இலங்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 13,759 வாக்களிப்பு நிலையங்கள் தயார்

நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகள் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை 25 மாவட்டங்களிலும் 339 உள்ளூராட்சி சபைகளுக்காக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதுடன், இதற்காக ஒரு இலட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இன்று மாலை சகல வாக்களிப்பு நிலையங்களுக்குமான பணியாளர் குழுவினரும் வாக்குப் பெட்டிகளும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலிருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதேவேளை வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பொலிஸார் இன்றைய தினம் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதன்படி வாக்களிப்பு நிலையங்களில் 25 ஆயிரத்திரத்திற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதற்கு மேலதிகமாக நாடு பூராகவும் தேர்தல் நேர பாதுகாப்பு கடமைகளுக்காக 40,000 வரையிலான பொலிஸாரும் , விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நாளை காலை 7 மணி முதல் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதுடன் இதன்போது நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்குகளை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவும் , தேர்தல்கள் கண்கானிப்பு இயக்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

வாக்களிக்க செல்லும் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லுமாறு வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக தேசிய அடையாள அட்டை , செல்லுபடியான சாரதி அடையாள அட்டை , வயோதிபர் அடையாளர் அட்டை , அரச சேவை ஓய்வு அடையாள அட்டை , மதத்தலைவர்களுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *