இலக்கியச்சோலை

சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேச வைக்கும் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் எழுத்துப் பணி !…. லெ.முருகபூபதி

(சமகால சர்வதேச விவகாரங்களை அலசி ஆராய்ந்து எழுதும் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் அகவை நாளான ஜூலை 2 இல் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் லெ. முருகபூபதி எழுதிய இக்கட்டுரை பிரசுரமாகிறது)

சிறுவர் இலக்கியங்கள் தொடர்பான ஆய்வாளராக 1989 ஆம் ஆண்டில் எழுத்துலகப் பிரவேசம் செய்திருக்கும் ஐங்கரன் விக்கினேஸ்வரா, சமகாலத்தில், அனைத்துலக அரசியல் நிலைவரங்களை கவனித்து, உடனுக்குடன் அவை பற்றியும் ஆழமாக எழுதும் சர்வதேச அரசியல் விவகார ஆய்வாளராக மாறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் ஐங்கரன் கவிதைத் துறையிலும் ஈடுபாடு காண்பித்தவர். அத்துடன் கட்டுரைகளும் எழுதிவந்திருப்பவர்.

இதுவரையில் பன்னிரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். அவை பின்வருமாறு: அணையாத அறிவாலயம், விடியலின் கானம், இன்னும் இருட்டினில், உறக்கம் தேடும் உலகிற்காய், வெண்பனிச் சுவடுகள், காற்றோடு பேசுதல், அக்கினிப் பிரவேசம், உள்மன யாத்திரை. உனக்குள்ளேயே உள்ளிருப்பு, இழப்புக்களை இழப்போம், கல்லறைக்குள் கதிரவன் ஆகிய ஹைக்கூ கவிதைத் தொகுதிகளையும் படைத்துள்ளார்.

அத்துடன் சக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எட்டு இளம் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்ற “கல்லறை மேலான காற்று “ எனும் கவிதைத் தொகுதியினை 1988இல் தொகுத்தளித்தவரும் இவரே.

இதுதவிர, அற்பாயுளில் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட செல்வன் அகிலன் திருச்செல்வத்தின் கவிதைளைத் தொகுத்து “மரணம் வாழ்வின் முடிவல்ல” என்ற நூலையும் 1990இல் வெளியிட்டவர்.

இலங்கை பத்திரிகை வரலாற்றின் சாதனையாளர், தமிழ் ஊடகத்துறையில் ஒரு சகாப்தமாக விளங்கிய கலாசூரி. சிவகுருநாதன் அவரகளின் இருபதாவது ஆண்டு நினைவாக “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” எனும் நூலையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

ஒன்றிணைந்திருந்த சோவியத் ரஷ்யாவில் மருத்துவத்துறையில் பயின்றிருக்கும் ஐங்கரன் விக்கினேஸ்வரா, தமது தந்தையார் மருத்துவர் விக்கினேஸ்வரா அவர்களின் ஞாபகார்த்தமாக வருடாந்தம் ஏனைய புதிய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளையும் நூலுருவாக்கி வெளியிட்டு வருகிறார்.

இத்தகைய இலக்கிய சேவைகளை மேற்கொண்டு வரும், ஐங்கரன் விக்கினேஸ்வரா, அனைத்துலக அரங்கில் நடைபெறும் மாற்றங்களையும் கூர்ந்து அவதானித்து, ஊடகங்களின் ஊடாகவும், ஏனைய அரசியல் ஆய்வாளர்களின் கருத்தியல்கள் வழியாகவும், தான் கற்றதையும் பெற்றதையும் உள்வாங்கி, தனது அவதானிப்புகளை தமது கண்ணோட்டத்தில் எழுதிவருகின்றார்.

சமகாலத்தில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் உலக அரசியல் தொடர்பான பதிவுகளை இலங்கை, இந்திய, மற்றும் தமிழர் புகலிட தேசங்களிலிருந்து வெளியாகும் ஊடகங்களில் காணமுடிகிறது.

அத்துடன் அவ்வப்போது வானொலி ஊடகங்களிலும் கலை, இலக்கியம், அரசியல் சார்ந்து உரை நிகழ்த்தி வருகிறார்.

இத்தனை பணிகளையும் இவரால் எவ்வாறு அயர்ச்சியின்றி செய்யமுடிகிறது என்ற வியப்புடனேயே இவரது தொடர்ச்சியான
எழுத்துப் பயணத்தை பார்க்கமுடிகிறது.

இவரது அவதானக் குறிப்புகள் ஏதோ ஒரு வகையில் எம்முடன் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. ஈழ மக்கள் வலிசுமந்த மேனியராய் உலகில் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.

அவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் எழுத்தாற்றல் மிக்கவர்கள் தொடர்ந்தும் கலை, இலக்கிய, சமூகம் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவராக நம்மத்தியில் தொடர்ந்தும் எழுத்துப் பணிகளில் ஈடுபட்டுவரும் நண்பர் ஐங்கரன் விக்கினேஸ்வரா ஏற்கனவே சில சர்வதேச அரசியல் ஆய்வுகளை நூலுருவாக்கியவர்.

பாலஸ்தீன மக்களின் போராட்ட வரலாற்றை “எரியும் தேசம் பாலஸ்தீனம்” என்ற நூலையும் 2023இல் வெளியிட்டிருக்கிறார். இஸ்ரேலிய தேச உருவாக்கம் பற்றி “ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்” என்ற நூலையும் எழுதியுள்ளார்.

அந்தவரிசையில் “தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்”, “இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்” ஆகிய
ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் அண்மையில் வெளிவந்துள்ளன.

ஜீவநதி பதிப்பகத்தின் 439 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ள “அரபு வசந்தம் – மாற்றமா ஏமாற்றமா” என்ற கட்டுரை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். தற்போது நிகழும்
‘உக்ரேனிய போரும் ஊடக திரிபும்’ என்ற நூலையும் வரவாக்கியிருக்கிறார்.

சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேசவைப்பதுமே சிறந்த படைப்பாளியினதும் ஊடகவியலாளனதும் பணியாகும். ஐங்கரன் விக்கினேஸ்வராவும் அதனையே செய்து வருகின்றார்.

சில வல்லரசுகளின் உள்விவகாரங்களை மட்டுமன்றி, உலக வரைபடத்தில் எமக்கு சிறிய புள்ளிகளாகத் தோற்றம் தரும் சிறிய நாடுகளின் பிரச்சினைகளையும் இவர் கூர்ந்து அவதானித்து எழுதிவருகிறார். அதற்காக தனது நேரத்தையும் செலவிடுகிறார்.

அரசியல் ஆய்வுகளை வாசகரின் சிந்தனையில் ஊடுறுவும் வகையில் எழுதவேண்டும். அதுவே ஆய்வாளர்களின் வெற்றி. அதற்கு எளிய மொழி நடை அவசியம். ஐங்கரன் விக்கினேஸ்வராவிற்கு அந்த எளிய மொழி நடை கைவந்த கலை எனலாம்.

மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்லாமல், செய்திகளை திரித்து, எழுதுவதற்கென்றே உலகெங்கும் ஊடகர்கள் வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த விடயங்களை ஐங்கரன் விக்கினேஸ்வரா தனது எழுத்துக்களின் மூலம் அம்பலப்படுத்துகிறார்.
அதனையெல்லாம் அலசி ஆராய்ந்து எழுதி வருகிறார் ஐங்கரன் விக்கினேஸ்வரா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *