கவிதைகள்

வாழ்நாள் எல்லாம் வருந்தியே நிற்போம்! …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

உப்பின் அருமை ஒழிந்தால் தெரியும்
அப்பா அருமை இழந்தால் தெரியும்
தப்பிதம் செய்தால் தண்டிப்பார் அப்பா
தடுமாறி விழுந்தால் தாங்குவார் அவரே
 
ஏணியாய் இருப்பார் ஏற்றியே நிற்பார்
உயர வைத்து உணர்வில் மிதப்பார்
தன்னை மறப்பார் தன்னை இழப்பார்
பிள்ளை உயர்வே பெரிதென நினைப்பார்
 
அதிகாரி யாக அடக்கிட முயல்வார்
ஆணவம் இருக்கா அன்பே அமரும்
அச்சம் கொண்டால் ஆத்திரப் படுவார்
அஞ்சா இருவென அணைத்துச் சொல்வார்
 
விதியினை மீறினால் வெப்பமாய் கொதிப்பார்

வில்லன் போலவே காட்சியும் கொடுப்பார்

பணிவுடன் நடந்தால் பக்கம் வருவார்
அணையிலா அன்புடன் அள்ளியே அணைப்பார்
 
பக்குவமாகப் பல கதை சொல்லுவார்
படித்ததை எல்லாம் திணித்திட நினைப்பார்
மனத்தினில் இளைஞனாய் எண்ணியே அவரும்
வருவதை எல்லாம் வழங்கிட முனைவார்
 
ஏழ்மை இருப்பதை எண்ணவே மாட்டார்
தாழ்மை என்பதைத் தாங்கவே மாட்டார்
கோழை என்பதைப் பொறுக்கவே மாட்டார்
நாளை என்றுமே விடிவென நம்புவார் 
 
சத்தியம் நேர்மை நித்தியம் என்பார்
சஞ்சலம் என்பதை எறிந்திடு என்பார்
எப்பவும் இறைவனைப் பற்றியே நில்லு
இறைவன் வருவான் நம்பிடு என்பார் 
 
இருக்கும் வரைக்கும் எவரும் உணரார்
அருகில் இருந்தும் அருமை தெரியார்
மறைந்த பின்னால் வெறுமையாய் தெரியும்
வாழ்நாள் எல்லாம் வருந்தியே நிற்போம்  !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
  மெல்பேண் …. அவுஸ்திரேலியா.
 
 

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *