கட்டுரைகள்

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகிறாரா விஜய்?…  நியூசிலாந்து சிற்சபேசன்

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல், 2026ம் ஆண்டின் நடுப்பகுதியில் எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால், தேர்தல் முஸ்தீபுகள் ஆரம்பமாகிவிட்டன.

ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள்நலத் திட்டங்களை வேகப்படுத்துகின்றது. பிரதமர் மோடி தமிழக மக்களின் மனங்களில் சிம்மாசனத்தைத் தேடத்தொடங்கிவிட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு அணிகள், பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை கூட்டணிக் கனவுகளுடன் வலம்வருகின்றன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கப்போவதான பிரமையை ஏற்படுத்துகின்றது.

பொதுவாக, தமிழக அரசியலில் இரண்டு பலமான தரப்புக்கள் காணப்படுவதுண்டு.

தேசியக் கட்சியான காங்கிரசும், மறுவளத்தில் நீதிக்கட்சியும் என இரண்டு வலுவான தரப்புக்கள், 20ம் நூற்றாண்டின் ஆரம்பங்களிலே, காணப்பட்டன. 1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தபோது, தேசியக் கட்சியான காங்கிரஸ் வலுவிழக்க ஆரம்பித்தது. அதன்பின்னரான ஒரு தசாப்தத்திலே, இரண்டாவது பெரிய கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ச்சியடைந்தது. 1977ல் எம்ஜிஆர் முதலமைச்சரானார். 1987ல் மறைந்தார். 1991ல் ஜெயலலிதா முதலமைச்சரானார். 2016ல் ஜெயலிதாவும், 2018ல் கலைஞரும் மறைந்தனர்.

Actor Vijay's Sunday splash: Will 'Thalapathy' disrupt bipolar politics of  Tamil Nadu? | Mint

எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா காலகட்டங்களிலே இரண்டு பலமான அணிகள் காணப்பட்டன. எம்ஜிஆர் – ஜெயலிலதாவுக்குப் பின்னர் தெளிவான தலைமை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்படவில்லை. அதேசமயத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் வலுவாகக் காணப்படுகின்றது.

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமல்லவா. ஆனால், தமிழக அரசியலில் வலுவான எதிர்த்தரப்பைக் காணமுடியவில்லை.

அண்ணா திமுக ஏற்படுத்திய வெற்றிடத்தையே மோடி இலக்கு வைக்கின்றார். அதுவே நடிகர் விஜய்யின் இலக்கு என்றும் சொல்லலாம்.

தேர்தல் வரும்போதெல்லாம், தமிழ்ச் சொந்தங்களைத் தேடி மோடி ஓடோடி வருகின்றார். தமிழின் அருமை பெருமைகளைச் சொல்கின்றார். தமிழரின் வரலாற்றைப் பேசுகின்றார். ஆனாலும், மோடி மந்திரம் பலிக்குதில்லை. 2024 பாராளுமன்றத் தேர்தலிலே, ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியவில்லை.

தமிழ்நாடு எப்போதுமே தனித்துவமானது.

ஒருகாலத்தில், காங்கிரஸ் கட்சியே இந்தியாவெங்கும் கோலோச்சியது. அப்போதுகூட, தென்னிந்தியா தனித்து – விழித்து – துணிந்து செயற்பட்டது. சென்னை மாகாணத்திலே, நீதிக்கட்சியே வலுவானதாகக் காணப்பட்டது. அதனுடைய தொடர்ச்சியே திராவிட அரசியலாகும்.

ஆக, வடநாட்டின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான ஒற்றைப்புள்ளியில், காலாதிகாலமாகவே, தென்நாடு ஒன்றுகூடுகின்றது. அதுவே அரசியலின் மையவிசையாகும். அதற்கே மதச்சார்பின்மை, சமூகநீதி போன்ற சித்தாந்தமூலம் பூசப்படுகின்றது. அதனை பாமரமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கே பெரியார் – அம்பேத்கார் வழித்துணையாகின்றனர்.

எம்.ஜி.ஆர் - கருணாநிதி - ஜெயலலிதா மூவரும் ஒரே விழாவில்!.. எப்போது நடந்தது  தெரியுமா?..

இத்தகைய பண்புகளைக் கொண்ட திராவிடக் கூடாரத்திலே, நுழைய முற்படுகின்ற தரப்பாகவே, நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகத்தையும் கருத முடிகின்றது.

தமிழக வெற்றிக் கழகம், 2024 பிப்ரவரி 2ல் பூர்வாங்கமாக ஆரம்பமாகியது. சினிமாவில் வாய்ப்புத் தேடி, எழும்பூர் ரயில் நிலையத்தில், தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்துசேர்கின்றனர். பலர், சினிமாவிலே சேர்ந்துவிடுகின்றனர். சிலர், உச்சமும் தொட்டுவிடுகின்றனர். அதன்பின்னர், முதலமைச்சராக விரும்புகின்றனர். அதற்கு எம்ஜிஆரே வழிகாட்டியாகும். எம்ஜிஆரைப் பார்த்து அரசியலுக்கு வந்தோரின் வரிசை நீளமானது. அதிலே நடிகர் விஜய் லேட்டஸ்ட்.

சுமார் 85,000 வரையான ரசிகர் மன்றங்களையும், அவை ஒவ்வொன்றிலும் ஆகக்குறைந்தது 25வரையான உறுப்பினர்களையும் நடிகர் விஜய் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அத்தகையவொரு மக்கள் பலத்தின் அடிப்படையிலே ஆரம்பிக்கப்பட்டதே தமிழக வெற்றிக் கழகமாகும்.

கொள்கை ரீதியாக, திராவிடக் கட்சிகளின் நிலைப்பாட்டையே நடிகர் விஜய் வரித்துக்கொள்வதாகவே கருதமுடிகின்றது. பெரியார் ஈவே இராமசாமி நாயக்கரின் ஜனன தினத்திலே, சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில், நடிகர் விஜய், மலரஞ்சலி செலுத்தியமையைக்கூட ஒரு சமிக்ஞையாகவே கருதலாம்.

Vijay's Political Entry: Can 'Thalapathy' Make an Impact on Tamil Nadu  Politics?

வட தமிழ்நாட்டின் விக்கிரவாண்டியிலே, 2024 அக்டோபரிலே, விஜய்யினுடைய முதலாவது கட்சி மகாநாடு நடைபெற்றது. அதிலே, எட்டு இலட்சம் வரையானவர்கள் கலந்துகொண்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆகஸ்ட்டில் மற்றுமொரு மகாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. அதனூடாக, தென் தமிழ்நாட்டிலுள்ள ஆதரவைக் காண்பிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

எதுஎப்படியாகிலும், 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திலே திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி தெளிவான முன்னிலையில் காணப்படுகின்றது. நடிகர் விஜய் தரப்பு, வாக்கு சதவிகித எண்ணிகையில் கவனிக்கப்படுகின்ற தரப்பாகலாம். ஆனால், சதவிகித எண்ணிக்கை என்பதனை, வெற்றிபெறுகின்ற தொகுதிகளின் எண்ணிக்கையாக மாற்ற முடியுமா என்பதே மிகப்பெரிய கேள்வியாகும்.

ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்வதெனில், இரண்டு திராவிடக் கட்சிகளுமே ஓரளவு சமமான வாக்குப் பலத்தை இதுகாறும் கொண்டிருந்தன.

MGR to Vijay: Tamil actors who took the political plunge - The Hindu

2021 சட்டமன்றத் தேர்தலிலே, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 37 சதவிகித வாக்குகளும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 33 சதவிகித வாக்குகளும் கிடைத்தன.

அதுவே தொகுதி எண்ணிக்கை என்னும்போது, திமுகவுக்கு 133 தொகுதிகள் கிடைத்தன. ஆனால், அண்ணா திமுகவிற்கு 66 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.

இன்னுமொருவளமாகச் சொன்னால், அண்ணளவாக 1சதவிகித வாக்குகளை 2021 சட்டமன்றத் தேர்தலிலே இடதுசாரிகள் பெற்றன. தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றன. அதேசமயத்தில், 6 சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சியினால் ஒரு தொகுதியிலே கூட வெற்றிபெற முடியவில்லை.

ஆக, வாக்கு சதவிகிதத்தை அதிகரிப்பதென்பது இந்திய தேர்தல் முறையில், உடனடி, பெறுமதியற்றதாகும். எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றமுடியும் என்பதே வெற்றியைத் தீர்மானிக்க அவசியமாகும்.

அந்தவகையிலே, தமிழக அரசியலிலே கவனிக்கப்படக்கூடிய தரப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலிலே, நடிகர் விஜய் வரலாம். ஆனால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்பதெல்லாம் அதீதமான கற்பனையாகும்.

Loading

One Comment

  1. “முதலமைச்சராகிறாரா ?”. முதலாவது, இந்த வார்த்தையை எழுத்துப்பிழை இல்லாமல் சரியாக பெற்றதற்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தமிழ் எழுதுவதை நிறுத்தி நீண்ட இடைவெளி இருந்தாலும், இப்போதும் எழுத்துப்பிழையின்றி என்னால் எழுத முடிவதால், தமிழ் வார்த்தைகள் எழுத்துப் பிழைகள் இல்லாமல் சரளமாக எழுதப்படுவதை கவனித்து ரசிக்கிறேன். அதே நேரத்தில் உங்கள் கட்டுரைகளிலிருந்து சில புதிய வார்த்தைகளையும் கற்றுக்கொள்கிறேன்.

    “பிரதமர் தேடத் தொடங்கிவிட்டார்”- பிரதமர் மீண்டும் தமிழ்நாட்டைத் தேடத் தொடங்கிவிட்டார். கடைசி முறையும், அதற்கு முந்தைய முறையும் அவர் அதையே செய்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் அதைத் தேடிக்கொண்டே இருப்பார். இது வேடிக்கை கலந்த உண்மை.

    “அதீதமான கற்பனையாகும்” நீங்கள் உங்கள் கட்டுரையில் இங்கே கூறியது போல், உண்மையில் இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு ஊடகப் பிரச்சாரம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *