பிரதான சூத்திரதாரி சஹ்ரான் அல்ல!; எவ்.பி.ஐ. கூறுவதை ஏற்க முடியாது

உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பிரதான சூத்திரதாரி தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் என அமெரிக்காவின் எவ்.பி.ஐ. தீர்மானித்திருப்பதை இலங்கை கத்தோலிக்க திருச்சபை ஏற்கமறுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்பிரதான சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாசிமே என எவ்.பி.ஐ.யின் விசேட முகவர் மெரிலீ ஆர் குட்வின் தெரிவித்துள்ளார் என சமீபத்தில் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் தாக்கல் செய்த சத்தியக்கடதாசியில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை நிராகரித்துள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிருசாந்த பெர்ணாண்டோ இலங்கை அதிகாரிகளுடனோ அல்லது இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையுடனோ கலந்தாலோசனைகளை மேற்கொள்ளாமல் எவ்பிஐ எவ்வாறு இந்த முடிவிற்கு வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும்,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் சட்டமா அதிபரும் சனல் 4 அம்பலப்படுத்திய விடயங்களும் ஜஹ்ரான் ஹாசிம் தனியாக செயற்படவில்லை பெரும் சதியொன்று இடம்பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளன என தை ஜூட் கிருசாந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
எங்களுக்கும் இது குறித்த சந்தேகங்கள் உள்ளன,மேற்கூறப்பட்ட அனைத்தையும் அடிப்படையாக வைத்து பார்க்கும்போது ஜஹ்ரான் ஹாசிமிற்கு பின்னால் யாரே இருந்தனர் என்பது தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்பிஐயின் விசாரணை முறைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர் எவ்பிஐ முகவர் எப்படி விசாரணைகளை மேற்கொண்டார்,இலங்கையில் அவர்கள் யாரை சந்தித்தனர்,அவர்கள் எந்த அடிப்படையில் இந்த முடிவிற்கு வந்தனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்பிஐ எங்களுடன் பேசவில்லை ஆகவே அவர்கள் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிருசாந்த பெர்ணாண்டோகேள்வி எழுப்பியுள்ளார்.
![]()