“தந்தையர் தினம்” … ஏலையா க.முருகதாசன்.

இன்று தந்தையர் தினமாகும்.உலகுவாழ் அனைத்துத் தந்தையருக்கும் சிரம் தாழத்தி பணிவான வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.
தந்தையர் என்பவர்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டிகளாகவும் தியாகிகளாகவும் வாழ்ந்தார்கள் வாழ்பவர்கள்.
தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலும்,அவர்களின் மகிழ்ச்சியிலும் தமது வாழ்வு அதற்கானதே என அதில் மகிழ்ந்து புளகாங்கிதமடைந்து கரைந்து போகிறவர்களே பெற்றோர்கள்.
சனக்கூட்டத்தின் நடுவில் நாமே உயரமானவர்கள் என நினைக்குமளவுக்கு தோளில் இருத்தியும்,தோளில் நிற்க வைத்தும் தனது பிள்ளை சூப்பிய ஐஸ்பழத்தின் பாணி தனது தோளிலும் மார்பிலும் வழிந்து போவதைப் பிள்ளையை அண்ணாந்து பார்த்து மகிழ்ச்சியில் திளைப்பவர்தான் தந்தை.
அது கண்ட மனைவி சிரித்துக் கொண்டே உங்களைப் போலத்தானே உங்கடை பிள்ளையும் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே தனது சீலைத்தலைப்பால் தனது கணவனின் தோளிலும் நெஞ்சிலும் வழிந்த ஐஸ்கிறீம் பாணியை துடைத்து விடுவாள்.
ஓவ்வொருவருக்கும் அவரவர் பெற்றோர் தெய்வத்துக்கும் மேலானவர்களே.தந்தை சொல் மிக்க மந்திரமும் இல்லை தாயிற் சிறந்த கோவிலுமில்லை.
எனது தந்தையைப் பற்றி சொல்வதானால் எழுதுவதென்றால் அதுவே வரலாற்று நூலாகும்.
எனது தந்தை எனக்கு புத்திமதிகள் சொல்வார்.அவை பவுனாலை செய்த கத்தியென்று வயிற்றிலை குத்திப் பார்க்கக்கூடாது,கரும்பு இனிக்குதென்று வேரோடை கடிக்கக்கூடாது,பூக்களைக் கசக்கி மணக்கக்கூடாது, நீ போகும் பாதையில் முள்ளிருந்து அது உனது கண்ணுக்குத் தென்பட்டால் அதைக் கடந்து போகாது அந்த முள்ளை எடுத்து யாருக்கும் குத்தாதவாறு ஓரமாக போட்டுவிட்டுப் போக வேணும் என்பார் இப்படிப் பல.
ஒரு நாள் தபால்காரன் அண்ணைக்கு வந்த தபால் அட்டையை என்னிடம் தந்து அண்ணையிடம் கொடுக்கும்படி சொல்ல,அதை நான் வாசிக்க,அதைக் கண்டுவிட்ட அப்பு(தந்தை) யாருக்கு வந்த போஸ்ற்காட் என்று கேட்க,அண்ணைக்கென்றேன்,அப்ப எதற்காக நீ வாசிக்கிறாய் என்றார்,போஸ்ற்காட் என்றேன்,போஸ்ற்காட் என்றாலும் இன்னொருவருக்கு வந்ததை வாசிக்கக்கூடாது என்று புத்தமதி சொன்னார்.
நாங்கள் தோட்டக்காரக் குடும்பம்.எங்களுடைய அப்பு சீமெந்துத் தொழிற்சாலையிலும் வேலை செய்த தொழிலாளியுமாவார்.அதிகம் பள்ளிப்படிப்பு படிக்காதவர்.ஆனால் அவர் சொன்ன புத்திமதிகள் பெறுமதியானவை.அவை என்னை இன்றும் வழிநடத்துபவை.
![]()