இந்தியா – பாகிஸ்தானிடையே பெரும் போர் பதற்ற நிலை!; ஏட்டிக்கு போட்டியாக பல்வேறு அறிவிப்புகள்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள அதேவேளை, இரு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக அறிவித்துவரும் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் காரணமாக இரு நாடுகளுக்குமிடையில் போர் பதற்றம் பெருமளவில் அதிகரித்திருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்குள் இராணுவ சீருடையில் நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கர் -இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளையான “ரெசிஷ்டன்ஸ் பிரண்ட்” அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
இந்நிலையில்,குறித்த தாக்குதலையடுத்து சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஜயத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பியதுடன், அமைச்சரவைக் கூட்டத்தை புதன்கிழமை மாலை கூட்டினார்.இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.குறிப்பாக “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லை மூடப்படும் என்றும், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஆணை பிறப்பிக்கப்பட்ட அதேவேளை,சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தான் மக்கள் இந்தியா வர தடை விதிப்பதாகவும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதேவேளை,பாகிஸ்தான் அதிகாரிகள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டதுடன், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 30 ஆக குறைப்பது எனவும் சிந்து நதி ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து செய்யப்படும் என்றும் இந்தியர்கள் மே 1 ஆம் திகதிக்குள் இந்தியா திரும்ப வேண்டும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை இந்திய மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் எக்ஸ் தள பக்கம் முடக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் தனது கராச்சி கடற்கரையில், ஏப்ரல் 24 -25 ஆம் திகதிகளில் ஏவுகணை சோதனை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானின் செயற்பாடுகளால் கொதித்து போயிருக்கும் இந்தியா சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்துவதாக நேற்று அறிவித்தது.இந்த அறிவிப்பு இருநாடுக்குமிடையிலான கொதிநிலையை அதிகரித்தது. சிந்து நதி பகிர்வு ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்த இந்தியா, பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தருவதை நிறுத்தும்வரை இந்தியா தண்ணீர் தராது என்றும் அறிவித்தது.
இதேவேளை நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர் காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக தீவிரவாதிகளுக்கு கனவிலும் நினைத்திராத அளவுக்கு தண்டனை கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். அனைத்து தீவிரவாதிகளையும் கண்டறிந்து தக்க தண்டனை வழங்கப்படும். தீவிரவாத தாக்குதலால் இந்தியா துவண்டு போகாது என அறிவித்திருந்தார்.
அதேவேளை, பாகிஸ்தானியர்களுக்கான விசா நிறுத்தம் தொடர்பாக புதிய ஆணையை வெளியுறவு அமைச்சகம் நேற்று பிறப்பித்தது. எதிர் வரும் 27 ஆம் திகதி முதல் பாகிஸ்தானியர்களுக்கான விசா நிறுத்தப்படுகிறது என்றும் மருத்துவ காரணங்களுக்கான விசா வரும் 29 ஆம் திகதியுடன் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதேவேளை,பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடவடிக்கையை அறிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கும் விதமாக ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி இந்தியா பரிசோதனை நடத்தியது. போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது என இந்திய கடற்படை அறிவித்தது.
அதேபோல்,பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆணையிட்ட அதேவேளை, இந்தியர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையில் இந்தியாவின் அதிரடி அறிவிப்புகளால் ஆத்திரம்கொண்ட பாகிஸ்தான், இந்திய விமானங்கள் தங்கள் வான்வழியில் பறக்க தடை விதித்தது. இந்திய விமானங்கள் மற்றும் இந்தியர்களுக்கு சொந்தமான விமானங்களை பாகிஸ்தான் வான்வழயில் பறக்க தடை என பாகிஸ்தான் அறிவித்ததுடன்,சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் இந்தியாவுடனான பொருளாதார உறவுகள் அனைத்துக்கும் தடை விதிப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது.
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டது. 1971ல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நேரத்தில் போரை நிறுத்தும் வகையில் 1972 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இருநாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக மேற்கொண்டுவரும் அதிரடி அறிவிப்புகள் இரு நாடுகளுக்குமிடையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், இரு நாடுகளுக்குமிடையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
![]()