இலக்கியச்சோலை

அமுத விழாக் காணும் ஊடகத்தில் பிரகாசித்த எஸ்.கே.காசிலிங்கம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈழத் தமிழரின் கலாச்சார பண்பாட்டு தலைநகரமான யாழ்ப்பாணத்திலிருந்து மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன் பத்திரிகைகள் எதுவும் இல்லாத பெரும் குறையைப் போக்க 1958 ஆம் ஆண்டில் ஈழநாடு முதலில் வெளிவரத் தொடங்கியது.
இந்த ஊடக பாரம்பரியத்தில் உருவாகிய ‘எஸ்.கே.காசிலிங்கம்’ ஐரோப்பிய நாடுகளிலும் பிரகாசமான ஊடகவியலாளராக மிளிர்கிறார். அவரின் வாழ்க்கையின் உன்னதத்தை வெளிப்படுத்தும் வண்ணம் அமுத விழா நடைபெறுகிறது.
யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையிலும் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையிலும் தன்னை ஊடகவியலாளராக இணைத்துக் கொண்ட எஸ்.கே.காசிலிங்கம் தனது வாழ்க்கையிலும் பத்திரிகைத் துறையிலும் பெற்றுக் கொண்ட அனுபவங்களையெல்லாம் தொகுத்து ‘எனக்குள் என்னோடு’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூல் பற்றிய சிறு பார்வையை இவ்வாக்கம் அலசுகிறது.
நம் தமிழ் மண்ணை, நம் தமிழராலேயே, நம் தமிழர் நலன் காத்திட வேண்டுமென்ற பேரவாவின் பேறாய் உதயமானது தான் ஈழநாடு பத்திரிகை.  இப்பத்திரிகை எத்தனையோ இன்னல்களுக்கும் இடர்களுக்கும் இழப்புகளுக்கும் மத்தியில் சாம்பலிருந்து உயிர் பெற்றுப் பறக்கும் பறவை போன்று உயர உயர பறந்தது என்கிறார் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சசிபாரதி சு.சபாரத்தினம்.
விடிந்தும் விடியாததுமாய் உள்ளூர் பத்திரிகையை வாங்கிப் படிக்குமளவுக்கு ஈழநாடு எம்மவரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்றால் அது ஒரு வியத்தகு சாதனை தான். அன்று தேசியத்தில் பற்றும் நம்பிக்கையும் கொண்டிருந்த தமிழர் விழித்துக் கொண்டனர். யாழில் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய பெருமை ஈழநாடு பத்திரிகையையே சாரும்.
அரசியல் மற்றும் சமூக இடர்ப்பாடுகளையெல்லாம் தைரியமாக ஊடறுத்துப் பத்திரிகையின் இலட்சியத்திற்காய் உழைத்தவர் கோபு. திரு. காசிலிங்கம் உட்பட என்கிறார் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சசிபாரதி சு.சபாரத்தினம்.
தமிழரின் குரலாக ஈழநாடு:
1960 களில் கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு தான் யாழ்ப்பாணத்திலும் மதிப்பளித்தார்கள்.ஆனால் அதனை தகர்த்து, பல காலமாக நஷ்டங்களையும், கஷ்டங்களையும் அர்ப்பணித்ததின் பயனாக, வடக்கே ஒரு சூரியனாக ஈழநாடு உருப்பெற்று ஊருக்கெல்லாம் வெளிச்சம் தந்தது.
ஈழத் தமிழர்கள் அவ்வெளிச்சத்தின் வழியே நடைபோட்டனர். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஓர் இடத்தை, தனித்துவத்தை – ஈழநாடு பெற்றது என்கிறார் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சசிபாரதி சு.சபாரத்தினம்.
ஈழநாடும் காசிலிங்கமும் :
இப்படியாகவே ஈழநாடு வேகமாக ஓடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தான் எஸ்.கே.காசிலிங்கம் அவர்கள் ஆசிரியர் பகுதியில் நுழைந்தார். அவரும் ஒரு வேக ஓட்டக்காரர்தான். அவர் நடந்து சென்றதை நான் பார்த்ததில்லை.
மிகுந்த மதிநுட்பமும் சுறுசுறுப்பும் கொண்ட திரு. காசிலிங்கம் தொடர்ச்சியாக அவர் ஆசனத்தில் இருந்ததையும் எவரும் கண்டதில்லை. ஆசிரியர் பகுதியில் ஒரு பயிற்சியாளனாகச் சேர்ந்த அவர், ஓரிரு நாட்களிலேயே பிரகாசிக்கத் தொடங்கிவிட்டார் என்கிறார் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சசிபாரதி சு.சபாரத்தினம்.
எனக்குள் என்னோடு :
மூத்த பத்திரிகையாளர் எஸ்.கே.காசிலிங்கம் தனது வாழ்க்கையிலும் பத்திரிகைத் துறையிலும் பெற்றுக் கொண்ட அனுபவங்களையெல்லாம் தொகுத்து ‘எனக்குள் என்னோடு’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். இந்நாலின் என்னுரையில் தான் கண்டுகொண்ட மானிடர்களையும் பதிவு செய்யும் வகையில் நூலொன்றையாவது வெளியிட வேண்டுமென்று நீண்டகாலமான தனது விருப்பத்தினை இந்நூல் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் ஈழநாடு காரியாலயத்தில் காசிலிங்கம் பணியாற்றிய காலத்தில் கிடைத்த அனுபவங்களை நூலாக்கும் தனது ஆசையை ‘எனக்குள் என்னோடு’ என்ற நூல் மூலம் நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
இலங்கை அரசியலில், சிங்கள அரசுகள் திட்டமிட்டு தமிழரை ஏமாற்றி வருகிறார்கள் என்பதையும், தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற பார்வை காரணமாகவே, ஈழத் தமிழர் அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதையும் பதிவு செய்யவேண்டுமென்ற நோக்கமும் இந்நூல் எழுத தன்னைத் தூண்டியது என்கிறார் எஸ்.கே.காசிலிங்கம்.
தன் இதயத்தில் பொதிந்துகிடந்த – மறைந்து கிடந்த – பல நிகழ்வுகளை நூல் வடிவில் கொண்டுவர வேண்டுமென்று விரும்பியதால் இதனை மூன்று பெரும் தலைப்புகளில் படைத்து, ‘என்னுள் என்னோடு’ என்று எஸ்.கே.காசிலிங்கம் பெயரிட்டு உருவாக்கியுள்ளார்.
அத்துடன் எஸ்.கே.காசிலிங்கம் சிறு வயதிலேயே பத்திரிகைத் துறையில் நாட்டம்கொண்டு, ஈர்க்கப்பட்டு, யாழ்ப்பாணம் ‘ஈழநாடு’ பத்திரிகையில் சேர்ந்து, அங்கு ஏற்பட்ட பலவிதமான அனுபவங்களை, ‘பத்திரிகை அனுபவங்கள்’ என்ற முதலாம் பாகத்தில் பதிவு செய்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவற்றை ‘பாரிஸ் ஈழநாடு’, ‘லண்டன் தமிழன்’ ஆகிய பத்திரிகைகளில் ஏற்கனவே வெளிவந்துள்ளன.
இரண்டாம் பாகத்திற்கு ‘அரசியல்’ என்று தலைப்பிட்டு, இலங்கையில் 1948ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, மாறி மாறி வந்த அரசாங்கங்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து, தமிழர்களை எப்படியெல்லாம் ஏமாற்றி, தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எஸ்.கே.காசிலிங்கம் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
மூன்றாம் பாகத்திற்கு, ‘புலம்பெயர் வாழ்வியல்’ என்று தலைப்பிட்டு ஐரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும், வளர்ந்து வரும் தமிழெழுச்சியையும் எஸ்.கே.காசிலிங்கம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதில் பெரும்பாலானவை லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (I.B.C.) நிகழ்ச்சிகளில் எஸ்.கே.காசிலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழநாடு ஊடக பாரம்பரியத்தில் செழித்து வளர்ந்த ‘எஸ்.கே.காசிலிங்கம்’ ஐரோப்பிய நாடுகளிலும் பிரகாசமான ஊடகவியலாளராக என்றும் மிளிர்கிறார். அவரின் வாழ்க்கையின் உன்னதத்தை வெளிப்படுத்தும் வண்ணம் அமுத விழாவில், கங்காருகள் தாவித் திரியும், சிங்காரத் தமிழர் வாழும் அவுஸ்திரேலிய மண்ணில் இருந்து வாழ்த்துவதில் மிக்க பெருமை அடைகிறோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *