இலங்கை

ஊழல்,மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் விரைவில் கைது!

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஆறு முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் அவர்களை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவை இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் நாட்களில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல், கண்டி, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்களில் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற 15 பாரிய மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதேவேளை கடந்த காலங்களில் விசாரிக்கப்படாத முறைப்பாடுகள் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்த பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படுவதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த முறைப்பாடுகள் தொடர்பாக மிகவும் சிக்கலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளதாகவும் கடந்த காலங்களில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளில் 300 முறைப்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *