கதைகள்

மனிதர்களைக் கண்டால் தூர விலகுங்கள்!… ஏலையா. க.முருகதாசன்

(இது ஒரு கற்பனைக் கதை. மனிதர்களைப் பற்றி மிருகங்கள் பறவைகள் இப்படியும் எடை போடலாம் என்பதிலிருந்து)

காட்டு மிருகங்களின் தலைமையகம் ஆபிரிக்க காட்டிலேதான் இருந்தது.சிங்கங்களே உலகிலுள்ள காடுகளின் மன்னர்களாக இருந்தார்கள். சிங்கச் சக்கரவர்த்தியும் ஆபிரிக்கக் காட்டிலேதான் இருந்தார்.

தங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாத காடுகளுக்கு தனக்கு அடுத்தபடியாக உள்ள வல்லமை பொருந்திய மிருகங்களை மன்னர்களாக நியமித்திருந்தார்.

அனைத்துக் காடுகளிலும் உள்ள சிங்கங்களும், சிங்கங்கள் இல்லாத காடுகளில் நியமிக்கப்பட்ட வல்லமை பொருந்திய மற்றை மிருகங்கள் தமக்கான ஏகோபித்த தலைவனாக ஆபிரிக்க காட்டில் உள்ள அனுபவசாலியும், அறிவார்ந்தவருமான சிங்கச் சக்கரவர்த்தி ஒருவரை தெரிவு செய்திருந்தனர்.

சிங்கச் சக்கரவர்த்தி எல்லாக் காடுகளிலும் இராஜதந்திரியாக நரிகளை நியமித்திருந்தார்.

அங்கிருந்த சிங்கச் சக்கரவர்த்தி தனது காட்டின் வெளியுறவுத்துறைச் செயலாளராக எல்லாக் காடுகளிலும் இராட்சத் கழுகுகளையே நியமித்திருந்தார்.

ஆபிரிக்க காட்டுத் தலைமையகத்திடமிருந்து வெளியுறவுத்துறைச் செயலாளரான கழுகு மூலமாக உலகில் உள்ள எல்லாக் காடுகளுக்கும் அவசரக் கூட்டம் என செய்தி பறந்தது.

செய்தியை வாசித்த காடுகளில் இருந்த மிருகங்களின் அரசாங்கங்கள் தமது சார்பாக, அவரவர் அரசாங்கத்தின் வெளியுறவுத்துறைச் செயலாளராக அங்கம் வகிக்கும் கழுகுகளையே தமது பிரதிநிதிகளாக அனுப்பி வைத்தனர்.

ஆபிரிக்க காட்டிலே கூட்டமென்பதால் காடுகளில் வாழுகின்ற அனைத்து மிருகங்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

சிங்கச் சக்கரவர்த்தி பேசத் தொடங்கினார்.’

எங்களுடைய அன்புக்குரிய சகோதரர்களே!,உலகிலுள்ள வேறு வேறு காடுகளில் இருந்து வந்திருக்கின்ற வெளியுறவுத்துறை செயலாளர்களான மதிப்புரிக்குரிய கழுகுகளே அனைவருக்கும் வணக்கம்.

இன்று இந்த அவசரக் கூட்டம் ஏனெனில்,உலகக் காடுகளிலுள்ள புலனாய்வுப் பிரிவினராகிய சிறு நரியினர் கொடுத்த தகவலின்படியே இந்த அவசரக் கூட்டம் கூட்டப்படுகிறது.

இப்பொழுது உலகில் எங்கும் மனித இனத்தின் நடமாட்டம் குறைந்து, அவர்கள் அனைவரும் தத்தமது வீடுகளுக்குள் யாருக்கோ பயந்து முடங்கிவிட்டதாகவும்,என்னைவிட,அன்புச் சகோதரர்களான யானையைவிட,ஒட்ட சிவிங்கியைவிட ,நம்முடைய முப்படைத்தளபதி புலியைவிட யாரைப் பார்த்து அவர்கள் வீட்டுக்குள் ஒடுங்கிவிட்டார்கள் என நான் எங்களுடைய புலனாய்வளர்களைக் கொண்டு துருவித் துருவி ஆராய்ந்த போது கொரொனோ என்ற உயிரினம் வெளிக்கிளம்பியிருப்பதாகச் சொன்னார்கள்’

‘கொரொனோ என்ற ஒரு உயிரினத்தை எங்களை அழிப்பதற்காக மனிதர்கள் உருவாக்கினார்களோ என்று நினைத்த நான் ,விடாப்பிடியாக ஆராய்ந்த போது அது வைரஸ் என்று தகவல் கிடைத்திருக்கின்றது’.
இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால்,சீனாவில் உருவாகிய இந்த வைரஸ் இப்ப உலகம் முழுவதும் பரவிவிட்டது.

‘அவர்கள் தம்மைத் தாமே அழிப்பதற்காக தன்வினையே தன்னைச் சூழும் என்பார்களே அது போல அவர்களையே அழிக்கத் தொடங்கிவிட்டது’
‘சீனா இதனைச் சரியான நேரத்தில் சொல்லாமல் விட்டதால் மனிதர்கள் இலட்சக் கணக்காக இறந்து கொண்டிருக்கிறார்கள்’

‘நரித்தனமான சிந்தனையால் பலரை இறக்கச் செய்த, அதுவும் தன்னுடைய சக மனிதர்களிடத்தில் வைரஸைப் பரவச் செய்த மனிதர்களை நம்பவே கூடாது…..’ என்று சொல்லி முடிக்கு முன் இராஜதந்திரி நரி கோபத்துடன் எழுந்து, சக்கரவர்த்தி அவர்களே! நான் – நரித்தனமான சிந்தனையால் என்று மனிதர்களைக் குறிப்பிடுவதை ஆட்சேபிக்கிறேன, ஏனென்றால் நரித்தனமான செயலைச் செய்பவன் நானே’ என்றது.

சிங்கச் சக்கரவர்த்தி ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு’ கோபப்படாதீர்கள் இராஜதந்திர நரி அவர்களே!,தங்களைவிட நரித்தனமுள்ள, உடம்பெல்லாம் விசக் குணமுள்ள மனிதர்கள் பலகோடிப்பேர் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்துதான் நீங்கள் பாடம் படிக்க வேண்டும்.

அவர்கள் நரித்தனத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள்.நிலைமை சீரானதும், ஒளிந்து சென்று சக மனிதர்களுக்கு குழிபறிப்பு வேலைகளை எல்லாம் எப்படிச் செய்கிறார்கள் எனக் கவனித்துக் கொள்ளுங்கள்’

‘வேண்டுமானால் நாய், பூனை, ஆடு, மாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.அவர்கள்தான் மனிதர்களுடன் அதிகமாகப் பழகுபவர்கள்’ என்று சொல்லி முடித்த சிங்கச் சக்கரவரத்தி,

‘எக்காரணம் கொண்டும் மனிதர்கள் இருக்கிற இடத்தைக் கண்டாலே விரைவாக அந்த இடத்தை விட்டுப் போய்விடுங்கள்.

அவர்கள் வேணடுமென்று தும்மியோ இருமியோ எம்மிருக இனத்துக்கும் கோதாரியான கொரொனோவை பரப்பி விடுவார்கள்.

மனிதர்களைக் கண்டால் சக உங்கள் நண்பர்கள் உறவுகளுக்கு எமது பொது மொழியான சப்தமெழுப்பி தெரியப்படுத்துங்கள்.

எங்கள் மொழி அவர்களுக்குப் புரியாது.மிக மிக முக்கியம் தன்னினத்தையே அழிக்க நினைக்கும் மனிதர்களிடமிருந்து தூர விலகி நில்லுங்கள்.எங்களைச் சும்மாவா விடுவார்கள்.

‘துட்டணைக் கண்டால் தூர விலகுங்கள்’ என்பார்களே.அது போல நடவுங்கள்.

இத்துடன் இந்த அவசரக் கூட்டம் நிறைவு பெறுகிறது.அந்தந்த காடுகளிலிருந்து வந்த வெளியுறவுத்துறைக் கழுகுச் செயலாளர்கள் உடனடியாக தங்கள் தங்கள் காட்டரசாங்கத் தலைவர்களிடம் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்து நடைமுறைப்படுத்த வேண்டிய முடிவுகளை தெரிவிப்பதற்காக உடனேயே புறப்படுங்கள் ‘ என்று சொல்லி ஆபிரிக்காவிலுள்ள சிங்கச் சக்கரவர்த்தி கூட்டத்தை அவர்ளுக்கான தேசிய கீதமான ‘ஒன்றாய் இருப்போம், ஒற்றுமையாய் இருப்போம்.நல்மனம் கொண்டே வாழ்வோம் வாழ்வோம்.ஒன்றபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் அழிவாகும்’ என்று பாடி நிறைவு செய்து .வைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *