இலக்கியச்சோலை

ஆஸியில் விருது பெறும் இலக்கியப் படைப்பாளி தமிழ்மணி அகளங்கன்!; ஐங்கரன் விக்கினேஸ்வரா

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நடைபெறும் தமிழ் விழாவில் ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர், மூதறிஞர், கலாபூசணம், கலைமாமணி, தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
குயின்ஸ்லாந்தில் தமிழ் விழா:
தமிழ் இலக்கியத் தோட்டம் நடாத்தும் விருது வழங்கும் விழாவும் இலக்கியச் சங்கமமும் எதிர்வரும் 25-05-2025 ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர், மூதறிஞர், கலாபூசணம், கலைமாமணி, தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கம், தமிழ் நாட்டு தமிழறிஞர், நாவலர், எழுச்சிக் கவிஞர் எ.இரவிச்சந்திரன் (கதிர்மதியன்) அவர்களுக்கும் விருது வழங்கப்பட உள்ளது.
நீண்டகாலமாக தமிழ் இலக்கியத் துறையில் தொடர்ந்து பணியாற்றி வருவதுடன், அவர்களின் இலக்கிய பொன்விழா நிறைவையொட்டி மாபெரும் விருது வழங்கும் விழாவும் இலக்கியச் சங்கமமும் நடைபெற உள்ளன.  தமிழ்மணி அகளங்கன் பல்துறை சார்ந்த இலக்கியப் படைப்பாளியாவார். இவரது இயற்பெயர் நா. தர்மராசா. 1970களில் இருந்து எழுத ஆரம்பித்த அகளங்கன் 2005 வரை இலக்கியம், சிறுகதை, ஆய்வு, கவிதை, நாடகம், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள் உள்ளடங்கலாக முப்பது நூல்களை வெளியிட்டார்.
இலக்கிய விருது விழா:
ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர், மூதறிஞர், கலாபூசணம், கலைமாமணி, தமிழ்மணி அகளங்கன் தமிழ் இலக்கியத் துறையில் பொன்விழா நிறைவையொட்டி மாபெரும் விருது வழங்கும் விழாவும் இலக்கியச் சங்கமமும் பிரிஸ்பேர்னில் நடைபெற உள்ளன.
பல இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு இவ்விரு பெருமகனார்களும் தமிழ் இலக்கியத் துறையில் ஆற்றிய சாதனைகளை எடுத்தியம்பி அவர்களைக் கௌரவிப்பதுடன் பல மேடை நிகழ்ச்சிகளும் அரங்கேறவுள்ளன.
தமிழ்மணி அகளங்கன் கணித விஞ்ஞானத்துறையில் கற்று அத்துறையில் ஆசிரியப்பணி புரிந்தபோதும், சுயமாகவே பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று, பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார்.
அக்காலத்தில் சிரித்திரன் ஆசிரியர் அமரர் சி. சிவஞானசுந்தரம் அவர்களின் ஆலோசனையின்படி இலக்கியச்சிமிழ், இலக்கியத்தில் நகைச்சுவை என்ற தலைப்புக்களில் இரு கட்டுரைத் தொடர்களை சிரித்திரனில் எழுதியதோடு, “வாலி கொலைச்சரமும் கேள்விச்சரமும்” என்ற தலைப்பில் ஈழநாடு பத்திரிகையில் தொடர்கட்டுரை ஒன்றையும் எழுதினார்.
தொடர்ந்து ஈழமுரசு, முரசொலி, வீரகேசரி, தினகரன், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், பல சஞ்சிகைகளிலும் பல பழந்தமிழ் இலக்கிய கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். எழுதுவதுடன் பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள், ஆலயங்களில் சொற்பொழிவுகள் என பல நிகழ்வுகளைச் செய்துள்ளார்.
மெல்லிசைப் பாடல்கள் :
வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றிலும் நிகழ்ச்சிகளை தமிழ்மணி அகளங்கன் வழங்கியுள்ளார். எழுபதுகளின் பிற்பகுதியிலேயே இவரது மெல்லிசைப் பாடல்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அதில் “சேற்றுவயல் காட்டினிலே” என்ற கிராமிய மெட்டுக் கொண்ட பாடல் புகழ் பெற்ற பாடலாகும்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் பல சொற்பொழிவுகளை ஆற்றிய இவர், எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து ஏராளமான வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து கவியரங்கங்கள், கவிதைக்கலச நிகழ்வுகளில் ஏறக்குறைய நூறு நிகழ்ச்சிகள் நடத்தி, இளங்கவிஞர்களது பல கவிதைகளை வானலையில் தவழ விட்டார்.
இவரின் “ஜின்னாவின் இரட்டைக் காப்பிய ஆய்வு” என்ற நூல் தமிழ்நாட்டு ஆளுநர் பாத்திமா பீபியால் வெளியிடப்பட்டது. மகாகவி பாரதியாரின் சுதந்திரப்பாடல்கள் ஆய்வு நூல் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது. வாலி ஆய்வு நூல் பட்டப்படிப்பு துணைப் பாடநூலாக பயன்படுகின்றது.
ஐம்பத்தி மூன்று நூல்கள்:
தமிழ்மணி அகளங்கனின் ஐம்பத்தி மூன்று ஆக்கங்கள் நூல்வடிவம் பெற்றிருக்கின்றன. இவற்றில் வாலி(ஆய்வு), செந்தமிழும் நாப்பழக்கம்(சிறுவர் பேச்சு), சுட்டிக் குருவிகள்(மழலைப் பாடல்கள்), சின்னச் சிட்டுக்கள் (சிறுவர் பாடல்கள்), ஆகிய நான்கு நூல்கள் மூன்று பதிப்புகள் கண்டிருக்கின்றன.
இலக்கியச் சிமிழ்(கட்டுரைகள்), நாமறிந்த நாவலர், நளவெண்பா(கதை), திருவெம்பாவை (உரை), பன்னிரு திருமுறை அறிமுகம், வெற்றி வேற்கை,(உரை), பந்தடிப்போம்(சிறுவர் பாடல்கள்), சிரிக்கவிடுங்கள்(சிறுவர் பாடல்கள்), ஆகிய எட்டு நூல்கள் இரண்டு பதிப்புகள் கண்டிருக்கின்றன.
இலங்கை அரசின் கலாசார அமைச்சினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த நூல்களுக்கான உயர் விருதான அரச இலக்கிய விருது (தேசிய சாகித்திய விருது) எனது நான்கு நூல்களுக்குக் கிடைத்திருக்கின்றது. சிறப்புச் சான்றிதழ் நான்கு நூல்களுக்குக் கிடைத்துள்ளது.
அத்துடன் வடக்கு கிழக்கு மாகாண சிறந்த நூற்பரிசு இரண்டு நூல்களுக்குக் கிடைத்துள்ளது. வடக்கு மாகாண சிறந்த நூற்பரிசு ஆறு நூல்களுக்குக் கிடைத்துள்ளது.
மேலும் தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் அறந்தை நாராயணன் நினைவு சர்வதேச சிறந்த நூல் விருது, தமிழ் நாடு எஸ்.ஆர் எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராய சர்வதேச சுவாமி விபுலானந்தர் நினைவு சிறந்த நூல் விருது, தமிழ் நாடு திருப்பூர் கவிஞர் சுகந்தி சுப்பிரமணியம் நினைவு சர்வதேச விருது ஆகிய விருதுகளை எனது நூல்கள் பெற்றிருக்கின்றன.
இலங்கை அரசின் கலாசார அமைச்சின் கலாபூஷணம், இந்துகலாசார அமைச்சின் தமிழ் மணி, கலை மாமணி, முதலான அரச பட்டங்களைப் பெற்றதுடன், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் அறிஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
இலங்கை கல்வி அமைச்சின் எழுத்துத் துறைக்கான வாழ்நாட் சாதனையாளர் விருது, வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சங்கச் சான்றோர் விருது, இந்திய புதுச்சேரி மாநிலத்தின் குழந்தைகள் கலைக்கழக செம்பணிச்சிகரம் விருது, ஐ.பி.சி வானொலி தொலைக்காட்சி நிறுவனத்தின் பழந்தமிழ் ஆளுமைக்கான விருது, இலண்டன் இலங்கை இலக்கிய நிறுவகத்தின் வாழ்நாட் சாதனையாளர் விருது, கொழும்பு கம்பன் கழகத்தின் நுழைபுலம் ஆய்வு விருது, மன்னார் அறநெறிப் பாடசாலைகளின் ஒன்றியத்தின் நாவலர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
யாழ்.இலக்கிய வட்டத்தின் நாடகத் துறைக்கான கலைப் பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை விருது, யாழ்.இலக்கிய வட்டத்தின் முத்தமிழுக்கான முத்தமிழறிஞர் சொக்கன் விருது, மன்னார் மாவட்ட சைவக் கலை இலக்கிய மன்றத்தின் பாரதி விருது, வவுனியா தமிழ் விருட்சம் தொண்டு அமைப்பின் வாழ் நாட் சாதனையாளர் விருது, வவுனியா நகர சபையின் உயர் விருது, அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் (SCSDO), பன்முக கலை ஆளுமை என்ற துறைசார் ஆளுமைக்கான விருது முதலான பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
மேலும் தமிழ் நாடு திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகத்தின் தமிழ் முகில், செந்தமிழ்ப் பாரிவேள், வவுனியா இந்துமாமன்றத்தின் காவியமாமணி முதலான முப்பதிற்கும் மேற்பட்ட சிறப்புப் பட்டங்கள் பேச்சு, எழுத்து முதலான பணிகளுக்காகக் கிடைத்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *