இலங்கை

விளக்கமறியலில் இருந்து நீதிமன்றுக்கு இன்று ரணில் வருவாரா?

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டியுள்ள போதும், அவரின் உடல்நிலையை கருத்திற்கொண்டு அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சிரமமாக இருக்கும் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க மருத்துவ கண்காணிப்பில் மூன்று தினங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படாமல் இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தனது பாரியாரான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் வெள்ளிக்கிழமை பிற்பகல் அவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை இன்று 26ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க நீதவானால் உத்தரவிடப்பட்டது.

இதன்படி அன்றைய தினம் நள்ளிரவில் கொழும்பு மெகசின் விளக்கமறியல் சிறைக்கு ரணில் விக்கிரமசிங்க அழைத்துச் செல்லப்பட்டதுடன், அதன்போது அவருக்கு ஏற்பட்ட சுகயீன நிலைமையால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

நீர்சத்து குறைப்பாட்டால் ரணில் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு வேறு பல நோய் அறிகுறிகள் காணப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலைமயை கருத்திற்கொண்டு அவர் சில தினங்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், இல்லையேல் நோய் நிலைமை அதிகரிக்கலாம் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இவ்வாறான நிலைமையில் ரணில் விக்கிரமசிங்கவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படலாம் என்றும், இதனால் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *