இலங்கை

வடக்கின் கரையோரம் முழுவதையும் தமது பிடிக்குள் கொண்டுவர அரசு திட்டம்; கஜேந்திரகுமார்  தெரிவிப்பு

தமிழ்மக்களுடைய விடுதலைப் போராட்டம் மீண்டுமொரு தடவை ஆயுதப் போராட்டமாக மாறலாமென்று சிங்கள ஆட்சியாளர்கள் கணக்குப் போடுவதால் வடக்குப் பகுதியின் கரையோரப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மாத்திரமே ஆயுதங்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்வதைத் தடுப்பதை உறுதிப்படுத்தலாம் என்பதால் தான் வடக்கின் கரையோர மக்களைப் பயபீதிக்குள் தள்ளி, மக்களை மண்ணிலிருந்து தப்பியோடச் செய்து தனியார் காணிகளை முற்றுமுழுதாகச் சுவீகரிக்க திட்டமிடுகின்றனர் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஆறாயிரம் ஏக்கர் தமிழ்மக்களுடைய காணிகளைச் சுவீகரிப்பதற்கு அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புத் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்த

அவர் மேலும் கூறுகையில்,

இராணுவம் தனியார் காணிகளில் இருக்க முடியாது. ஆகவே, அனைத்துத் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டுமெனத் தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் ஆறாயிரம் ஏக்கர் தமிழ்த்தேசத்தின் வடமாகாணக் கரையோர நிலப்பரப்பைச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் இந்தச் சுவீகரிப்பு உறுதிப்படுத்தப்படும். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் ஒரே தடவையில் வடமாகாணத்தின் கரையோரம் முழுவதையும் சுவீகரிக்கும் வகையில் செயற்படவில்லை. முன்னைய ஆட்சியாளர்களை விடத் தற்போதைய அரசாங்கம் மிக மோசமாகச் செயற்படுகின்றது .

மன்னாரிலிருந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கரையோர நிலப்பரப்பைச் சுவீகரிப்பதற்கே தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிங்கள- பெளத்த பேரினவாதத்திற்கு ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரலிருக்கின்றது. அந்த நிகழ்ச்சி நிரல் தான் கடந்த-76 வருட காலமாக ஓடியது. தற்போதைய ஆட்சிக் காலத்திலும் ஓடுகிறது.

தமிழ்த் தேசத்தின் சுயாட்சி உரிமை, அங்கீகாரம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, சமஷ்டி போன்ற விடயங்கள் சிங்கள ஆட்டியாளர்களால் விரும்பித் தரப்படப் போவதில்லை. பேரினவாதம் அதற்கு அனுமதிக்காது என்பதால் வடமாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தே ஆக வேண்டுமென்ற நிகழ்ச்சி நிரலில் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறார்கள்.

தமிழ்மக்கள் விடுதலையை விரும்புகின்ற ஒரு இனம். அடக்குமுறையிலிருந்து விடுதலையைப் பெறுவதற்கானதொரு முயற்சி. அது கட்டாயம் ஒரு தனிநாடாகத் தான் இருக்க வேண்டுமென்றில்லை. எனினும், தமிழ்த்தேசம் சிங்கள தேசத்தால் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். விடுதலை அடைய வேண்டுமென்பதில் தெளிவு. அந்த விடுதலையை அவர்கள் கொடுக்கத் தயாரில்லையென்றால், 35 வருடமாக விடுதலையை ஐக்கிய இலங்கைக்குள் பெறுவதை விரும்பியிருந்தாலும் அது நிராகரிக்கப்படும் நிலையில் தேசத்தைப் பிரிந்தாவது தமிழ்மக்கள் அங்கீகரிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற அடிப்படையில் தான் நாங்கள் ஆயுதமேந்திப் போராடினோம். இது வரலாறு. இதனை யாரும் மறுக்க முடியாது. ஆகவே, தமிழரின் விடுதலைத் தாகத்தை எவராலும் நசுக்க முடியாது என்பதைச் சிங்கள ஆட்சியாளர்கள் சரியாகக் கணக்குப் போட்டிருப்பார்கள்.

தமிழ்மக்களுடைய விடுதலைப் போராட்டம் மீண்டுமொரு தடவை ஆயுதப் போராட்டமாக மாறலாமென்று சிங்கள ஆட்சியாளர்கள் கணக்குப் போடுவதால் வடக்குப் பகுதியின் கரையோரப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மாத்திரமே ஆயுதங்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்வதைத் தடுப்பதை உறுதிப்படுத்தலாம் என்பதால் தான் கரையோரத்தை முற்றுமுழுதாகத் தமிழ்மக்களிடமிருந்து சுவீகரித்துத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பல தசாப்தகாலமாகச் செயற்பட்டு வருகிறார்கள்.

இதன்காரணமாகத் தான் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் முழுமையான பொருளாதாரத் தடை விதித்தார்கள். இதனால், முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் கடற்தொழிலாளர்கள். அந்தக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மாத்திரம் தான் கடற்தொழிலாளர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தொழில் செய்யக் கூடிய நிலைமை இருந்தது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த அனைத்துக் கடற்தொழிலாளர்களும் மிகமோசமாகப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறான திட்டமிட்ட பொருளாதார அழிப்பு நடவடிக்கை எங்கள் கடற்தொழிலாளர்களை அவர்களின் மண்ணிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இதுதான் அவர்களின் திட்டம். போர்க் காலத்தில் இதனைப் பாதுகாப்பு என்ற பெயரில் நியாயப்படுத்தினார்கள். தற்போதைய காலத்தில் எதனையும் வெளிப்படையாகச் செய்ய முடியாத நிலையில் தற்போதைய அரசாங்கம் வடக்கின் கரையோர மக்களைப் பயபீதிக்குள் தள்ளி, மக்களை மண்ணிலிருந்து தப்பியோடச் செய்து தனியார் காணிகளை முற்றுமுழுதாகச் சுவீகரிப்பது தான் அரசாங்கத்தின் திட்டம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *