம் வசந்தன் பாடல்கள் அடங்கிய கையெழுத்துப் பிரதிகள், ஏடுகள், கொப்பிகள் என்பவற்றை உரியவர்களைச் சந்தித்து எடுத்துச் சென்றதாகக் கூறியிருக்கின்றார். அத்தோடு மூலப் பிரதிகளுடன் ஒப்பு நொக்கி, பாட பேதங்கள் அற்றவகையில் ஒப்பிட்டுப் பலமுறை செவ்வை பார்த்தும் சம்பந்தப்பட்ட பலருடன் கலந்துரையாடித் தகவல்களைப் பெற்றுக் கொண்டு தொகுத்ததாகவும் கூறினார். இது சம்பந்தமான விளக்கங்கள் பலவற்றை அவருடைய தொகுப்புரையில் காணலாம்.
பொருள், ஓசை, தாளம், தாளக்கட்டு, ஆட்டம் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சந்தம், பாடல் அடி, சீர் என்பவற்றில் கவனம் செலுத்திப் பெரும்பாலும் இரண்டு அடிகள் கொண்டதாகப் பாடல்களை வரிசைப்படுத்திக் கவனமாகத் தொகுத்திருக்கிறார். பாடலின் சீரும் அடியும் நீண்டு சென்றால் ஓசை முறிவுகள் ஏற்பட்டு தாளம், தாளக்கட்டு, ஆட்டம் என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதற்காக இவற்றில் அதிகூடிய கவனம் செலுத்தி இருக்கின்றார். இருந்தும் மூலப்பிரதிகள் கிடைக்காத ஒரு சில பாடல்களில் தாளத்துக்கும் தரு, விருத்தம் என்பவற்றில் சந்த ஓசையில் தொடர்பின்றி இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
வசந்தன் கவித்திரட்டில் உள்ளடக்கப்படாத 36 பாடல்கள் வாழும் வசந்தன் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வசந்தன் பாடல்கள் பலரிடம் உறங்கிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றையும் தொகுத்து ஆவணப்படுத்துவதில் கவணம் செலுத்த வேண்டும். அதேபோல் கோலாட்டம், கும்மி, கரகம், கூத்துக்கள், நமது பாரம்பரிய மந்திரங்கள், நாட்டு வைத்திய ஏடுகள், பத்ததிகள் என்பவற்றையும் தனவந்தர்கள், மட்டக்களப்பிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் அவற்றைத் தொகுத்து வெளியிடுவதற்கு முன்வர வேண்டும். இது செய்யாதவிடத்துப் பலரிடம் இருக்கும் பல ஏட்டுப் பிரதிகளும் கையெழுத்துக் கொப்பிகளும் அழிந்து போய்விடும். நூலொன்றை ஆக்குவதற்கான ஆக்கச் செலவுகள் அதிகரித்துள்ளமையால் நூலை வெளியிடுவது சாதாரண மக்களால் முடியாத காரியமாகிவிட்டது. அதனால் பல கையெழுத்துப் பிரதிகள் அவர்களோடு உறங்கிக் கிடக்கின்றன.
பல வசந்தன் பாடல்கள் மூல ஏட்டுப் பிரதிகளில் இருந்து கையெழுத்துப் பிரதிகளாக மாறியபோது அதனை எழுதியவர்கள் தமது வித்துவத் திறமை, இடம். பொருள், தல முக்கியத்துவம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு பல இடைச் செருகல்களைச் சேர்த்திருக்கின்றனர். அவற்றுள் சிலவற்றை இரண்டு நுர்ல்களையும் ஒப்பு நோக்கிப் பார்க்கும்போது அறிந்து கொள்ளலாம். இவை போன்ற காரணிகள் மட்டக்களப்பு வசந்தன் கவித் திரட்டில் கூறியது கூறலாக இரட்டித்து இடம் பெற்றிருந்தமைக்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.
வாழும் வசந்தன் நூல் தொகுப்பாசிரியர் வசந்தன் கூத்துக் கலை மட்டக்களப்பு மக்களிடம் அழியாது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே பல இலச்சங்கள் செலவிட்டு இந்நுஸலை வெளியிட்டிருக்கின்றார். அவரின் எண்ணமும் நோக்கமும் நிறைவேற வேண்டும். அதேபொல் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்காலத்தில் முனைக்காடு, மகிழடித்தீவு, தேற்றாத்தீவு, களுதாவளை, வாழைச்சேனை ஆகிய இடங்களில் ஆடப்பட்டு வரும் இவ்வசந்தன் கூத்துக்களை ஏனைய இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். நமது கலை, பண்பாட்டுப் பாரம்பரிளற்களை மறப்பதும் புறக்கணிப்பதும் தமிழரின் பாரம்பரிய முதுசங்களையும் இருப்பையும் இழந்தமைக்குச் சமமாகிவிடும்.
தற்போதைய அதிகரித்த திறன்பேசிப் பாவனையும், சமூக வலைத்தளங்களின் பெருக்கமும் செயற்கை நுண்ணறிவுத் தொழினுட்பமும் நமது கலை, கலாசார, பாரம்பரிய விழுமியங்களை, வாழ்வியல் அம்சங்களை நம்மிடம் விழிப்பு இல்லாத போது வெகு விரைவில் சிதைத்து அழித்துவிடும். அதனால் கூட்டு முயற்சியோடு நமது பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பாதுகாக்க முன்வரவேண்டும். அதுவே, நமது சமூகத்துக்கும், தமிழ் மொழிக்கும் செய்யும் மிகப் பெரிய கைங்கரியமாகும்.
நூல்களை எழுதி வெளியிடுபவர்களும், தொகுத்து வெளியிடுபவர்களும் எழுத்து அளவுத் திட்டங்கள், நூலின் வடிவமைப்பு, பந்தியமைப்பு, நூலின் அளவுத் திட்டம், தலைப்புகள், படங்களை உள்ளிடல், ஒப்பு நொக்கல், சரவை பார்த்தல், தகவல்கள் தரவுகளை உறுதிப்படுத்தல், அட்டைப்படம் என்பவற்றில் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும். ஏனெனில் நமதும் பலரது உழைப்பும், பெருந்தொகைப் பணச் செலவும், காலமும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இருந்தபேபாதும் வாழும் வசந்தன் நூலைத் தொகுத்த தாந்தியன் சிதம்பரப்பிள்ளை இவற்றில் கூடுதல் கவனமெடுத்துத் தொகுத்திருப்பது பாராட்டத்தக்கது. ஒரு சில தவறுகள் இருந்தாலும் அவற்றைத் தவறுகளாகக் கொள்ளாது அவரின் முயற்நிக்கு மதிப்பளித்துப் பேணிப் பாதுகாப்பதோடு நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வாழும் கலையாக வாழ வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
![]()