பாடும்மீன் ஸ்ரீ கந்தராசாவின் இரு நூல்களின் அறிமுக விழா

சிறுகதைத்தொகுப்பு) நூல் குறித்து செங்கதிரோன்
த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நயவுரை
பாடும்மீன் ஸ்ரீ கந்தராசாவின் (அவுஸ்திரேலியா) ‘இன்னும் கன்னியாக ……’ (சிறுகதைத் தொகுப்பு), ‘சங்க இலக்கியக் காட்சிகள்’ (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா 19.04.2025 அன்று மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தில் அதன் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற போது, ‘இன்னும் கன்னியாக ………’ (சிறுகதைத்தொகுப்பு) நூல் குறித்து செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நயவுரை.
தமிழ்ச் சூழலில் கதைசொல்லும் மரபு காலம்காலமாக இருந்துவந்துள்ளது. கதை சொல்லிகள் இருந்திருக்கிறார்கள். கதைகள் செய்யுள் வடிவங்களிலும் வடமொழியைத் தழுவிப் படைக்கப்பெற்ற புராண, இதிகாச வடிவங்களிலும் தமிழ்மொழியில் காப்பிய வடிவங்களிலும் கதைகள் பயிலப்பட்டு வந்துள்ளன. வடமொழிப் படைப்பைத் தழுவிப் படைக்கப்பெற்ற மகாபாரத்தில் பிரதான கதையிலிருந்து கிளைவிட்ட பல உபகதைகள் உண்டு.
தமிழர் மரபில் கதைகள் புதியனவல்ல. எழுத்தாளர் அகிலன் அவர்கள் தமிழில் முதல் எழுந்த
நாவல் ‘சிலப்பதிகாரம்’ தான் என்பார்.
ஐரோப்பியரின் வருகைக்கு முன்பே தமிழர்களிடம் எழுத்தாணியும் ஓலையும் இருந்தபோதே கதைகள் உலாவந்தன. ஐரோப்பியரின் வருகையால் அறிமுகமான அச்சியந்திரமும் தாளும் ஏற்கெனவே தமிழர்களிடமிருந்த கதைகூறும் மரபில் ஒரு புதிய பாய்ச்சலை – மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அந்தப் பாய்ச்சலுக்கும் – மாற்றத்திற்கும் உரைநடை வளர்ச்சி ஊக்கியாக அமைந்திருக்கக்கூடும்.
சிலப்பதிகாரக் காலத்திலேயே தமிழில் உரைநடையின் ஊற்றுக்கண் திறந்தாகிவிட்டது. அதனால்தான் சிலப்பதிகாரக் காப்பியம் உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள் எனப்படுகிறது. ஆனால், தமிழில் மெத்தப்படித்த ‘மேதாவி’கள் பலர் தமிழில் புனைகதை இலக்கியம் ஐரோப்பியர் வருகையால்தான் அறிமுகமாகிற்று என எழுதியும், பேசியும் வருகிறார்;கள். ஆரம்பகாலத்தில் தமிழில் உரைநடையில் எழுந்த நாவல்கள் ஆங்கில நாவல்களைத் தழுவி எழுதப்பட்டமை இதற்குக் காரணமாயிருக்கலாம். எனினும் இத்தகையோருக்குத் தங்கள் மெத்தப்படித்த மேதாவிலாசங்களைக் காட்ட இப்படியான கூற்றுக்களை முன்வைப்பது ஒரு ‘மேனியா’ ஆகிவிட்டது. ஆம்! எல்லாமே மேற்கிலிருந்து வந்தது என்று கூறுவது இவர்களுக்கு ஒரு ‘மேனியா’.
இது ஒரு புறமிருக்க, தற்போதைய அம்பாறை மாவட்டத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் உள்ளடக்கிய மட்டக்களப்பு மாநிலத்திலிருந்து அதாவது மட்டக்களப்புத் தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த மட்டக்களப்பு மண்ணின் மைந்தர்கள் பலர் படைப்பாளிகளாகவும் பிரகாசிக்கின்றார்கள். அவ்வாறானவர்களில் ‘இன்னும் கன்னியாக….!’ எனும் இச் சிறுகதை நூலின் ஆசிரியர் நண்பர் பாடும்மீன் ஸ்ரீ கந்தராசா முன்வரிசையில்; வைக்கப்பட வேண்டியவர்களுள் ஒருவராகிறார். படைப்பாளியாக மட்டுமல்ல கலை இலக்கியச் செயற்பாட்டாளராகவும் திகழ்கிறார்.
இப்படைப்பாளிகளில் சிறுகதைத்துறை சார்ந்தவர்களும் உள்ளனர். நான் அறிந்தவரை திருக்கோவிலைச் சேர்ந்த கோவிலூர் செல்வராஜன் புலம்பெயர்ந்து சென்று நோர்வே நாட்டில் வசிக்கும்போது 1997 ஆண்டென்று நினைக்கிறேன், ‘விடியாத இரவுகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டார். அதன் வெளியீடு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. அப்போது அதன் நயவுரையை நான் ஆற்றியிருந்தேன்.
கோவிலூர் செல்வராஜன் அவர்கள் நோர்வே நாட்டிலிருந்து லண்டனுக்குச் சென்றபின் அவ்வப்போது இலங்கைக்கு வந்து “ஊருக்குத்திரும்பணும்” – “கொத்துரொட்டி” , “நல்லது நடக்கட்டும்” ஆகிய சிறுகதைத் தொகுதிகளை வெளிக்கொணர்ந்துள்ளார். இவை முறையே 2016, 2018, 2023 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன. ‘நல்லது நடக்கட்டும்’ எனும் நூல் மகுடம் பதிப்பகத்தின் 73 ஆவது வெளியீடாக வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லண்டனிலிருந்து அக்கரைப்பற்றுக் கோளாவில் ஊரைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ‘அம்மா என்ற ஒருபெண்’ – ‘நாளைக்கு இன்னொருத்தன்’ – ‘ஏக்கம்’ – ‘அரைகுறை அடிமைகள்’ – ‘இலையுதிர் காலத்தில் ஒரு மாலை நேரம்’ ஆகிய சிறுகதைத் தொகுதிகளை லண்டனில் வெளியிட்டார்.
லண்டனில் வதியும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் இளவலும், புனைகதை எழுத்தாளருமான விமல் குழந்தைவேல் ‘தெருவில் அலையும் தெய்வங்கள்’ – ‘அவளுக்குள் ஒருத்தி’ – ‘அசதி’ – ‘குறளிக்குஞ்சன்’ ஆகிய சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டார்.
ஏறாவூரைச் சேர்ந்தவரும் ஜேர்மனியில் வசிப்பவருமாகிய கௌசி என அறியப்பட்;ட திருமதி.சந்திரகௌரி சிவபாலன் ‘வெள்ளையுடைக்குள் கரையும் பருவம்’ எனும் சிறுகதைத் தொகுதியை 2016 இல் வெளியிட்டார்.
தேற்றாத்தீவைச் சேர்ந்த கனடாவில் வதியும் சக்கரவர்த்தி சிறுகதைகள் எழுதியிருந்தாலும் சிறுகதைத் தொகுப்பு எதுவும் போட்டாரா என்று தெரியவில்லை.
கிறிஸ்டி நல்லரட்ணம், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவுஸ்ரேலியா மெல்பேர்னில் வதிபவர்.
சிறுகதைகள் படைத்துள்ளார். அவரும் சிறுகதைத் தொகுப்பு போட்டாரா என்று தெரியவில்லை.
எனக்குத் தெரியாத – நான் அறியாத தகவல்களும் இருக்கலாம். எனினும் இத்தருணத்தின் பொருத்தப்பாடு கருதி எனக்குத் தெரிந்த – நான் அறிந்த தகவல்களையே இங்கு முன்வைத்தேன். ஏதாவது தகவல்கள் விடுபட்டிருந்;தால் சம்பந்தப்பட்டவர்கள் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும்.
இந்தத் தகவல்களின் பின்னணியில் இன்று இலங்கையில் மட்டக்களப்பில் அறிமுகம் செய்யப்படுகின்ற நண்பர் பாடும்மீன் ஸ்ரீ கந்தராசாவின் ‘இன்னும் கன்னியாக……’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூலிலுள்ள கதைகளை நயக்கும் பணியைத் தொடங்குகிறேன்.
மொத்தம் பத்து சிறுகதைகளை உள்ளடக்கியுள்ள இந்நூலின் முதல்கதை ‘காணாமல் போனவள்’.
சரவணனின் மனைவி பாமினி இலங்கையில் திடீரென்று காணாமல் போகிறாள். இரண்டு வருடங்களாகத் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தாம்பத்திய அறத்தில் அடுத்தடுத்தப் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுடனும் மூன்றாவதாகப் பிறந்த ஆண் குழந்தையுடனும் தாயும் தந்தையுமாகவிருந்து சரவணன் வாழ்க்கையை ஓட்டுகிறான். பாமினி வெள்ளைவேனில் கடத்தப்பட்டு உயிரோடு இல்லையென்பதே எல்;லோருடைய ஊகமாகிறது. மனைவி காணாமல்போய் இரண்டு வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் வதியும் சரவணனின் சித்தப்பா மகன் ஆனந்தனிடமிருந்து வந்த தொலைபேசிச் செய்தியும் தொடர்ந்து மின்னஞ்சலில் வந்த படமும் ஆனந்தனின் நெஞ்சை உலுக்குகின்றன.
பாமினி கடத்தப்படவில்லை. சரவணனின் நண்பனான கேசவன் என்பவனுடன் அவுஸ்திரேலியாவுக்கு ஓடிப்போய் அங்கு அவனுடன் இருப்பதை ஆனந்தன் கண்டு அதன் விபரங்களைச் சரவணனுக்குத் தெரியப்படுத்தியதே அந்தச் செய்தியும் படமும்.
பலவிதமான மனப்போராட்டங்களுக்குப் பின்னர் சரவணன் எடுக்கும் முடிவுதான் இக்கதையின் உச்சம்.
தனது குடும்பத்தின் கௌரவத்தையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் எண்ணித் தனது மனைவி காணாமல் போனவளாகவே காலம் முழுவதும் இருக்கட்டும் என எண்ணி எந்த எதிர்வினையும் ஆற்றாது அமைதியாகிறான். ஒரு வாழ்வியல் பிரச்சினையைச் சொல்வது மட்டுமல்லாமல் அப்பிரச்சினைக்கு அறிவு பூர்வமான தீர்வையும் தருகிற அருமையான கதை.
பாமினி எவ்வாறு காணாமல் போனாள் என்கின்ற கேள்வியுடன் வாசகனின் ஆவலைத் தூண்டும் கதையின் எடுப்பும் அதாவது ஆரம்பமும், உண்மையில் அவள் காணாமல் போகவில்லை, வேறொரு ஆடவனுடன் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறாள் என்ற திடீர்த் திருப்பத்துடனான கதையின் தொடுப்பும், பிரச்சினைக்குத் தீர்வாகச் சரவணன் எடுக்கும் முடிவும் அதாவது கதையின் முடிப்பும் ஒரு சிறந்த சிறுகதையொன்றிற்கான எடுப்பு – தொடுப்பு – முடிப்பு ஆகிய கூறுகள் அவற்றின் கலைத்துவம் குன்றாமல் கையாளப்பட்டிருக்கின்றன. நூலாசிரியரின் புனைவாற்றலும் மொழிப்புலமையும் சிற்றாறு ஒன்று வளைந்தும் நெளிந்தும் ஓடுவது போன்ற இயல்பான எளிமையான மொழிநடையும் இக்கதைக்குப் பெறுமதி சேர்க்கின்றன.
‘மின்னஞ்சலில் அவன் (ஆனந்தன்) அனுப்பி வைத்த படத்தைப் பார்த்ததும் வெடிகுண்டாக நெஞ்சுக்குள் வெடித்துச் சிதறியது’ என்கின்ற வாக்கியமும்,
‘சரவணனின் இதயம் சடாரென்று அறுந்து வயிற்றுக்குள் விழுந்து எரிவதுபோல இருந்தது’ என்கின்;ற வரிகளும்
உணர்வு வெளிப்பாடுகளை வாசகனின் உள்ளத்திலும் தொற்றவைக்கும் வகையில், மொழியைக் கையாளும் வித்தை நண்பர் பாடும்மீன் ஸ்ரீ கந்தராசாவுக்குக் கைகூடியுள்ளது என்பதற்குக் கட்டியம் கூறுகின்றன.
ஒரு பானைச் சோற்றுக்கு சில பருக்கைகளே பதம் என்பது போல – ஒவ்வொரு கதையாக நயம் கூறுவது நேரத்தை விழுங்கிவிடும் என்பதால் இரண்டாவது கதையான ‘எனக்காகவா நான்…?’ எனும் கதையை வாசகர்களிடம் விட்டுவிட்டு அடுத்த கதையான இந் நூலின் தலைப்புக் கதையான ‘இன்னும் கன்னியாக….!’ எனும் கதைக்கு வருகிறேன்.
‘சிங்கப்பூர் விமான நிலையத்தில் மாற்று விமானத்திற்குக் காத்திருக்கும் பயணிகள் தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கிறாள் மாலதி. மெல்பேணிலிருந்;து பயணித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு சிங்கப்பூரில் மூன்று மணிநேரத் தரிப்பு. கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்கிறாள். கொழும்புக்கான விமானம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. விமானத்தினுள் பயணிகளை அனுமதிப்பதற்கு இன்னும் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். அதுவரையில் சாய்வுக் கதிரையில் கொஞ்சம் கண்ணயரலாம் என்றால் எண்ண அலைகள் எம்பிக் குதித்து அவளின் இதயத்தில் மோதிக்கொண்டிருந்தன. தன் வாழ்வில் ஏற்பட்டுவிட்ட நிகழ்ச்சிகள் தொடர்பான சோகம், மாறாத காயமாக மனதில் எரிந்து கொண்டிருந்தது’.
இவ்வாறு ஆரம்பிக்கும் கதை பின்னர் ‘குடயளா டியஉம’ இல் திரும்புகிறது. மாலதி வசதியான குடும்பத்துப் பெண். அழகானவள். யாழ் பல்கலை;ககழகத்தில் படித்த பட்டதாரி ஆசிரியை. தந்தை கருணாகரன் இளைப்பாறிய சுங்க அதிகாரி. தாய் ஜானகி ஆசிரியை. கொழும்பு வெள்ளவத்தையில் வசதியாகப் பெற்றோருடன் சொந்த வீட்டில் வசித்தவள். யாழ்ப்பாணத்திலும் வீடுள்ளது. வங்கியொன்றிற்குக் கொழுத்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
மாலதியின் குடும்ப நண்பர் கோவிந்தராஜன் மூலம் அவுஸ்திரேலியாவில்; வதியும் துஷ்யந்தன் எனும் பொறியியலாளருக்கு வாழ்க்கைப்படுகிறாள். அவுஸ்திரேலியாவில்தான் திருமணம் நடக்கிறது. மாலதியின் பெற்றோரும் அவுஸ்திரேலியாவுக்கு மூன்றுமாத விசாவில் வந்து மாலதியின் திருமணத்தை நடத்தி அவுஸ்திரேலியாவையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஒருமாத காலத்திலேயே இலங்கை திரும்புகிறார்கள்.
முதலிரவன்றே மாலதியின் எதிர்பார்ப்பில் இடிவிழுகிறது. காலப்போக்கில் தனது கணவன் துஷ்யந்தனால் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியாத நோயொன்று அவனைப் பீடித்துள்ளது என்கின்ற உண்மை தெரிய வருகிறது. தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்கிறாள். கணவனின் தாய் தந்தை அதாவது மாமி மாமா மற்றும் கணவனின் தமக்கை அதாவது தனது மச்சாள் ஆகியோரின் சுடுசொற்களையெல்லாம் பொருட்படுத்தாது துணிவுடன் முடிவெடுத்து இலங்கை திரும்புவதற்காகத்தான் தற்போது சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருக்கிறாள். குடயளா டியஉம இல் திரும்பியகதை மீண்டும் நனவுலகுக்கு வந்து பின்வருமாறு முடிவுறுகிறது.
‘பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருந்த சிலர் எழுந்து பரபரப்போடு தமது உடைமைகளைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். அவர்களும் அதே விமானத்தில் பயணி;ப்பவர்;களாக இருக்க வேண்டும். மாலதி எழுந்து தனது கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, அவளது விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு உட்புக வேண்டிய நுழைவாயிலை நோக்கி நடக்கிறாள். அங்கே பாதுகாப்புச் சோதனைகள் முடிவடைந்து விமானத்தினுள் சென்றதும் விமானப் பணிப்பெண் அவளுக்குரிய இருக்கை அமைந்துள்ள பகுதியைச் சுட்டிக் காட்டுகிறாள். மாலதி தன் இருக்கையில் அமர்ந்து தனது கைப்பையினுள் இருந்து ஒருதாளை எடுத்தாள். அது அவள் துஸ்யந்தனுக்கு முகவரியிட்டு மெல்பேண் விமான நிலையத்தில் இருந்த தபால்பெட்டிக்குள் போட்டுவிட்டுவந்த கடிதத்தின் பிரதி. அமைதியாக அதை வாசித்துப் பார்க்கிறாள்.
“துஸ்யந்தனுக்கும் குடும்பத்தாருக்கும் வணக்கம்!
துஸ்யந்தனுக்கு என்ன நோய் என்று தெரிந்திருந்தும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழடிக்க நினைத்த உங்களையெல்லாம் கடவுள் என்று ஒருவர் இருந்தால் பார்த்துக் கொள்ளட்டும். எனது வாழ்க்கையை நான் தீர்மானித்துக் கொள்வேன். நான் கொழும்பிற்கு எனது பெற்றோரிடம் செல்கிறேன்.
யாருடனோ நான் ஓடிப் போய்விட்டேன் என்று நீங்கள் ஊரெல்லாம் பறையடிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். அது உங்கள் பாவச் சுமையை மேலும் கூட்டுமேயன்றி என்னைப் பாதிக்காது.
இறுதியாக துஸ்யந்தனுக்கு சில வார்த்தைகள். ஆஸ்திரேலியச் சட்டப்படி என்னை விவாகரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுத்து உங்கள் பாவங்களில் சிறுபகுதியையாவது கழுவிக் கொள்ளப் பாருங்கள். நீங்கள் அதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் நான் இன்னும் ஒரு திருமணம் செய்யத்தான் போகிறேன். எனக்காக இல்லாவிட்டாலும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்த எனது பெற்றோர்கள் இறுதிக்காலத்திலும் அப்படியே வாழ வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்வேன். எவ்வளவோ நல்லவர்கள் உத்தமர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். அவர்களில் என் கதை முழுவதையும் கேட்டு என்னைத் திருமணம் செய்துகொள்ளும் ஒருவருடன் நான் சந்தோசமாக வாழ்வேன். ஒருவகையில் உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு நான் வரும்போது இருந்ததுபோலவே என்னைத் திரும்பிச் செல்ல வைத்திருக்கிறீர்கள். இன்னும் கன்னியாகவே நான் இருப்பது உங்களால்தானே. அந்த நன்றிக்கடனுக்காக, உங்களுக்குக் கொடுத்த சீதனப்பணம், வெள்ளவத்தை வீடு எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நீங்கள் திருப்பித்தரத் தேவையில்லை. உங்கள் வைத்தியச் செலவுக்குப் பயன்படுத்துங்கள். நீங்களோ உங்கள் குடுப்பத்தவரோ இனிமேலும் யாரையும் ஏமாற்றாதீர்கள்.
இப்படிக்கு
மாலதி
வாசித்து முடிந்ததும் மெல்லியதொரு நிம்மதிப் பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்படுகின்றது. கடிதப் பிரதியை மடித்து மீண்டும் தன் கைப்பைக்குள் வைக்கிறாள். இருபது நிமிடங்களில் விமானம் தரையோட்டத்தைத் தொடர்ந்து மெல்ல எழும்பிக் கொழும்பை நோக்கிப் பறக்கின்றது’.
திருமணத்திற்காக அவுஸ்திரேலியாவுக்கு கன்னியாகச் சென்ற மாலதி சுமார் ஒரு வருட காலம் கழித்து கன்னியாகவே கொழும்பு திரும்புகிறாள். இக்கதைக்கு “இன்னும் கன்னியாக…?” எனும் தலைப்பு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.
இக்கதையில் வரும் ஒரு கட்டம். கணவன் துஸ்யந்தன் மனைவி மாலதியுடன் வாக்குவாதப்பட்டு “ஏய் என்னடி செய்த நீ” என்று கேட்டுக் கொண்டே மாலதியை அடிக்கக் கையை ஓங்குகிறான். ஓங்கிய கையை தடுத்துப் பிடித்த மாலதி “என்னை அடிக்க வாறீங்களா? பொம்பிளைய அடிச்சால் மட்டும் நீங்கள் ஆம்பிளயாகி விடுவீங்களா?” என்று சொல்லிவிட்டு யாருடைய பதிலுக்கும் காத்திராமல் தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொள்கிறாள். கதையின் உள்ளடக்கமே ஓரிரு வாக்கியங்களில் இங்கே “விஸ்வரூபம்” எடுப்பதைப் பார்க்கிறோம்.
இந்த இடத்திலேயே கதையை நிறைவு செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் போலவும் எனக்குப்பட்டது. மாலதி இக்கதையின் நிறைவில் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” எனப் பாடிய மகாகவி பாரதிகண்ட புதுமைப் பெண்ணாக எம் மனதில் பதிகிறாள். இதுவே இக்கதையின் வெற்றி. இச் சிறுகதை ‘ஞானம்’ சஞ்சிகை நடாத்திய அமரர். செம்பியன் செல்வன் ஞாபகார்த்த – 2009 – சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசிலைப் பெற்றது என்கின்ற தகவலையும் மேலதிகமாகப் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
இச் சிறுகதைத் தொகுப்பு நூல் பத்துக்கதைகளை உள்ளடக்கியிருந்தாலும் நேர முகாமைத்துவம் கருதி இந்நூலின்; முதல்கதையையும் தலைப்புக் கதையையும் மட்டுமே நயவுரைக்காக எடுத்துக் கொண்டுள்ளேன். மீதிக்கதைகளை வாசகர்களே அதாவது நீங்களே நுகர்ந்து இன்புறுங்கள் என விட்டுவிடுகிறேன்.
எனினும், இந்நூலிலு;ளள கதைகளைப் பற்றிய சில பொதுவான சிறப்பம்சங்களைக் கூறி எனது பணியை நிறைவு செய்ய விழைகிறேன்.
கதைகள் யாவும் அதீத கற்பனைகள் இல்லாமல் யதார்த்தப் பண்புகளுடன் படைக்கப்பட்டுள்ளன.

கதைகள் யாவும் நடைமுறையில் உள்ள வாழ்வியல் பிரச்சினைகளை மட்டுமே கூறாமல் அப்பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளுடனும் நிறைவுறுவதால் அவற்றின் சமூகப் பயன்பாடு அதிகரித்துக் காணப்படுகின்றது.
நான் முன்பு குறிப்பிட்டதைப்போல கதைகளைப் பின்னியிருக்கும் புனைவு மொழி சிற்றாறு ஒன்று வளைந்தும் நெளிந்தும் ஆரவாரமில்லாமல் அமைதியாக ஓடுகின்ற ஒயிலாட்டம் இயல்பாகவும் – எளிமையாகவும் – சிக்கல்களில்லாமலும் மொழியின் ஓட்டம் அமைந்துள்ளது. வாசகனை வசீகரிக்கின்ற மொழிநடை நூலாசிரியருக்கு ‘வாலாயம்’ ஆகியுள்ளது.
உதாரணம் – சில
‘காணாமல் போனவள்’ கதையில் வரும்,
மின்னஞ்சலில் அவன் அனுப்பி வைத்த படத்தைப் பார்த்தமும் வெடிகுண்டாக நெஞ்சுக்குள் வெடித்துச் சிதறியது. சரவணனின் இதயம் சடாரென்று அறுந்து வயிற்றுக்குள் விழுந்து எரிவதுபோல இருந்தது.
‘முதல் உறவு’ கதையில் வரும்,
“ம்…… ஒண்டுமில்ல…… சொல்லுங்க……” கிணற்றுக்குள்ளிலிருந்து வருவதுபோல அகல்யாவிடமிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன.
‘பெற்றமனம்’ கதையில் வரும்,
தன் மகன் ஏரியா பொறுப்பாளராக வந்து, ஊர்மக்களை அதிகாரம் செய்வதை அவள் கண்ணாரக் காண நேர்ந்தபோது விண்ணென்று வலித்துக் கொண்டிருந்த இதயத்திலும் தண்ணென்ற சுகம் ஒன்று தானாகப் பரவத் தொடங்கியது. பயத்தின் மத்தியிலும் ஒரு பரவசம். கவலைக்கு மத்தியிலும் ஒரு களிப்பு. சோகத்திலும் ஒரு சுகம். ஏழ்மையிலும் ஓர் இறுமாப்பு. தங்கம்மாவுக்கு அப்போதெல்லாம் ஊரில் நல்ல மதிப்பு.
எனும் வரிகளைக் கூறலாம்.
இத்தொகுப்பிலுள்ள ‘பெற்றமனம்’ எனும் கதை பற்றியும் சில வார்த்தைகள் கூறவேண்டும்.
ஆயுதமேந்திய தமிழ்க்குழுக்கள் புரிந்த இராணுவ வெற்றிச் சாகசங்களைப் பற்றியும் – சிங்கள இராணுவம் தமிழ் மக்கள்மீது நிகழ்த்திய கொடூரங்களைப் பற்றியுமே பேசுகின்ற படைப்புகள் மட்டுமே பெருவாரியாக வெளிவந்து அவற்றிற்குப் ‘போர்க்கால இலக்கியங்கள்’ எனப் புகழ்மாலை சூட்டிப் போற்றித் துதிபாடும் ஒருபக்கச் சார்பான தமிழ்ச் சூழலில் தமிழ் ஆயுதக் குழுக்கள் அப்பாவித் தமிழ் – சிங்கள – முஸ்லீம் மக்கள் மீது நிகழ்த்திய அட்டூழியங்களைப் பற்றியோ – சகோதரப்படுகொலைகள் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படுத்திய பின்னடைவுகளைப் பற்றியோ மனிதநேயக் கண்ணோட்டத்தில் இலக்கியப் படைப்புகள் வெளிவராத அல்லது அரிதாக வெளிவரும் நிலைமைதான் இன்னும் தொடர்கிறது.
‘போர்க்கால இலக்கியங்கள்’ எனப் பெயர் சூடிக்கொண்ட படைப்புகளில் பெரும்பாலானவை ‘புறநானூற்று வீரம்’ பேசும் வெளிப்பாடுகளாகவே உள்ளன. இத்தகையதொரு உளவியற் போக்குச் சூழலில் இரு வெவ்வேறு ஆயுதஇயக்கங்களில் இணைந்து கொண்ட இரு சகோதரர்களிடையே ஏற்படும் சகோதரப் பகைமையுணர்வு அவ்விரு இளைஞர்களின் தாயின் உயிரைக் காவுகொள்வதில் போய் முடிகிற கதையாக இது வார்க்கப்பட்டிருக்கிறது.
போர்க்காலப் புத்தகத்தின் மறுபக்கமொன்றைப் புரட்டுகின்ற பிறிதொரு பரிமாணத்தைப் பதிவு செய்கின்ற சற்று வித்தியாசமான கதை இது. கதை பற்றி விபரிக்க நான் விழையவில்லை. நீங்களே படித்துணர வேண்டிய கதை இது. ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவத்தை இது தந்தது.
‘இன்னும் கன்னியாக…..’ எனும் இச் சிறுகதைத் தொகுப்பு நூலைத் தந்துள்ள நண்பர் பாடும்மீன் ஸ்ரீ கந்தராசா இன்னும் காளையாக இருந்து இதுபோன்ற படைப்புக்களை இன்னும் தரவேண்டும். நன்றி. வணக்கம்.
![]()