இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 19 ….. சங்கர சுப்பிரமணியன்


நம் மொழியைக் காக்க ஒவ்வொருவரும் முயற்சி எடுக்கவேண்டும். நம் மொழியைப் பாதுகாக்கும் நோக்கமுடைய அரசு நமக்கு வேண்டும். வேலியே பயிரை மேயும்படியான தமிழ் மொழியை பாதுகாக்க தவறும் அரசு ஆட்சி செய்தால் விளைவு சாதகமாக இருக்காது. அரசில் அந்த மொழிசார்ந்த மக்கள் இருந்தாலும் அம்மக்கள் மொழிமீது மதிப்பும் மரியாதையும் வைக்காமல் அதை காக்க தவறினாலும் எந்த மொழியும் அழிவதைத் தடுக்க முடியாது.
நமக்கெல்லாம் உணவளித்து கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் புல்லுணவே தந்து போற்றும் தயாளன் எப்படி திரைமறைவில் சாப்பிடுவார் என்று திசைமாறிச் சென்றுவிட்ட இடத்திற்கே திரும்பவும் வருவோம்.
பெற்றோர்களே மறைத்து செய்ய விரும்பாத ஒன்றை கடவுள் எப்படிச் செய்வார்? அல்லது அவர் யார் கனவிலாவது வந்து இப்படியெல்லாம் செய்யவேண்டும் என்று சொல்லியிருப்பாரா? அல்லது ஏதாவது நூலில் கடவுள் தன் விருப்பமாக இவற்றை எல்லாம் செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறரா?
ஏனென்றால் பாவம் செய்தவர்களுக்கு நரகம் என்றும் அங்கே பாவத்திற்கு ஏற்ப எண்ணைய் கொப்பரைகள் எருமை மாடுகள் அட்டைப் பூச்சிகள் இவை போன்றவற்றின் மூலம் தண்டனை வழங்கப்படும் என்று கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. புண்ணியம் செய்தவர்களுக்கு ஏழு நட்சத்திர வசதிகளுடன் சொர்க்கம் கிடைக்கிறது.
சொர்க்கத்திலும் தேவர்களுடன் பிரச்சினை இல்லாமல் இருந்தால் சிறப்பு சலுகையாக தேவகன்னிகைகளுடன் கைகோர்த்து டூயட் ஆடும் வாய்ப்பு கிடைக்கும். காரணம் ஒன்றிரண்டு பேர்களை சமாளிப்பதே காரணம். அதிலும் தேவர்கள் நல்லவர்கள். ஆனாலும் முப்பது முக்கோடி தேவர்களையும் சமாளிக்க வேண்டுமே.
அப்படி சமாளிக்கும் பட்சத்தில் தேவகன்னிகைகளுடன் டூயட் பாடும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமா என்ன? இப்போது ஒரு சந்தேகம். தண்டனை வழங்கும் புராணத்தில் சொர்க்கத்தைப் பற்றியும் அதில் கிடைக்கும் அற்புதமான சலுகைகள் பற்றியும் விவரமாக உள்ளதா? என்பது தெரியவில்லை.
இயக்குனர் சங்கர் மூலம் பாவத்தின் சம்பளத்துக்கான விபரங்களை புராணத்தில் சொல்லப்பட்டிருப்பதாக அறிந்தேன். ஆனால் சொர்க்கத்தைப் பற்றி விபரங்கள் அடங்கிய நூல் வேறு ஏதாவது உள்ளதா என்று தலைமயிரைப் பிய்த்துக் கொண்டிருந்த வேளை மாடசாமி அண்ணாச்சி வேறு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.
அந்த குண்டு பெரிய குண்டுதான். தேவர்கள் நல்லவர்கள் என்றாலும் தேவர்களின் தலைவன் தேவேந்திரன் இருக்கிறாரே அவர் எளிதில் தேவகன்னிகைகளை நெருங்க விட்டுவிடுவாரா என்கிறார். முனிவரின் மனைவியையே விடாதவர் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் தேவகன்னிகளை டூயட் ஆட விட்டுக்கொடுப்பாரா என்பதே அவர் சந்தேகம்.
அவர் சொல்வதும் சரிதான். தியாகராஜ பாகவதர் காலத்தைப் போல ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் நின்று பிரானநாதா சுகியே என்று ஆடிவிட்டுப் போவதாயிருந்தால் பரவாயில்லை. தேவேந்திரனே வானத்தில் இருந்து உலகு முழுக்க நடைபெறுவதை பார்க்கக் கூடியவர். அவர் எம். ஜி. ஆர் ஆடிய டூயட் ஆட்டத்தை பார்த்திருக்க மாட்டாரா என்ன?
ஆதலால் சொர்க்கத்திலும் சில வரைமுறைகள் இருக்கும். ஆக, சொர்க்கத்தில் எல்லாம் கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.
ஆனால் கடவுளுக்கும் மேலான கடவுளரை மறந்துவிட்டோம். அவர்கள் வேறு யாருமல்ல அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென்று நாம் முதலில் அறிந்த பெற்றோர்களே. அவர்கள் மேலும் நமக்கு பேரன்பும் பக்தியும் இருக்கிறது.
என்னது பெற்றோர்கள் மேல் பக்தியா? கடவுளிடம் தானே பக்தி காட்ட முடியும் என்று திகைக்க வேண்டாம். ஏனென்றால் குருபக்தி, ராஜபக்தி, பதிபக்தி என்றெல்லாம் இருக்கும் போது முன்னறி தெய்வங்களான பெற்றோர் மீதும் பக்தி இருக்கவேண்டும் அல்லவா? ஆனால் இந்த பக்தி விடயத்தில் நாம் மாற்றாந்தாய் மனப்பான்மை உடையவராக இருக்கிறோம்.
ஆம். கடவுளிடம் பக்தி காட்டும் அளவுக்கு குருவிடமோ அல்லது பெற்றோரிடமோ பக்தியைக் காட்டியிருக்கிறோமா? இல்லவே இல்லை. குருவுக்கோ பெற்றோருக்கோ அபிசேகம் செய்து பார்த்திருக்கிறோமா? சரி அவர்கள் வெட்கப்படுவார்கள், கடவுளரைப் போல் வெட்கப்படாமல் இருக்கமாட்டார்கள். அதனால் அபிசேகப் பொருட்களையாவது வாங்கிக் கொடுத்து குளிக்கச் சொல்லியிருக்கிறோமா?
சிலருக்கு கடவுளை எங்கே வைப்பது என்பதில் ஒரு பிரச்சினை. மாடி வீடென்றால் கீழே வைக்கலாமா? அல்லது மேலே வைக்கலாமா? கீழே வைத்தால் கீழே சாமியிருக்க மேலே நாம் சாமி தலை மேலே படுத்து தூங்குவது சரியா?
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அபார்ட்மெண்ட்டில் இருந்தால் கடவுளை எங்கே வைப்பார்கள். கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். அவர் இருப்பிடத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார். ஆனால் சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரங்கொடுக்காத மாதிரி அவரே சும்மா இருந்தாலும் மக்கள் கடவுளை எங்கு வைப்பது என்பதற்காக சிரமப்படுகிறார்கள்.
இப்போது தான் எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது. கீழப்பாவூரில் இருக்கும் எங்கள் குலதெய்வம் சுடலைமாடன் பேராசை இல்லாதவர். ஒரு கட்டிடமோ சுற்றுச் சுவரோ சீரான தரையோ இல்லாமல் பாவம்போல் இருந்தார். எனது உறவினர்கள் நீ வெளிநாட்டில் வசதியாகத்தானே இருக்கிறாய் சுடலைமாடனை யாரும் கண்டு கொள்ளாமல் அங்கே குப்பை கூளத்தை எல்லாம் கொட்டுகிறார்கள். நீ ஒரு சுற்றுச்சுவர் எடுத்துக் கொடுத்தால் நல்லது என்று கேட்டனர்.
நானோ கடவுள் தலையில் ஊற்றும் பாலை ஏழைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாமே
என்ற எண்ணமுடையவன். ஆனால் குலத்தின் முன்னோராய் இருந்த வாழ்ந்து மடிந்தவருக்காக சமாதி கட்டி குருபூஜை எல்லாம் செய்வதை எண்ணிப்பாரத்தேன். என் தந்தைக்கு சமாதி கட்டி இருந்தால் என் பின்னோர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருவார்கள்.
அதுபோல் எங்கள் முன்னோர்களில் எவரே தன் தந்தைக்கு நட்டுவைத்த நடுகல் வழிபாட்டு முறையின் எச்சமாக சுடலைமாடன் இருக்கிறார். அவர் இருக்கும் இடம் குப்பை மேடாக ஆகாதிருக்க சுற்றுச்சுவரைக் கட்டி கேட்டும் போட்டுக் கொடுத்தேன். இன்னொரு உறவினர் தரையில் சிமிண்ட் தளம் போட்டார். இப்போது பத்திரமாக குப்பை கூளங்களில் இருந்து விடுபட்டிருக்கிறார் சுடலைமாடன்.
(தொடரும்….)
![]()