இலங்கை

புலிகளின் தங்கத்திற்கு வந்த சோதனை

பொலிஸ் காவலில் உள்ள யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தினர் பொறுப்பேற்ற பொதுமக்களின் தங்கம் மற்றும் வெள்ளி என்பவற்றை தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சபைக்கு அனுப்பி ஆய்வு செய்து அறிக்கை கோருமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்சி ஹேரத் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், இந்த விசாரணைகளுக்குக் கோரப்பட்ட வேறு பல உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் முகாம்கள், சட்டவிரோத வங்கிகள் மற்றும் பிற கட்டிடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கப் பொருட்கள் என நம்பப்படும் பொருட்களை தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சபைக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தினர் பொறுப்பேற்ற பொதுமக்களின் தங்கம் மற்றும் வெள்ளி என்பன பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

தங்க ஆபரணங்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் பொதுமக்களிடம் அவற்றை ஒப்படைக்கத் தயாராகவுள்ளதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *