கவிதைகள்

வைகாசி விசாகம் மகத்துவம் மிக்கது! … கவிதை … மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

அழகன் முருகன் அமரும் இடங்கள்
அடியார் சூழ்ந்து தொழுது நிற்பார்
பாடிப் பரவி பரவசப் படுவார்
பரமன் மைந்தன் அருளைப் பொழிவான்
 
பரமன் நெற்றிக் கண்ணின் பொறியே
குமரன் பிறப்பின் தத்துவம் ஆனது
வைகாசி விசாகம் குமரன் பிறந்தான்
மாநில மெங்கணும் விசாகம் உயர்ந்தது
 
வைகாசி விசாகம் மகத்துவம் மிக்கது
விரதம் இருப்பது முக்கியம் ஆனது
வேண்டிய காரியம் விரைவில் வந்திட
விரதம் இருந்து வேண்டுவார் முருகனை
 
கலியுகத் தெய்வம் கந்தனாய் தெரிகிறார்
கஷ்டங்கள் போக்கிட கந்தனே வருவார்
நம்பிடும் அடியார் கும்பிட்டு நிற்கிறார்
குமரன் குறைகளைப் போக்கியே நிற்பார்
 
விசாகத் திருநாள் வெற்றியை அளிக்கும்
வேலவன் திருவடி வினைகளை அகற்றும்
தேவரைக் காத்த திருக்கை வேலன்
விசாக ரூபனாய் வெளிச்சமாய் தோன்றினான்
 
பாலனாய் இருப்பான் விருத்தனாய் இருப்பான்
பார்க்கு மிடமெல்லாம் பரவியே இருப்பான்
கோலமா மஞ்ஞையில் ஏறியே வருவான்
குன்றுகள் தோறும் அமர்ந்திடும் குமரன் 
 
நம்பிக்கை என்பது நன்மையே நல்கும்
நாளும் கோளும் வந்தே போகும்
ஒவ்வொரு நாளுமே உத்தம நாளே
உணர்த்திடும் நெறியே  உயர் நெறியாகும்
 
நமது முன்னோர் நல்லதை நினைத்தனர்
படைத்தவன் நினைப்பை உணர்த்திட விளைந்தனர்
ஒவ்வொரு நாளையும் உயர்வுடை ஆக்கிட
உள் உணர்வுடனே இறையுடன் இணைத்தனர்
 
வைகாசி விசாகம் வளமுடை நாளே
மனதினில் நல்லதை விதைத்திடு நாளே
குமரக் கடவுளை கொண்டாகிம் நாளே
நம்பிக்கை என்றுமே நம்மைக் காத்திடும்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
  மெல்பேண் …. அவுஸ்திரேலியா
 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *