சொன்னபடி வாழு…. கதை… சோலச்சி


“அர்ச்சனா…. அர்ச்சனா….
சற்று அழுத்தமாய்…. குளியலறையிலிருந்து சத்தம் போட்டார் செல்வராசு.
குளிக்கப்போனோமா…. வந்தோமானு இருக்கதுல… ஒருநாளப் பாத்தாப்புல கத்துன்னா என்னதான் பண்றதாம்….. முணுமுணுத்துக் கொண்டே “இப்ப எதுக்குத்தான் இப்புடி கத்துறீகளோ” பதிலுக்கு தானும் சத்தம் போட்டுவிட்டு தோசையை வார்த்தெடுப்பதில் கவனம் செலுத்தினாள் அர்ச்சனா.
“டிபன் ரெடியா…” குளியல் அறையிலிருந்து நேராக தலையை துவட்டியவாறு கைலியை அரைகுறையாக இடுப்பில் கட்டியபடி டைனிங் டேபிளில் அமர்ந்தவருக்கு சூடான தோசையை பரிமாறினாள். டிபன் ரெடியானு தெரிஞ்சுக்கிறதுக்கு பாத்ரூம்லருந்துதான் கத்தனுமா. எத எத எங்கருந்து கேக்கனும்னு வெவஸ்த இல்லயா.. நின்னு நிதானுச்சு குளிச்சிட்டு வந்தா என்னவாம். வரும்போதே றெக்கை கட்டிக்கிட்டு வர்றது…. சூடானா தோசையுடன் சூடான சொற்களையும் சேர்த்தே பரிமாறினாள்.
சுவையான தோசையுடன் அர்ச்சனாவின் சொற்களையும் ருசித்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் செல்வராசு.
“என்னைக்காச்சும் காலைல ஒழுங்கா சாப்புட்டு போயிருக்கீங்களா…? அவசர அவசரமுனு என்ன இருக்குதோ அதுல ரெண்ட பிச்சு தின்னுட்டு கிளம்பியர்றது. ஒடம்பு என்னத்துக்கு ஆகும். இங்க ஒருத்தி மெனக்கெட்டு சமைச்சு வாய்க்கு ருசியா போடுறேன். அதக்கூட உக்கார்ந்து ஆர அமர சாப்பிட முடியலன்னா அப்படி என்ன வேலை கெடக்குதுங்குறேன்…” முகம் சுளித்தாள் அர்ச்சனா. அவளின் அக்கறையை எண்ணி பல நேரங்களில் செல்வராசு பெருமிதம் கொள்வார். சாப்பிடும் போதெல்லாம் அவளின் சொற்கள் தனி சுவையை கூட்டிக்கொண்டு இருப்பதை உணர்ந்ததால் அதுவே பழக்கமாகியும் போனது.
“என் செல்லம்ல…. ஒன்னோட ஒடம்ப பத்திரமா பாத்துக்கோ. ஏன்னா… அதுதான் என்னோட சொத்து. இல்ல…இல்ல.. தப்பா சொல்லிட்டேன். நம்ம குடும்பத்தோட சொத்து. அந்த கையக் காட்டு… பாரு எவ்வளவு காச்சு போயி இருக்கு. வீட்ல உள்ள அத்தனை வேலையும் இழுத்துப் போட்டு செய்யுற உன் கையில்தான் எவ்ளோ வித்தைய கத்து வச்சிருக்க…” பேசிக்கொண்டே தக்காளி சட்னியில் தோசையை தொட்டு சாப்பிட்டவாறு அவளின் முகத்தைப் பார்த்தார். சட்டினியை போல் அவளின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.
“ஆமா…! இப்புடி ஏதாச்சும் சொல்லி எம்புட்டு வாய அடச்சிருங்க. அப்பறம்… ஒங்க பேச்செல்லாம் மேடையிலேய வச்சுக்கங்க. பேசிப்பேசி மயக்குனது பத்தாதாக்கும்..” லாவகமாய் முந்தானையை தனது இடுப்பில் சொருவிக் கொண்டே கொத்த மல்லி சட்னியையும் பரிமாறினாள்.

“ம்… புத்தகத்த கட்டிப் பிடிச்சுக்கிட்டு கெடக்குற என்னாலேய இப்புடி பேச முடியல… அதெப்புடி இவ்ளோ அழகா தேனுல நனச்சு நனச்சு பேசுற…” அவளது இடது கையை சுண்டியபடி சிரித்தார்.
“ம்… உங்ககிட்ட பேசுனா… யாருக்குத்தான் பேச்சு வராதாம்?”
“ம்… அதுசரி அந்த மீன் விழிகள் ரெண்டும் என்ன சொல்லுது”
“போதும்… போதும்… மொதல்ல சாப்புட்டு முடிங்க. அப்புறம் லேட் ஆயிடுச்சுனு டுபுக்குடுபுக்குனு ஓடுவீங்க. க்கும்..” சிரித்துக் கொண்டாள். புகழ்ந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆதலால் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் பாராட்டி பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
நாலா பக்கமும் எதையோ பார்த்துவிட்டு.. “சர்மியும் மோகனும் எங்க…?” என்றார். இந்தக் கேள்விக்காகத்தான் அவளும் காத்திருந்தாள்.
“அப்பாடா… இப்பவாச்சும் அந்த நெனப்பு வந்துச்சே… மணி இப்ப எட்ரை ஆவுது. அவங்க ரெண்டு பேரும் ஸ்கூல் வேன்ல கிளம்பி போயி அரமணி நேரமாச்சு…” சொல்லிக்கொண்டே இன்னொரு தோசையை எடுத்து தட்டில் வைத்தாள்.
“ஒ… நெனப்புலதான் ஏ உசுரு நித்தமும் வாழுதடி…” சிரித்துக் கொண்டே பாடத் தொடங்கிய அவரை இடை மறித்தாள்.
“போதும் சாமி… பிள்ளைங்க இல்லனா குசி ஆயிடுவீங்கனு தெரியும். இது கால நேரம்…மணியாயிருச்சு கெளம்புங்க…” சொல்லிக் கொண்டே பேண்ட் சட்டையை எடுத்து வந்தாள். செல்வராசுக்கு பிடித்த அனைத்தையும் மனம் கோணாமல் செய்வாள். அவள் எடுத்துக் கொடுக்கும் ஆடைகளை மட்டுமே அணிந்து கொண்டு வெளியில் செல்வார்.
“இன்னைக்கு எங்க போறேனு கேக்க மாட்டியா..?” விழிகளால் முத்தமிட்டு உதடுகளை துலாவினார்.
“கேட்கலனா… இலக்கியவாதி சொல்ல மாட்டிங்களாக்கும்” தனது உதடுகளையும், கண்களையும் ஒரு சேர வைத்து உசுப்பேற்றினாள்.
“ஆபிசுக்கு காலைல லீவு போட்டுட்டேன். அகிலாபுரத்துல ரோட்டரி கிளப் மூலமா பத்தாம் வகுப்பு பிள்ளைங்களுக்கு கருத்தரங்கம் ஏற்பாடு பண்ணிருக்காங்க. அதுல சிறப்பு பேச்சாளர் உன் புருசன்தான்…. டன்டயாய்ங்…..” சொல்லும்போதே பகல் என்றும் பாராமல் அவரின் முகத்தில் முழு நிலவு ஒட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்து மகிழ்ந்தாள் அர்ச்சனா.
“அகிலாபுரமா…? எத்தன மணிக்குங்க…”
“பத்தரை மணிக்குத்தான் கூட்டம் ஆரம்பிக்குது. எதுக்கு அப்புடி கேக்குற…?”
“சர்மியும் அவங்க ஸ்கூல்ல இருந்து அங்கதானே போறதா ராத்திரி சொன்னா… பாப்போம் என்ன நடக்குதுனு?” தனக்குள் எண்ணிக் கொண்டாள்.
“என்ன யோசிக்கிற…?”
”ஒன்னும் இல்லேங்க…! குழந்தைங்ககிட்ட பேசப் போறீங்களே.. அப்டினா பள்ளிக்கொடத்துலமாறி கத்திப் பேசனுமோனு நெனச்சேன். இந்தாங்க ஆபிஸ் பேக்.. கவனமா போங்க…!” வழி அனுப்பினாள்.
“மொத மொதனு அப்பாவும் புள்ளையும் ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தரு போறாங்க. அப்பா பேசுறது புள்ள கேக்கப்போகுது… என்ன பேசப் போறாரோ தெரியலையே…” தனக்குள்ளேயே பேசிக் கொண்டாள்.
அர்ச்சனாவின் உடல் மெலிந்து இருப்பதைப் பார்த்து வருத்தப்பட்டார். தான் சாப்பிடும் போதெல்லாம் சேர்ந்து சாப்பிட அழைத்தாலும் இப்ப எனக்கென்ன வேலையை முடிச்சுட்டு அப்பறமா சாப்ட்டுக்கிறேன். நீங்க வேலைக்கி போகனும் மொதல்ல சாப்பிடுங்க என்று சொல்லிவிடுவாள். செல்வராசு கிளம்பி போகும் வரை வாசலில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தாள் உள்ள போயி மொதல்ல சாப்புடு… சொல்லிக் கொண்டே மோட்டார் சைக்கிளில் கிளம்பினார்.
அப்போது… யாரோ செல்போனில் அழைக்க காதில் வைத்து தலையை தோள் பட்டையில் சாய்த்தபடி பேசிக் கொண்டே சென்றதைப் பார்த்து பதறினாள். “என்னங்க நின்னு பேசிட்டு போங்க…” சத்தமிட்டாள். அழைப்பில் யாருடனோ தீவிரமாக பேசிக்கொண்டே சென்றதால் அர்ச்சனாவின் சத்தம் அவருக்கு கேட்டிருக்க வாய்ப்பே இல்லை.
வளைவு திரும்பும் வரை அவளது கண்கள் தனது கணவன் மீதே இருந்தன. மனசு திக்திக்கென்று அடித்துக் கொண்டது. யாரா இருந்தாலும் வண்டிய நிறுத்தி ரெண்டு வார்த்தை பேசிட்டு கிளம்ப வேண்டியதுதானே. அப்புடி என்ன பொல்லாத அவசரம்……
”மனுசனுக்கு எவ்ளோ சொன்னாலும் ஒரைக்க மாட்டேங்கிது… அப்புடி என்ன பேச்சு வேண்டி கெடக்குதாம்…? நின்னு பேசிட்டு போனாதான் என்னவாம்…?” மீண்டும் மீண்டும் முணுமுணுத்துக் கொண்டே சாப்பிட உட்கார்ந்தாள். சாப்பாடு உள்ளே இறங்க தடுமாறியது.
மனசு ஒரு மாதிரியாக இருக்கவும்… தோசையை மூடி வைத்து விட்டு சோபாவில் உட்கார்ந்து கொஞ்சம் கண் அயர்ந்தாள்.
தன் வீட்டுக்காரர் செல்போனில் பேசிக் கொண்டே சென்றதுதான் நினைவில் வந்து சென்றது.
“போன் பண்ணி… வண்டில போகும் போது போன் பேசாதீங்கனு சொல்லலாமா…?” தனக்குள்ளேயே ரெண்டு மூனு தடவை கேட்டுக் கொண்டாள்.
“வேண்டாம்… இப்ப அவரு வண்டில போய்க்கிட்டு இருப்பாரு. சாய்ந்தரம் வரட்டும்…” தனக்குத்தானே தேற்றிக் கொண்டாள்.
அகிலாபுரம் மீனாட்சி திருமண்டபத்தின் வாசலில் கருத்தரங்கு நிகழ்வு தாங்கிய வண்ணப் பதாகை அனைவரையும் வரவேற்றுக் கொண்டு இருந்தது. பள்ளிச் சீருடையில் மாணவர்கள் தன் நண்பர்களுடன் கைகோர்த்தபடி அரங்கத்திற்குள் நுழைந்து கொண்டு இருந்தனர்.
விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த ஒலிப் பெருக்கியில் “போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்…” பட்டுக் கோட்டையாரின் வைர வரிகள் ஒலித்துக் கொண்டு இருந்தன.
மாணவர்கள் வரிசையாக இருக்கைகளில் வந்து அமர்ந்தனர். புற்றில் கிளம்பிய ஈசல் போல் கொயங்கொயங்கென மாணவர்கள் பட்டாளம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். இன்னும் ஒரு சில மணித்துளிகளில் நிகழ்ச்சி தொடங்கும் என அறிவித்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர்.
எல்லோரும் விழா மேடையை பார்த்து ஆர்வமாக அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த முக்கியமானவர்களின் பெயரை நிகழ்ச்சி தொகுப்பாளர் வாசித்து மேடை ஏற்றினார். சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவரும் வணக்கம் சொல்லியடி மேடையில் அலங்கரித்துக் கொண்டு இருந்தனர். மாணவர்களின் கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது.
தட்ட தட்ட கைகள் சிவக்கட்டும்… கைகள் சிவக்க சிவக்க கர ஒலி விண்ணை பிளக்கட்டும்… சிறப்பு அழைப்பாளர்களுக்கு கைத்தட்டலை அன்பு பரிசாக வழங்குவோம் என நிகழ்ச்சி தொகுப்பாளர் சொன்னபொழுது மாணவர்களின் மனதில் உற்சாகம் பீறிட்டு கிளம்பியது. வாடி வாசலில் இருந்து வெளிவரும் காளைகளை அடக்குவதற்கு தயாராக இருக்கும் இளைஞர்களைப் போல் மாணவர்கள் நிகழ்ச்சியை எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர்.
“நமது சிறப்பு விருந்தினர் கவிஞர் செல்வராசு அவர்களை உங்களின் பலத்த கர ஓலியோடு அன்புடன் மேடைக்கு அழைக்கிறேன்” என்று சொன்னதும் வியப்பில் விழிகளை உயர்த்தினாள் சர்மி. அப்பா வந்துருக்காங்க. சொல்லவே இல்ல. இவ்வளோ நேரம் எங்கேருந்தாங்க…. சர்மிக்கு புரியாத புதிராகவே இருந்தது.
“ஏ… எங்க அப்பா….டி வந்துருக்காக….” என்றதும், சர்மியின் தோழிகள் எழுந்து நின்று உற்சாகமாய் கரவொலி எழுப்பினார்.
மாணவர்களோடு மாணவர்களாக முன் வரிசையில் அமர்ந்து இருந்த கவிஞர் செல்வராசு கைகளை கூப்பியபடி மேடை ஏறினார். கைத்தட்டல் நிற்க வெகு நேரமானது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஒவ்வொருவரும் பேச ஆரம்பித்தனர்.
சிறப்பு பேச்சாளர் கவிஞர் செல்வராசு நிகழ்ச்சியின் நிறைவாக பேச ஆரம்பித்தார். ஒவ்வொரு பேச்சுக்கும் இடையிலும் மாணவர்களின் கரவொலி அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. காமராசர், பெரியார், அம்பேத்கர், விவேகானந்தர் என பலரையும் விரல் நுனியில் செய்திகளை சேகரித்து மாணவர்களுக்கு சுவைபட பரிமாறினார். கல்வியின் முக்கியத்துவம் பெற்றோர்களின் தியாகம் என் எதையும் விட்டு வைக்கவில்லை. புதிதாய் மலர்ந்த வாசம் மிகுந்த பூக்களை மாலையாக தொடுத்து மாணவர்களின் கழுத்தில் அணியச் செய்யும் வித்தையை கற்றிருந்தார் செல்வராசு.
மாணவர்களின் முகம் புதிதாய் மலர்ந்து இருப்பதை நிகழ்ச்சி அமைப்பாளர்களும் கண்ணுற்றனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கான பலனை அறுவடை செய்து இருப்பதாக தங்களுக்குள் பேசிக்கொண்டனர். விழா தலைவர் எழுந்து நன்றி கூற தேசிய கீதத்துடன் பகல் ஒரு மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
விழா தலைவர் சந்திரமோகன் மேடையை விட்டு கீழே இறங்கி மற்றவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த கவிஞர் செல்வராசின் கைகளை இறுகப் பிடித்து குலுக்கினார். நிகழ்ச்சி வெற்றி பெற்றதை உணர்த்தும் விதமாக அவர் குலுக்கியதை எண்ணி மகிழ்ந்தார் செல்வராசு.
“ரொம்ப நன்றிங்க சார்…!”
“உங்க பேச்சுதான் இந்த நிகழ்ச்சிக்கான ஊட்டச்சத்து” சந்திரமோகன் சொன்னதும் செல்வராசின் முகம் மலர்ந்து புதிய அரங்கேற்றத்திற்கு மீண்டும் தயாராகிக் கொண்டிருந்தது.
“பேசுறதுதானே சார் நமக்கு பொழப்பு. வளரும் இளம் தலைமுறையினருக்கு நம்மால் முடிந்த சிறு பங்களிப்பு. அவ்ளோதான்…” செல்வராசு சொன்னதும் மீண்டும் கைகளை இறுக பற்றிக் கொண்டார் சந்திரமோகன்.
“இருந்தாலும் இந்தப் பேச்சு எல்லாராலயும் முடியாதுல…” புன்னகை பூத்தவாறு சிறிய காக்கி கவர் ஒன்றை அவர் கையில் கொடுக்க தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்.
“எனக்கும் டைம் ஆச்சு…! அப்ப நா கெளம்புறேன் சார்…” விழா அமைப்பாளர்களிடம் விடை பெற்று தன் வண்டியை நோக்கி சென்று கொண்டிருந்த அவரை இடைமறித்த மாணவர்கள் சிலர் அவருடன் கை குலுக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
சர்மியின் தோழிகள் எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் தன் அப்பாவை சந்திக்க மறுத்து விட்டாள். இவ்வளவு பேர் அப்பாவின் பேச்சை ரசிக்கின்றார்களே என்று எண்ணி எண்ணி பெருமிதம் கொண்டாள்.
“உங்க அப்பா வர்றத எதுக்குடி எங்ககிட்ட முன்னாடியே சொல்லல. சூப்பரா பேசுனாருடி…! ரொம்ப ஜாலியான டைப்போ… எங்கப்பாவும் இருக்காரே.. படிபடினு சொல்லியே உசுர எடுத்துருவாடி…!” கீதா சொல்ல… மெல்லியதாய் சிரித்துக் கொண்டாள் சர்மி.
முழுக்க முழுக்க தன் அப்பாவை பற்றிய நினைப்பிலேயே மூழ்கி இருந்தாள் சர்மி.
“என்னம்மா…? இன்னக்கி எங்கேயோ போறம்னு சொன்னியே…! எப்டிமா இருந்துச்சு” வீட்டுக்கு தன் தம்பியுடன் வந்த சர்மியிடம் ஆவலோடு கேட்ட அர்ச்சனாவிடம் உதடுகளை திறக்காமல் சிரித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் சர்மி. அம்மாவுக்கு தெரியாமலா அப்பா வந்துரும் பாரு என்ற கோபம் அவளுக்கு.

“ஆசையா கேட்டா… என்னம்மோ… சிரிக்கத்தெரியாதவமாறி பெத்தவகிட்டயே நமட்டு சிரிப்பு சிரிச்சுட்டு போறா…?” சொல்லிக் கொண்டே மாடிப்படியை தண்ணீர் ஊற்றி கழுவிக் கொண்டு இருந்தாள் அர்ச்சனா.
இரவு ஏழு மணி. வாசலில் பைக் சத்தம் கேட்கவும் வெளியே வந்தாள் அர்ச்சனா. கடுகடுத்த முகத்துடன் வண்டியிலிருந்து இறங்கினார் செல்வராசு. காலையில மான்விழி தேன்விழினு கவிதை பாடிட்டு போனவரு மொகமே செழிப்பா இல்லையே.. இவ வேற சாயந்தரம் வந்ததுலருந்து ஒன்னுமே சொல்லல… பேசப் போன எடத்துல எதுவும் பிரச்சனையா. என்ன ஏதுன்னு தெரியலையே. குழப்பத்துடனேயே… ” என்னங்க… முகம் கடுத்துப்போயிருக்கு? ஒடம்புக்கு ஏதும் சரியில்லையா..? வேணும்னா வரும்போதே சாத்தம்பட்டியாருக்கிட்ட ஒரு ஊசி போட்டுட்டு வந்துருக்கலாம்ல…!” அனுசரணையோடு கேட்டாள்.
“ம்….ஒடம்புக்கு என்ன கேடாம்?. ஒம் புள்ளைங்க என்ன பண்றாக…?” சிடுசிடுத்தார். அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. ஒருநாளும் இல்லாம அப்பனுக்கும் மகளுக்கும் என்னாச்சுனு தெரியலையே. வாசல்லயே அப்புடி கொதிச்சுப்போயி இருக்காரு உள்ள வந்து என்ன ஆட்டம் போடப்போறாரோ… எத்தனவாட்டி கேக்குறது.. அழுத்தக்காரி என்ன நடந்துச்சுனு சொன்னாளா… மனசுக்குள் ஏதேதோ ஓடியது.
“உள்ளதாங்க இருக்காங்க….” அர்ச்சனாவின் குரலில் தொய்வு இருப்பதை அவரால் உணர முடிந்தது.
“ம்…இருக்கட்டும்… இருக்கட்டும்…” அவரின் பேச்சில் கோபம் குறைந்ததாக தெரியவில்லை. ஆபிஸ் பேக்கை அவளிடம் கொடுத்தார். வாசலில் இருந்த வாளி தண்ணீரில் முகம் கால் கழுவிவிட்டு உள்ளே நுழைந்தார்.
“ஏங்க.. சுக்கு மல்லி காபி போடவா….”
அவர் எதுக்கும் இசைந்து கொடுப்பதாக இல்லை. என்ன நடந்தாலும் சரி…. பொறுத்திருந்து பார்ப்போம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டாள்.
அப்பாவை பார்த்தவுடன் வரவேற்பு அறையிலிருந்து தன் அறைக்குள் சென்றாள் சர்மி.
மோகன், எதையும் கண்டு கொள்ளாமல் மிச்சரை தின்றபடி டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தான்.
“இந்த டீவி இருவத்தேழாயிரம், சோபா பாஞ்சாயிரம், கட்டுலு மெத்தை, இதுல ஏசி வேற… நா கெவர்மெண்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். ஆனா ஓம் புள்ளைகள பணத்த வாரி எறச்சுல மெட்ரிக்குலேசன்ல சேத்து விட்டுருக்கேன்…”
“என்னங்க… இப்புடி… வந்ததும் வராம கோபப்படுறீங்க. எப்ப பாத்தாலும் புள்ளைங்க கிட்ட வெடுக்குவெடுக்குனு எறிஞ்சு விழுந்தா எப்புடிங்க உங்க மேல பாசம் வரும்…?” குரலை தாழ்த்தியே பேசினாள்.
“இவ்ளோ கண்டிசனா இருக்கும் போதே இப்புடினா… சிரிச்சுப் பேசுனே… ஏந் தலைல மொளகா அரைச்சுருவாங்க…!”
“இப்புடி எறிஞ்சு விழுகுற அளவுக்கு.. என்னங்க நடந்துச்சு…?” பேச்சில் அழுத்தம் கொடுத்தாள்.
“ம்… மத்தியானம் அவங்க ஸ்கூல் பிரின்ஸ்பாலு போன் பண்ணி சாய்ந்தரம் இப்புடியே ஒருஎட்டு வந்துட்டு போங்கனு சொல்லவும், நானும் ஆசையா போனேன். ஒம் மக எடுத்துருக்க மார்க் லெட்சணத்த காட்டுனாரு. எல்லாத்துலயும் பார்டர்லதான் நிக்கிறா…! எனக்குனு ஒரு இமேச் இருக்குல்ல… அங்க எதும் பேசமுடியல மூடிக்கிட்டு வந்துட்டேன்… மார்க் இல்லனா பின்னாடி சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான்… உள்ள அவ என்ன பண்றா…?” சோபாவில் உட்கார்ந்து இருந்தவர் அவள் அறையை நோக்கினார்.
“தல வலினுட்டு உள்ள போனாங்க….” சொல்லிக் கொண்டே “சர்மி….” என்றழைத்தாள்.
“என்னயத்தான் அவ, தலவலினு சொல்லிருப்பா…. இந்த வயசுலயே இப்புடினா… என்னத்த சொல்ல…” தன் உதட்டை லேசாக கடித்துக் கொண்டார்.
“எதுக்குங்க இப்புடியெல்லாம் பேசுறீக…” சொல்லிக் கொண்டே சமையலை கவனிக்க சென்றாள்.
கட்டிலில் படுத்தவாறு விழா நிகழ்வை அசை போட்டுக் கொண்டிருந்தாள் சர்மி.
கவிஞர் செல்வராசு பேசிக் கொண்டு இருந்தது கண் முன்னே நிழலாடியது
“எதுக்குத்தான் பெத்தவங்க பிள்ளைகள படி படினு டார்ச்சர் பண்றாங்களோ தெரியல…! இவங்க கெளரவத்துக்காக பணத்த கொட்டி சேத்து விட்டர்றது. அப்பறம் பணம் கட்டினே… பணம் கட்டினேனு புலம்பிக்கிறது.”
‘பெரிய பெரிய அறிஞர்களோட வரலாற பாத்தோம்னா எல்லாருமே கொஞ்சமா படிச்சவங்கதான். அதும் அரசாங்க பள்ளிக் கூடத்துலதான் படிச்சிருக்காங்க. அதுக்காக மத்த பள்ளிக்கூடங்கள் கொறச்சு சொல்லல. பெத்தவங்க நெனைக்கிறத படிக்கனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது. பிள்ளைங்களுக்கு எது விருப்பமோ அதுல அவுங்களுக்கு வழிகாட்டுனா முன்னுக்கு வருவாங்க. மார்க் நெறய எடுத்தாதான் வாழ்க்கைனா பல பேரு இப்ப உசுரோடவே இருக்க முடியாது. வெறுமென மனப்பாடம் பண்றத விட்டுட்டு கொஞ்சமா படிச்சாலும் புரிஞ்சு படிங்க.
மார்க் அதிகமா எடுத்தவங்க எல்லாரும் அறிவாளிக கிடையாது. கொறைவா எடுத்தாங்க முட்டாளும் இல்ல. தேர்வுங்கிறது எதிரி அல்ல. யதார்த்தமாய் அதை சந்திக்க கத்துக்கணும். சாதிப்பதற்கு எண்ணற்ற துறைகள் இருக்கு. எல்லாராலயும் சாதிக்க முடியும். பெருந்தலைவர் காமராசர் சொன்னது போல “முற்சியும், பயிற்சியும் இருந்தா வெற்றி நிச்சயம். அதுக்கு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கிற பழக்கத்த ஏற்படுத்திக்கனும். படிப்பு ரொம்ப முக்கியம். பெத்தவங்க ஆசைப்படுறது தப்பு இல்ல. நம்மோட ஆசைய திணிக்கிறதுதான் தப்பு..”
கண்களை திறந்தவள் கதவையும் திறந்தாள்.
“நாயி மாரி நானு கத்திக்கிட்டு இருக்கேன். பேனு காத்துல உள்ள சவுரியமா தூங்கிட்டு வர்றீகளா….” கடித்து குதறாத குறையாக கத்தினார். “இல்லங்கப்….” சொற்களை விழுங்கியவள் தலைகுனிந்தபடி கதவு ஓரமாய் நின்றாள்.
“என்ன நொல்லங்கப்பா….” கண்களை நெருப்பாக்கினார்.
“இவர என்னதான் பண்றதோ… எனக்கும் தெரியல..” சமையல் அறையில் இருந்த அர்ச்சனாவும் அவர் அருகில் வந்து சேர்ந்தாள்.
தலை குனிந்து நின்ற சர்மி… மெதுவாய் தலையை நிமிர்த்திக் கொண்டாள். இப்போது பேசத் தொடங்கினாள்.
“ஸ்கூல்ல இருந்து இன்னக்கி காலைல அகிலாபுரம் போயிருந்தோம்பா… அங்க ஒரு அதிசயம் நடந்துச்சு… கவிஞர் செல்வராசுங்குற பேச்சாளர் பேசுனது எங்க எல்லோருக்கும் பிடிச்சிருந்துச்சு. அத நெனச்சு பாத்துக் கிட்டு இருந்தேம்பா…”
ஒரு நிமிடம் கண்களை மூடி சோபாவில் சாய்ந்தவர், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா..? வெளியில் நாலு பேரு கை தட்டனுங்கிறதுக்காக பேசுறது எல்லாம் செயலுல காட்டுனா இங்க ஒரு பயலும் உருப்படியா வாழ முடியாது. சொல்றது ஒன்னு செய்றது ஒன்னுதான் ஆண்டாண்டு காலமா நடந்துக்கிட்டு இருக்கு… நா அப்பனா… இல்ல நீ என்ன பெத்தியா…. என் கேட்க வேண்டும் போல் மனசு அல்லாடியது. அர்ச்சனாவைப் பார்த்தார்…. கழுத்தை அசைக்காமல் கண்களைச் சுழல விட்டு சர்மியையும் மோகனையும் பார்த்தார். மூவருமே எதுவும் பேசாமல் தலை குனிந்தபடி நின்றனர். ஏதோ ஞானோதயம் வந்தவர் போல்,
“அர்ச்சனா என்னோட பேக்க எடு….!”
இப்ப எதுக்கு அத கேக்குறாரு… பதில் ஏதும் பேசாமல் எடுத்து வந்து கொடுத்தவள் கண்களால் என்னவென்று சைகை காட்டினாள் சர்மியிடம்,
அவளோ தெரியாது என்பதன் அடையாளமாக உதட்டைப் பிதுக்கினாள்.
பையைத் திறந்தவர் அந்த காக்கி கவரை எடுத்து தன் சட்டைப் பையில் வைத்தார். “ரோட்டரி கிளப் தலைவர பாத்துட்டு வந்தர்றேன்” சொல்லிக் கொண்டே வாசலுக்கு வந்தார்.
“பெத்த தகப்பனா இருந்தாலும் நா ஒரு வழிகாட்டிதானே…..” நினைத்தவாறு வண்டியில் அமர்ந்தவர் தன் மகளைத் திரும்பிப் பார்த்தார்.
சர்மியின் முகத்தில் மகிழ்ச்சி குடிகொண்டு இருந்தது. வண்டியை எடுத்தார். அப்போது யாரோ அலைபேசியில் தொடர்பு கொள்ள “வண்டியில போய்க்கிட்டு இருக்கேன் கொஞ்ச நேரம் கழிச்சு பேசவா..?” இணைப்பைத் துண்டித்தார்.
அர்ச்சனாவின் முகத்திலும் மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது. மெல்லியதாய் புன்முறுவல் பூத்தபடி வண்டியை ஓட்டத் தொடங்கினார் செல்வராசு.
![]()