அண்டங்காக்கையும் ஊர்க்குருவியும் – 01… அக்கரைப் பச்சை… சோலையூர் குருபரன்

மாரிமுத்துவின் எண்ணங்கள் ஒரு நிலையில் இல்லை. எண்ணங்கள் தினமும் அலை மோதிக் கொண்டுதான் இருந்தன. எதிர்பார்ப்பு. கவலை, ஏக்கம், விரக்தி எல்லாம் சேர்ந்து வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது அவளை. மனம் ஒரு நிலையில் இல்லாததால ஒன்றைச் செய்யப் போய் இன்னொன்றைச் செய்துவிடுவாள். எதர்கால வாழ்க்கை தொடர்பாக அத்தனை கவலை அவளுக்கு.
மனிதரில் பலர் ‘இக்கரைக்கு அக்கரைப் பச்சை’ பொல் ஏதோ ஒன்றை தினமும் எதிர்பார்த்து அழகான வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்தான். இரவு பகல் வருவதுபோல் இன்பம், துன்பம் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை மறந்து பலர் எதை எதையோ எல்லாம் எதிர்பார்த்துப் மனம் போனபோக்கில் ஆப்பிழுத்த குரங்கு போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். விடாமுயற்சியுடன் நியாயமான முறையில் முயற்சி செய்தால் எதையும் அடைந்து கொள்ளலாம் என்பதை அறிந்திருந்தும் பலர் முயலாதிருந்து தமது வாழ்க்கையை வாழ முடியாமல் ஏனோ தானோ என வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மாரிமுத்துவும் இவ்வாறுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
மாரிமுத்துவுக்கு தனது மகன் விமலை வெளிநாட்டுக்கு அனுப்பிச் சுழை சுழையாகச் சம்பாதிக்கணும் என்ற ஆசை. மகனை அனுப்பி அவனின் சம்பாத்தியத்தில் புதுவீடு கட்டணும், காணி, தோட்டம், துரவு வாங்கிப்போட்டு கடைசி காலத்தில் காலுக்குமேல் கால் போட்டுச் சாய் கதிரையில் அமர்ந்திருக்க வேண்டும் என்ற ஆசை சாமியனுக்கு. இது ஒண்டும் தேவல்ல ஊரில் இருந்து சொந்தமாக ஒரு தொழில் செய்து புழைக்கலாம் என்பது விமலனின் விருப்பம். அதற்காக ஊரில் சிறிய மரக்கறிக் கடை ஒன்றை நடத்தி வருகிறான். அதிலிருந்து வரும் வருமானம் செலவு போக ஒரு தொகை மிஞ்சும். அதை வைத்து வாழ்கை்கையை ஓட்டலாம் என்ற நம்பிக்கை அவனுக்கிருக்கிறது.
“தம்பி இந்த மரக்கறிக் கடையெல்லாம் சரிப்பட்டு வராது. அங்கபார் அவன் சின்னானின் மகனை. அவன் கட்டாருக்குப் போய் எப்படியெல்லாம் உழைக்கிறனெண்டு” என்றான் சாமியன்.
“ஓமோம் கட்டாருல இருந்து அனுப்பின காசில வீடுகீடெல்லாம் கட்டி, மகளுக்கும் நல்ல மாப்பிள்ளையக் கட்டிக் கொடுத்து. மாப்பிள்ளையயும் கட்டாருக்கு எடுத்துத்தானாம். சின்னானும் பொண்டாட்டியும் எடுப்பெடுத்துச் சிலுமிக் கொண்டு திரியுதுகள். நீ என்னனென்னண்டா இதெல்லாம் வேணாண்டு சொல்றா” என்றாள் மாரிமுத்து.
தம்பி இதெல்லாம் சரிப்பட்டு வராது. நாங்க சொல்றபடி நட. இல்லையெண்டா இஞ்ச ரெண்டு சவம் விழும். ம்ம்.. தெரியுந்தானே” என்று உறுமினார் சாமியன்.
“கட்டாருக்குப் போன பலர வேலை இல்லெண்டு திருப்பி அனுப்பிக் கொண்டிருக்காங்களாம். சம்பளமும் குறைவாம். எண்டெல்லாம் சொல்லுறாங்க. இதெல்லாம் உங்களுக்கு விளங்கல்லயே” என்று விமலன் கூறியதும் “அட தம்பி உடாங் கதையெல்லாம் விட்டுத்துப் போற வழியப்பாரு. நாளைக்கு ஏசெண்டப் பாத்து எல்லாம் முடிச்சித்து வா” என்றார் கோபத்துடன் சாமியன். அரை மனதுடன் விலகிச் சென்றான் விமலன்.
இனிமேலும் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்ட விமலன் அரை மனதுடன் கட்டார் செல்வதற்குத் தீர்மானித்தான். ஏஜெண்டைப் போய்ப் பார்த்து ஆகவேண்டிய காரியங்களைக் கவனிக்க ஆரம்பித்தான். சாமியனும் மாரிமுத்துவும் குஷியாகிவிட்டதோடு கனவு காணவும் ஆரம்பித்தனர். நகை நட்டுக்கள் எல்லாம் அடகு வைத்து, காணித் துண்டையும் ஒத்திக்கு வைத்து, கடவுச்சீட்டு, வீசா எல்லாம் எடுத்துக் கட்டாருக்குச் செல்வதற்குத் தயாரானான்.
கட்டாருக்குச் சென்று ஒரு வாரத்தில் விமலன் வேலை செய்வதற்காககச் சென்ற கம்பனி மூடப்பட்டுப் பணியாற்றிய பணியாளர்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த விமலன் சுக்கு நூறாகிப் போனான். கட்டாரில் பணியாற்றும் தனது நண்பனைத் தொடர்பு கொண்டு நடந்த விடயத்தைக் கூறினான்.
“மச்சான் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதை. இந்த நாடு உனக்குப் புதுசு. நானிருக்கிறன். வேறு ஏதாவது கம்பனியில் வேலை கிடைக்குமா எண்டு பாப்பம். அதுவரையும் பொறுத்துக் கொள்” என்று ஆறுதல் கூறினான் நண்பன் சுரேஷ்.
கட்டாரில் பல கம்பனிகள் மூடப்பட்டும், ஆட்குறைப்புச் செய்தும், சம்பளத்தைக் குறைத்தும் உள்ளதனால் வேறு எந்தக் கம்பனியிலும் வேலை கிடைக்கவில்லை. ஒரு மாதமும் கடந்துவிட்டன. தொழில் கிடைக்கவில்லை. இந்த விடயம் எதனையும் விமலன் பெற்றோருக்குத் தெரியப்படுத்தவில்லை. அங்குள்ள அதிகாரிகள் நாடு திரும்புமாறு கூறிவிட்டனர்.
இவ்வாறு இருக்கையில் 45 வது நாள் ஒரு புதன் கிழமை காலை 7.00 மணியளவில் திடுதிப்பென வீடுவந்து சேர்ந்தான் விமலன். யாரும் எதிர்பார்க்கவில்லை. சாமியனும் மாரிமுத்துவும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அண்டங்காக்கை வீட்டு முற்றத்தில் இருந்த பலா மரக் கிளையில் அமர்ந்திருந்து நடப்பதைக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தது. இயல்பு நிலைக்குத் திரும்பிய சாமியன் “ஏண்டா தம்பி திரும்பி வந்தனி. என்னடா நடந்தது..” என்த் தழுதழுத்த குரலில் கேட்டார்”
“தம்பி அங்கை ஏதும் பிரச்சினையோ? அப்பிடியெண்டாலும் அங்கிருந்து வேலயப் பாத்திருக்கலாம்தானே” என அமுது கொண்டு கேட்டாள் மாரிமுத்து.
“இப்ப அழுது ஒப்பாரி வைக்கிறயள். இதுக்குத்தான் போகமாட்டன் எண்டு சொன்னனான். எவ்வளவு சொன்னன் அதையெல்லாம் கேட்டையளோ” என்று நடந்த சம்பவங்களை விலாவாரியாகக் கூறினான் விமலன்.
“அப்பிடியெண்டா வேறு எங்கையாவது வேலை தேடி எடுத்திருக்கலாம்தானே? ஏன் அவசரப்பட்டு வந்தனி” என்றாள் மாரிமுத்து.
“கட்டார் என்ன நம்ம நாடு மாதிரியோ? அங்க சட்டமெல்லாம் கடுமை. பிடிபட்டா சிறையில் அடைத்து விடுவார்கள். அங்க சுரேஷ் அவனுக்குத் தெரிந்த ஆக்களெல்லாம் பிடித்து எவ்வளவோ முயச்சி எடுத்துப் பாத்தான் ஒண்டும் சரிவரல்ல. கடசியில் கைச் செலவுக்குக் காசு தந்து அவன்தான் விமானமேத்தி விட்டான்” என்று கண்களைத் துடைத்துக் கொண்டு தழுதழுத்த குரலில் கூறினான் விமலன்.
“தான் கண்ட கனவெல்லாம் சுக்கு நூறாகிவிட்டதே” எனக் கூறிக் கொண்டு சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டார் சாமியன்.
மாரிமுத்து செய்வதறியாது திகைத்துப்போய் தலையில் கைவைத்தவாறு மணலில் அமர்ந்து கொண்டாள். கழைத்துப்போய் வந்த விமலனுக்கு ஆறுதல் சொல்ல யாரும் இருக்கவில்லை. மூவரையும் பார்த்துக் கண்ணீர் விட்டுச் சொகத்தோடு அமர்ந்திருந்த அண்டங்காக்கை அங்கிருந்து பறந்த சென்று வேம்பமரக் கிளையொன்றில் அமர்ந்து கொண்டது.
அவ்வழியாக வேகமாகப் பறந்து சென்று கொண்டிருந்த ஊர்க்குருவி கவலையுடன் அமர்ந்திருக்கும் அண்டங்காக்காயைக் கண்டு, தாழப் பறந்து வந்து அருகில் அமர்ந்து கொண்டது.
“அண்ணே! சோகத்துக்கு என்ன காரணம். என்ன நடந்தது சொல்லுங்கண்ணே” என்று அண்டங்காக்கையைப் பார்த்து ஊர்க்குருவி கேட்டது.
“தம்பி உனக்கு விமலன் அண்ணையத் தெரியுந்தானே” ஓமோம் அவருக்கு என்ன நடந்தது சொல்லுங்கோ. போன மாதம் கட்டாருக்குப் போனவரல்லே”” என ஊர்க்குருவி கூறிக் கதை கேட்கும் ஆர்வத்துடன் மேலும் நெருங்கிவந்து அண்டங்காக்கையின் அருகில் அமர்ந்து கொண்டது.
“விமலண்ணன் ஊரில தொழிலப் பாத்துக் கொண்டிருக்கிறன். கட்டாரெல்லாம் வேண்டாம் எண்டுதான் கூறினாரு. பணத்தாசையில் தாயும் தகப்பனும் விடாப்பிடியாக நிண்டு கட்டாருக்கு அனுப்பி வைத்தார்கள். அவரும் விருப்பமில்லாமத்தான் போனாரு. அவரும் அங்க போகக் கம்பனியையும் மூடிவிட்டாங்களாம். வேற தொழில் தேடி ஓடி அலைந்து ஏமாற்றத்தோடு திரும்பி வந்திருக்காரு. களைச்சுப் போய் வந்தவருக்கு ஆறுதல் ஏதும் கூறாமல் விடுப்புக் கேட்டு அதிர்ந்து போய் அமர்ந்திருக்கிறாங்க பெற்றார். விமலன் அண்ணையப் பாத்தா பரிதாபமாக இருந்துச்சு அதான் பறந்து வந்து கவலயோட இருக்கிறன்” என்று கூறி அண்டங்காக்கை பெருமூச்சுவிட்டது.

“அண்ணே! மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றில் யுத்தம், அரசியல், பொருளாதார நெருக்கடியெண்டு பல வெளிநாட்டுக் கம்பனிகள் தொழிலை நிறுத்திவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றன. அதனால் பலர் தொழில் வாய்பை இழந்து நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். பல கம்பனிகள் பணியாளர்களைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் பல கம்பனிகள் சம்பளத்தைக் குறைத்துவிட்டன. சில கம்பனிகள் விரும்பினால் வேலை செய்யுங்கோ. இல்லாட்டி நாட்டுக்குத் திரும்புங்கோ என்றெல்லாம் பல புதிய சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துபின்றனராம். என்று மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பி வருபவர்கள் கூறிக் கொள்கின்றனர். ‘இக்கரைக்கு அக்கரைப் பச்சை’ என்று ஆசையில் ஓடிச் சென்று அந்த நாடுகளில் கஷ்டப்படுதுகளாம். அன்ணே! விமலன் அண்ணை சொந்தமாக மரக்கறிக் கடை வைத்துக் கொண்டு நல்லாத்தானே இருந்தவர். தாயும் தகப்பனும் விடாப்பிடியாக நிண்டு கடனப்பட்டு அனுப்பி வைச்சிதுகள். இனித்தான் கஷ்டப்படப் போகுதுகள்”.
“இன்னும் சிலர் தாய், தகப்பன வருத்திச் செல்லுதுகள். சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுச்
சிலர் எல்லாம் இழந்து நிற்கதியாக நிக்குதுகள். அதிலும் வாழ்ந்து கெட்டால் அந்த வாழ்கை நரகம்தான் அண்ணே. வெளிநாடு வெளிநாடு என்று அங்கு சென்று பலர் எதை எதையோவெல்லாம் செய்யுதுகளாம். சிலது இராப் பகலாக் கஷ்டப்படுதுகளாம். சிலது வாழ்க்கையத் தொலைச்சு நிக்குதுகளாம். அதவிட நாட்டிலே இருக்கலாமே. என்ன செய்வது வெளிநாட்டில் இருக்கிறார் என்று சொல்வதைக் கௌரவமாகப் பலர் நினைக்குதுகளே”
“அண்ணே பசிக்குது வேளைக்குப் போனாத்தான் தீனியக் கீனியப் பொறுக்கலாம். அம்ப நான் போய்வாறன் அண்ணே” என ஊர்க்குருவி கூறிப் பறந்து சென்றது.
ஊர்க்குருவியுடன் பேசியதால் சற்று ஆறுதலடைந்த அண்டங்காக்கை தீனி எடுப்பதற்காகப் பறந்து சென்றது. ஊர்க்குருவியும் வேகமாகப் பறந்து வான்வெளியில் கலந்துவிட்டது.
களம் தொடரும்…..
![]()