கட்டுரைகள்

உகந்தை முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை? காணி அபகரிப்பும்- வர்த்தமானி சர்ச்சையும்! … நவீனன்.

(தொடரும் ஆக்கிரமிப்புகள் தமிழர் தாயகத்தை சிதைத்து வருகிறது. பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் தமிழ் பூர்வீகங்களை அழித்தலும் ஆக்கிரமித்தலும் தொடர்வது இன அழிப்பின் இன்னொரு வடிவமாகும்)
தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்கள் மற்றும் அவற்றின் மரபுரிமைகளை மாற்றி அமைக்கும் வகையில் அரசுடமையாக்குதல், மற்றும் பெளத்த சிங்கள மயமாக்கல் முயற்சிகளில் அரசு வெளிப்படையாகவே இயங்கி வருகின்றது.
வடக்கில் குருந்தூர்மலை விவகாரம், தையிட்டி விவகாரம், வெடுக்குநாறி மலை என்று பல ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. இதன் பின்னணியில், கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற உகந்தை முருகன் ஆலயத்திற்கு செல்லும் முன்வாயிலிற்கு்்முன்பாக காணப்படுகின்ற கடற்கரையின் இடது புறத்தில் புதிதாக ஒரு புத்தர் சிலையினை நிறுவியிருக்கிறார்கள்.
உகந்தை முருகன் ஆலய புராதன வரலாறு கொண்ட புண்ணிய பூமியாகும். உகந்தைமலையில் 25 அடி முருகன் சிலை நிறுவும் பணியைத் வன இலாகாவினரும் முன்பு தடுத்து நிறுத்தினர். ஆனால் இங்கு எவ்வாறு புத்தர் சிலை நிறுவ அனுமதிக்கப்பட்டது எனும் கேள்வி எழுகிறது.
ஈழத்தில் தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலும் ஆக்கிரமித்தலும் தொடர்ந்து நடைபெறுகின்றது என்பதனை பல ஆக்கிரமிப்பு முயற்சிகள் மூலம் அறியலாம்.
உகந்தை முருகன் ஆலய புராதன தமிழர் வாழ்வியல் ஆதாரங்களைச் சிதைப்பதும் அதை அழிப்பதும் ஆக்கிரமிப்பதும் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள இந்த புத்தர் சிலையானது, உகந்தை முருகன் ஆலய முன் வாயிலின் முன்பாகக் செல்லும் போது கடற்கரையில் இடது புறமாகக் காணப்படும் மலையில் கடற்படை முகாம் முன்பாக உள்ளது. இந்த மலையில் கடற்படையின் தொடர்பு கோபுரம் முன்பாக புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 
வடக்கில் காணி அபகரிப்பு சர்ச்சை!
வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை தற்போது அரசாங்கம் மீள திரும்பப் பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது.
ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமிழர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களை மீண்டும் கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
புதிதாக வந்த இந்த வர்த்தமானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்தனர்.
வடக்கில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு அந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் தொடர்ந்த மக்கள் போராட்டத்தால் வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி மே 27இல் வாபஸ் பெறப்பட்டது.
நல்லாட்சியில் திருகோணமலை நில அபகரிப்பு:
சிறிலங்காவில் பெருமையாக கூறப்பட்ட “நல்லாட்சி காலத்தில்”, நாவற்குழி சிங்கள குடியேற்றம் சட்டபூர்வமாக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை ஆகும். இதனைப் போல வவுனியா வடக்கு கொக்கச்சான்குளம் (கலாபோகஸ்வெவ 1 & 2) நாமல்புர குடியேற்றங்களும் சட்டபூர்வ சிங்கள குடியேற்றங்களாக்கப்பட்டன.
அத்துடன் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மாலனூர் (12ஆம் கட்டை) மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் பல உருவாக்கப்பட்டன. திருகோணமலை சலப்பையாறு பகுதியில் 650 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் மேலும் குடியேற்றபட்டன.
கிழக்கு மண்ணில் மட்டக்களப்பு கெவிலியாமடு பகுதியில் சிங்கள மக்களுக்கான மாதிரி கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு 20-25 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளும் 60 இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் 50 இற்கு மேற்பட்ட பொலநறுவை, அம்பாறையை சேர்ந்த பண வசதி படைத்த சிங்கள விவசாயிகள் பண்ணைகள் அமைக்க அரசால் காணி வழங்கப்பட்டது.
முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றம்:
ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் பலவும் கஜபாகுபுரவாக ஆக்கப்பட்டன. குறிப்பாக சிலோன் தியேட்டர், டொலர்ஸ் பாம், தனிக்கல், நாவலர் பண்ணை போன்ற பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் பல செய்யப்பட்டன.
முல்லைத்தீவின் எல்லையில் சிங்கபுர, 13 ஆம் கொலனி என பல சிங்களக் கிராமங்கள் மீள உருவாக்கப்பட்டன. கொக்குத்தொடுவாயில் மட்டும் 2,156 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால், வெள்ளக்கல்லடி, தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர்.
கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியில் 825 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 20 ஏக்கர் நிலம் சிங்கள குடியிருப்புக்காக வழங்கப்பட்டது. நாயாறு கொக்கிளாய் – முகத்துவாரம் பகுதிகளில் சுமார் 794 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.
கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பகுதியில் சிங்கள மீனவர்களுக்கு காணி உரிமம் வழங்கப்பட்டது. ஆண்டான்குளம், திருக்கோணப்பட்டி, ஆத்தங்கடவை, மருதடிக்குளவெளி, ஆலடிக்குளம், சாமிப்பில கண்டல், ஈரக்கொழுந்தன் வெளி, படலைக்கல்லு, நித்தகைகுளம் போன்ற பகுதிகளில் சுமார் 647 ஏக்கர் நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காக வழங்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத செய்தியாகும்.
கொக்குத்தொடுவாய், புலிபாய்ந்தகல், நாயாறு, கொக்கிளாய் – முகத்துவாரம், சாலை ஆகிய பகுதிகளில் பருவகாலங்களில் தொழில் செய்ய தென்னிலங்கை மீனவர்கள் குடியேற்றப்பட்டனர். சூரியனாறு, முந்திரிகைக்குளம் பகுதிகளில் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு தமிழ் மக்களின் வயல் நிலங்கள் அபகரிகப்பட்டு வழங்கப்பட்டது.
வவுனியாவில் மன்னார் மதவாச்சி வீதியை சூழ்ந்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. மன்னார் முசலிப் பகுதியிலும் சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது. கொக்கடிவான் குளத்தின் சூழலிருந்த இருநூறு ஏக்கர் வயல் நிலம் 165 சிங்கள குடும்பங்களுக்கு பகிரப்பட்டது.
தமிழர் வாழ்வியல் ஆதாரம் சிதைவு:
உகந்தை முருகன் ஆலய வளாகத்திலும் அதனைச் சூழவும் வன இலாகா, மற்றும் படையினர் புதிய நிபந்தனைகளையும் விதித்து ஆலய சூழலைச் சுருக்கியுள்ளனர். மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர், வள்ளிமலை போன்ற இடங்களுக்குச் செல்லவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இது தவிர சந்நியாசி மலையும் பறிபோகும் அபாயம் காணப்படுகிறது.
இந்த நிலையில் புத்தர் சிலை விவகாரம்
இன மதங்களுடையே ஒற்றுமையின்மை ஏற்படுத்தி உள்ளது.
அத்தோடு இந்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கான ஆயத்தமாக மலையில் பீடம் அமைக்கப்பட்டது. அத்துடன் இது உகந்தை ஆலய சூழலில் நிறுவப்பட்டுள்ள இரண்டாவது புத்தர் சிலையாகும். இதன் பின்னணியில் சிங்களவர்கள் பலரைக் குடியேற்றும் திட்டம் இருக்கிறது. வன இலாகாவின் செயற்பாடுகள் மற்றும் மலையில் நிறுவப்படவிருந்த 25 அடி முருகன் சிலையை நிறுவாமல் தடுத்தது அதன் பின்னர் தற்போது புத்தர் சிலை வைத்தது அதற்கு உடந்தையாக பல படை அதிகாரிகள் பின்னணியில் இருந்துள்ளனர்.
தமிழர் வாழ்வியல் ஆதாரங்களை தொடரந்து சிதைக்க சிங்கள ஆட்சியாளர் முயல்கின்றனர். இந்த சிலை உடனடியாக அகற்றப்படுவதோடு அரசு தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்பது சந்தேகமே?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *