உலகம்
ஆஸி பிரதமராக மீண்டும் அந்தோணி அல்பானீஸ்! …. தமிழ் பெண் அஷ்வினி பெரு வெற்றி ! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஆஸி பிரதமராக மீண்டும் அந்தோணி அல்பானீஸ் !
எதிர்கட்சி தலைவர் டட்டன் தோல்வி!
தமிழ் பெண் அஷ்வினி பெரு வெற்றி !
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
அவுஸ்திரேலியாவில் கடந்த ஐந்து வார தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்கட்சி தலைவர் பீட்டர் டட்டனை விட சிறப்பாக செயல்பட்ட பிரதமரின் ஆளும் கட்சி இத் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் முன்பே தெரிவித்தன.
அதற்கேற்ப தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பெரும்பான்மை அரசாங்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் அந்தோணி அல்பானீஸ் தலைமையில் இரண்டாவது முறையாக அரசை அமைக்கவுள்ளது.
இரண்டாவது தவணையில் ஆளும் கட்சி அதிக ஆசனங்களுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது வெகு அரிது. எனினும் கனடாவை போல, தற்போது அவுஸ்திரேலிய ஆளும் கட்சி பிரதமர்
இதை சாத்தியமாக்கியிருக்கிறார்.
அந்தோணி அல்பானீஸ் ஆட்சி:
சில மாதங்களுக்கு முன்பு நடந்த கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருந்த எதிர் கட்சி கூட்டணி, பொருளாதர கொள்கை குழப்பம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான ஒப்பீடுகள் மற்றும் முன்மொழியப்பட்ட பிதிய அணு உலைகள் உருவாக்கம்,
மருத்துவக் காப்பீட்டை நீக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு மத்தியில் ஆதரவில் பாரிய சரிவை சந்தித்தது.
தற்போது 62 வயதான அந்தோணி அல்பானீஸ், டிரம்பின் வரிவிதிப்புப் போரால் உலகளாவிய கொந்தளிப்பான காலகட்டத்தில் அவுஸ்திரேலியாவை வழிநடத்த ஒரு நிலையான தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
தேர்தல் முடிவின் பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்த போது, தொழிற்கட்சி மேம்பட்ட பெரும்பான்மையைப் பெற்றது. 2004 இல் ஜோன் ஹோவர்டுக்குப்(John Howard) பிறகு இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவுஸ்திரேலிய மக்கள் மதிப்புகள், நியாயம், விருப்பம் மற்றும் அனைவருக்கும் வாய்ப்புக்காக வாக்களித்துள்ளனர், என்று அல்பானீஸ் சிட்னியின் உள்மேற்கில் உள்ள கேன்டர்பரி-ஹர்ல்ஸ்டோன் பார்க் ஆர்எஸ்எல் கிளப்பில் ஆரவாரமான தேர்தல் வெற்றி ஆதரவாளர்கள் கூட்டத்தில் கூறினார்.
அவுஸ்திரேலியர்கள் தங்கள் சொந்த வழியில் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளத் தேர்ந்தெடுத்துள்ளனர். எதிர் காலத்திற்காக நீட்டை கட்டியெழுப்பும் போது ஒருவருக்கொருவர் கவனித்துக் கொள்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இறுதியான முடிவுகளின் நிலவரப்படி, 88 இடங்களில் தொழிற்கட்சி வெற்றி பெற்று ஒரு தெளிவான பெரும்பான்மை அரசை உருவாக்கி உள்ளது. எதிர்கட்சி
கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி உள்ளது. கடந்த தேர்தலை விட 18 இடங்களின் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
தமிழ் பெண் வெற்றி :
இந்த பாராளுமன்ற தேர்தலில் அஷ்வினி எனும் தமிழ் பெண் பெருவெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அஷ்வினி அம்பிகைபாகர் (Ash Ambihaipegar), ஈழத்தில் புகழ் பெற்ற, குழ்ந்தை கவிஞர் அம்பி அம்பிகைபாகர் அவர்களின் பேத்தி ஆவார். சிட்னியில் உள்ள பார்ட்டன் (Barton) தொகுதியி்ல் தொழிற் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
அத்துடன் 66 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றியீட்டி அவுஸ்திரேலிய பாராளுமன்றம் செல்கிறார். வெற்றியீட்டியிருக்கும் தமிழ்ப் பெண்ணான அஷ்வினி அம்பிகைபாகர் உலகத் தமிழருக்குப் பெருமை சேர்ப்பவராக அமைகிறார். 2022 இல் கோர்ஜெஸ் றிவர் கவுன்சிலராகத் தெரிவாகியிருந்த அவர் ஒரு சட்ட நிபுணராகவும் பயிற்றப்பட்டவர்.
கடந்த பாராளுமன்றில் ஆட்சியில் இருக்கும் தொழிற் கட்சி தேர்தலுக்கு முன் 77 ஆசனங்களும் , எதிர்க்கட்சி 53 ஆசனங்களையும் கொண்டிருந்தது. ஆனால் தற்போதய தேர்தலில் எதிர்க்கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. குடிவரவுக் கொள்கையில் மாற்றம்,
அகதிகள் விரோத நடவடிக்கையே எதிர்கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எதிர்கட்சி தலைவர் படுதோல்வி:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் படு தோல்வி அடைந்துள்ளார். 2001 ஆம் ஆண்டு முதல் டிக்சன் தொகுதியை (Dickson) தக்க வைத்துவந்த பீட்டர் டட்டன், இம்முறை அத்தொகுதியில் மண்கவ்வியுள்ளார். அத்துடன் லிபரல் கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு தான் பொறுப்பேற்பதாகவும் பீட்டர் டட்டன் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சியான லிபரல் கட்சியின் (Liberal Party) தலைவர் பீட்டர் டட்டனின் சில திட்டங்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்றிருக்கும் எலான் மாஸ்க்கின் அரசாங்க திறன் துறையின் செயல்பாடுகளோடு ஒத்துப் போவது போன்று இருப்பதாக மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இத் தேர்தலில் அவருக்கான ஆதரவு குறைந்தது என்றும் கூறப்படுகிறது.
அத்துடன் பீட்டர் டட்டன் அமெரிக்க டிறம்பின் கொள்கைகளைப் பிரதிபலித்ததோடு தீவிர வலதுசாரிக் கொள்கைகளை முன்வைத்து டிறம்பின் வடிவில் பிரசாரம் செய்துவந்தார். இதனால் அவர் “DOGE-y Dutton” என ஊடகங்களில் நையாண்டி செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக அரசு ஊழியர்கள் முழு நேர வேலைக்கு அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். பொதுத்துறை ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் வேலையிழக்கும் திட்டம் ஆகியவை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டதால், அதனை டட்டன் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இத்தேர்தலில் எதிர்க்கட்சியும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பெரும் போட்டி நிலவியது.
அவுஸ்திரேலிய வரலாற்றில் இதுவரை எந்தவொரு எதிர்க்கட்சி தலைவரும் தாம் போட்டியிட்ட தேர்தலில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அந்த வரலாறு மக்களின் தீர்ப்பால் மாற்றப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன், இந்தத் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டிருப்பதுடன், தாம் போட்டியிட்ட டிக்சனில் ஆளுங்கட்சி வேட்பாளர் அலி பிரான்சிடம் படு தோல்வி அடைந்துள்ளார்.
தேர்தல் தோல்விக்கு தாமே முழு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த தோல்வியானது நாம் யார் என்பதை தீர்மானித்து விடாது என்று தனது கட்சிக்காரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அவர் பேசியுள்ளார்.
தொழிலாளர் கட்சிக்கு இதுவொரு வரலாற்று வெற்றி, இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றும் அவர் மனதாரப் பாரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் லேபர் அரசு :
கடந்த ஜனவரியில் டட்டனின் லிபரல் கட்சி கூட்டணி ஆறு வீதம் முன்னிலையில் இருந்தது. தற்போது ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிரதமரின் ஆளும் கட்சி ஒன்பது வீதம் அதிகரித்து கருத்துக்கணிப்பில் முன்னிலை பெற்று தற்போது இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மேயில் அவுஸ்திரெலிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட அல்பனீஸ் மீண்டும் பிரதமராகத் தொடர்ந்து அரசை வழிநடத்த உள்ளார். இந்த வெற்றியின் மூலம், அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது ஆண்டுகளில், தொடர்ச்சியாக அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஒருவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ஆயினும் வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள், அதிக பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் வாடகை போன்ற காரணங்களில் மக்கள் விரக்தியடைந்துள்ள சூழலில் இந்த தேர்தல் வெற்றி மூலம் ஆளுங்கட்சி பல சவால்களை எதிர்கொள்ள உள்ளது.
![]()