கதைகள்

சாமி போட்ட முடிச்சு… கதை… யாழ் எஸ் ராகவன்

மாணிக்கம் கொல்லங்குடி காளியாத்தாளைத் தரிசனம் செய்துவிட்டு அந்த பிரகாரத்தை சுற்றி விட்டு கம்பி வேலி கட்டப்பட்ட குளத்தின் கரையில் அமர்ந்திருந்தான். கையில் இருந்த காசில் கொஞ்சம் பொரி வாங்கி குளத்தில் எறிந்தான். அங்கு உள்ள மீன்கள் ஒளியை உள்வாங்கிக் கொண்டு பொரியை எடுப்பதற்கு அங்குமிங்கும் துள்ளி குதித்தன.

இனி அழவே கூடாது என்ற வைராக்கியத்தில் கடைசியாக பாட்டில் உள்ள தண்ணீரைமுகத்தில் தெளித்து சுத்தம் செய்து கொண்டான். எவ்வளவு பிரச்சனை வந்த போதும் கடவுள் கொடுத்த உயிரை நாமாக மாய்த்துக் கொள்ள கூடாது என எப்பொழுதோ அம்மா சொன்னது இன்னும் உறுத்திக் கொண்டிருந்தது.

காலை முதல் மாலை வரை அந்தக் கோயிலை சுற்றி வந்து அந்த பிரகாரத்தில் போய் அமர்ந்தான். அவனை இறக்கி விட்ட ஷேர் ஆட்டோ தொடர்ந்து போய் வந்து கொண்டே இருந்தது. அங்கே பெரிய பெரிய கடைகள் அன்னதான கூடம் எல்லாவற்றையும் பார்த்தான்.
பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த கோயிலுக்கு வந்த பொழுது அது எவ்வளவு வளர்ச்சி அடையவில்லை. ஒரு பெரிய காடு அந்தக் காட்டுக்குள் இந்த கோவில் இருந்தது இப்பொழுது எல்லா இடமும் பிளாட் போட்டு விட்டார்கள் ஒரு பெரிய கூடாரம் அமைத்து அங்கே பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான இடமும் வசதியாக வைத்திருந்தார்கள்.

பழசை நினைக்க கூடாதுஎன நினைத்து புலம்பக்கூடாதுஅதிலிருந்து வெளிவரும் சூட்சமம் தனக்கு தெரியவில்லை மீண்டும் மீண்டும் துரோகத்தின் சுவடுகள் நெஞ்சத்தை அழித்துக் கொண்டே இருந்தன. அவனையும் அறியாமல் மதிய வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் சற்று அயர்ந்து தூங்கி விட்டான்.

“நம்மை ஆளும் நாயகியாம் நம் மகமாயி உமையவளே பெருமான் மகளே” என வீரமணி சாமி வெங்கல குரலில் ஒலிபெருக்கியில் பாடிக்கொண்டிருந்தார். மாலை நேரம் தெய்வ தரிசனம் தொடங்குவதற்கு ஆயத்தமானது.

கோயில் வாசலில் தண்டவாளத்தைப் போல ஒருபுறம் சக்தி சாமியார்கள் இன்னொரு புறம் ஆண் சாமியார்கள் நெற்றி நிறைய திருநீறு பூசி காவி உடை கட்டி மங்களகரமாக அமர்ந்திருந்தார்கள்.

அந்தக் கூட்டத்தை பார்க்கின்ற பொழுது உலகில் சாமியார் தனத்தையே காஸ்டிலியாக ஃபேண்டஸியாக நடத்தும் சாமியார்கள் எங்கே எந்த க்கவலையும் இன்றி கோவில் வாசலிலேயே அமர்ந்து காலத்தைக் கழிக்கும் இவர்கள் எங்கே ?யார் ?உண்மையில் சாமியார் எதுசாமியார் தனம் !என்று யோசித்துக் கொண்டேஅவர்களையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் மாணிக்கம்.

இவனையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் கயிறு கட்டின சாமி . அவர் பார்ப்பதை உணர்ந்து கொண்ட மாணிக்கம் சற்று தடுமாறினான். கையில் வண்ண வண்ணமாக பலவிதமான கயிறுகளைக் கட்டி இருந்தார் கயிறு கட்டுன சாமி
இவன் அழுவதை பார்த்துக் கொண்டே இருந்த அவர் வேகமாக வந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டார். சற்றும் எதிர்பாராத மாணிக்கம் கண்களை துடைத்துக் கொண்டு அவரை தீட்சன்னியமாகபார்த்தான்.

யாரிடமும் உடனே பேசாத கயிறு கட்டுன சாமி மாணிக்கத்தை பார்த்தவுடன் நீண்ட நாள் பழகியவன் போல’ வாங்க எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க ‘எல்லாத்தையும் அந்த ஆத்தா பாத்துக்குவா எனச் சொல்லி தனியா அழைத்துச் சென்று தன்னிடமுள்ள காவி வேட்டி கட்ட சொல்லி கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து விட்டான்.

இங்கே ஆண் சாமியார் 15 பெண் சாமியார் 12 பேர் இருக்கும் பெண் சாமியார் சக்தின்னு சொல்லுவோம் ஆண் சாமியார் எல்லாமே சிவா தான் .இல்ல.‌ நான் இந்த ஊருக்கு.. ஐயா அதெல்லாம் வேணாம் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்கும் அதை பத்தி என்ன வாங்க டீ சாப்பிடலாம் என தேநீர் கடைக்கு அழைத்துச் சென்றார்.

இங்கே தங்கி கொள்ளலாம் 15 பேருக்கு மேல இங்க இருக்க கூடாது பக்கத்தில் உள்ள ஊருக்கு அனுப்பி விட்டுருவோம் . உங்க நேரம் ஒரு ஆள் நேத்தே போயிட்டாரு காசு கொடுத்து டீ மாஸ்டர் கொடுத்த சாமியார் கப்பில் இருவரும் தேநீர் சாப்பிட்டனர்.

மற்றவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்னா மத்தவங்க டீ சாப்பிட்டு காசு குடுப்பாங்க நாம காசு கொடுத்தா தான் டீயை தருவாங்க இருவரும் அந்த பிரகாரத்தில் போய் அமர்ந்தார்கள் அங்குள்ள கட்டச்சாமி, குட்டச்சாமி ,மொட்டசாமி ,நெட்டச்சாமி என பல சாமிகளை அறிமுகம் செய்து வைத்தார் கயிறு கட்டின சாமி. எதுத்தாப்புல இருக்குற சக்திகளில் சில சக்தி நன்றாக பேசுவார்கள்.

மணி 12 ஆனதும் அன்னதானம் நடக்கும் இடத்திற்கு கூட்டி சென்றார் கயிறு கட்டின சாமி. எல்லோரும் அந்த அமர்ந்ததும் இலைகள் போடப்பட்டது இரண்டு கூட்டு ஒரு பொரியல் ஒருமுறைதான். சோறு மட்டும் இரண்டு முறை போடுவார்கள் ஒரு முறை சாம்பார் மற்றொரு முறை ரசம் சில நாளில் மோர் வரும் பல நாளில் வராது.

அன்னதானத் திட்டங்களில் அதிகம் பயன்பெறுவது சாமிகள் தான். சங்கு எடுத்து ஊதி கயிறு கட்டுன சாமி நமச்சிவாயா சொன்ன பிறகு அத்தனை சாமிகளும் சாப்பிட தொடங்கினார்கள்.
இரண்டு நாள் பசி நன்றாகத்தான் சாப்பிட்டான் மாணிக்கம். சாப்பிட்டு முடித்த பிறகு அதற்காக போடப்பட்டிருந்த வராண்டாவில் வரிசையாக எல்லா சாமிகளும் படுத்தார்கள்..

எத்தனை முறை மறக்க நினைத்தாலும் அந்த துரோகம் அவன் கண்ணை உறுத்திக் கொண்டே வந்தது. உழைப்பின் வலியை விட துரோகத்தின் வலி மிக கொடூரமானது எத்தனை லட்சம் சம்பாதித்து இருப்பான் எல்லாத்தையும் விட்டுவிட்டு திருவோடு என்றும் நிலையை நினைத்துக் கொண்டிருந்தான் கட்ட சாமி பீடி பிடித்தபடி வேணுமா என்பதை போல கை நீட்டினான் பழக்கம் இல்லை ஆனாலும் இப்போது தேவையாக இருந்தது. வாங்கி புகைத்துக் கொண்டான். அந்தக் கோவிலில் அவனுக்கு பிடித்த இடம் அந்த குளம் தான் அங்கே உள்ள மீன்கள் கவ்வும் விதம் சிந்தி சிதறும் பொரிகள் பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

மாலை தொடங்கியதும் சாமிகள் எல்லாம் தங்கள் முகம் கழுவி மாலை நேர கலெக்ஷனுக்கு ஆயத்தமாயினர். மீண்டும் வீரமணி சாமியே பாட்டு ஓங்கி ஒலித்தது. மாலை நேரம் கிடைக்கும் பணத்தை சேகரித்து வைத்து தான் இரவில் இட்லிவாங்கிச் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் பட்டினியோடு படுக்க வேண்டும் என கயிறு கட்டின சாமி சொல்லி வைத்திருந்தார்.

சில வேலைகளில் கடைக்காரர்கள் விக்காத இட்லிகளை வயிற்று எரிச்சலோடு இந்தச்சாமிளை அழைத்து போடுவார்கள். சிலருக்கு கிடைக்கும் பலருக்கு கிடைக்காது அதிலும் தள்ளுமுள்ளு மன வருத்தம் கோபம் உண்டு.

சக்தி சாமிகளில் ஒரு பெண் இவனை கூர்மையாக ப்பார்த்தது ஏதோ சொல்ல வருபவள் போலவே தெரிந்தது. ஆனாலும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தப் பெண்ணிடமும் நேருக்கு நேராக பேசாதவன் மாணிக்கம் அதை பெரிதாக அவன் எடுத்துக் கொள்ளவில்லை. கயிறு கட்டின சாமி பக்கத்திலேயே அமர்ந்து கொண்டான் ‘அம்மா தாயே’ ஆண்டவனை நினைத்து ஒரு தர்மம் பண்ணுங்க என்று எல்லோரும் கோரசாக சொல்ல அது மாணிக்கத்திற்கு வரவில்லை.
எப்படியோ கயிறு கட்டின சாமிக்கு 45 ரூபாய்க்கு மேல் சேர்ந்தது. அவனை இட்லி சாப்பிட அழைத்தார். மாணிக்கம் மறுத்துவிட்டான் மதியம் சாப்பிட்டது போதும் எனக்கு பசிக்கவில்லை வேண்டாம் என சொல்லிவிட்டு ஒரு பக்தர் தந்த வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டான்.

எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டன .அந்த க்கோவிலுக்கு வரும் கடைசி சஷெராட்டோவும் சென்று விட்டது கோவில் கதவு சாத்தப்பட்டது . அன்று அமாவாசை அதனால் வானத்தில் கூட வெளிச்சமில்லை. சக்தி சாமிகள் படுக்கும் இடங்களில் அவர்கள் மொத்தமாக படுத்துக் கொண்டார்கள்.

தனியாக இந்த ப்பக்கம் வரண்டாவில் ஆண் சாமியார்கள் மொத்தமாக படுத்துக் கொண்டார்கள். துண்டை த்தலைக்கு வைத்துக் கொண்டு மாணிக்கம் படுத்தான் ஆனால் தூக்கம் வரவில்லை மீண்டும் அந்தத் துரோகமும் துயரமும் கண் முன் நிழலாடின.

நள்ளிரவு 12 மணி இருக்கும் இவன் கால் அருகில் ஒரு சிறு அசைவு எழுந்து பார்த்தால் காலையில் குறுகுறு என்ற பார்த்த சக்தி சாமி இவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
திடுக்கிட்டு பரபரப்பு என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணை க்கசக்கி அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.

ஐயா பயப்படாதீங்க நான் சக்தி சாமி 50 வயசு ஆக போது இருந்தாலும் ஆண்களின் பார்வையில் பெண்கள் போகப்பொருள்தான் எப்போது வந்து படுத்தாலும் எவனாவது இரண்டு பேர் வந்து காலைச் சுரண்டுகிறான். நிம்மதியாக தூங்க முடியவில்லை.

நானே வாழ்க்கையை வெறுத்து இங்கே வந்து இருந்தாலும் இங்கேயும் ஒவ்வொரு நாளும் ஒருவன் தொல்லை தாங்க முடியவில்லை.

காலையில உங்கள பார்த்தேன் மனதிற்கு ஏதோ நல்லவர் போல தெரிந்தது நீங்களாவது எனக்கு ஆறுதலாய் இருப்பீர்கள் என்று உங்கள் பக்கத்தில் வந்தேன் ஒன்னும் செய்ய மாட்டேன் விடியிற வரைக்கும் உங்க கால் மாட்டுல படுத்துகிறேன்படுத்துகிரட்டுமா என்று அவள் சொன்னபோது மாணிக்கம் சரி என்பது போல தலை ஆட்டினான்.

எப்போது விழித்தென்னு தெரியவில்லை முழித்து பார்த்த போது வாசல் தெளிக்கும் சத்தம் கேட்டது அருகில் சக்தி சாமி இல்லை இரவு நடந்தது கனவா இல்லை உண்மையா என்று யோசித்துக் கொண்டே மாணிக்கம் எழுந்து குளத்துக்கரை பக்கம் போனான் .
காலையில் அவள் முகத்தை ப்பார்த்தான் லேசாக ஒரு புன்னகை நன்றி தெரிவிப்பது போல இருந்தது சாப்பிடும்போது அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் .

யாருக்கும் கேட்காத தொணியில் ரொம்ப நாளைக்கு அப்புறம் நேற்று நள்ளிரவு நன்றாக தூங்கினேன். உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும் என்றாள்
லேசாக சிரித்து வைத்தான். கயிறு கட்டுன சாமி நான் ரெண்டு நாள் இருக்கங்குடி மாரியம்மன் திருவிழாவுக்கு போறேன் அங்க நல்லா பணம் வரும் நீ வரியா இங்கே இருக்கிறாயா என்று கேட்டான்.

நீங்க போயிட்டு வாங்க சாமி இப்பதான் இங்க வந்தேன் கொஞ்ச நாள் இங்கு இருக்கிறேன் என்று சொல்லி அவரை வழி அனுப்பி விட்டான். அன்று இரவு எதையும் யோசிக்காமல் வழக்கம் போல பிரகாரத்தில் படுத்து கொண்டான் மணி 12 தாண்டியதும் சக்தி சாமி அருகில் வந்து கால் அருகே படுத்தது தூக்கம் வரவில்லை எழுந்து அமர்ந்துகொண்டான் .

என் பெயர் கௌரி எனஅந்த சக்தி சாமி இவனை பார்த்து பேச தொடங்கினாள்
நான் எம் ஏ ஹிஸ்டரி முடிச்சு ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன் எங்க வீட்ல என்ன விருப்பம் இல்லாமல் கந்தசாமிக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க
அவர் வழக்கறிஞர் நல்ல குடிப்பழக்கம் பல பெண்களோடு தொடர்பு ஆனாலும் எங்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் வாழ்க்கை கசக்க ஆரம்பித்தது.ஆரம்பத்தில்
எனக்கு தெரியாம அரசல் புறசலாக இருந்தது. பின்னர் வீட்டுக்கே வர ஆரம்பித்து விட்டார்கள்.

குடியும் கூத்தியாலும் உடன் சேர்ந்து கொண்டது எங்கள் வீட்டிலும் என்னை கல்யாணம் பண்ணி கொடுத்து நீ தான் பொறுப்பா நடக்க வேண்டும் என்று அறிவுரை வேறு சொன்னார்கள்.
குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டி மாமியார் வேறு வெறுப்பேற்றினாள். ஒரு கட்டத்தில் விவாகரத்து ஜீவனாம்சம் எதுவுமே வேண்டாம் என்று இங்கே வந்து விட்டேன். கண் போன போக்கிலே இந்த ஊர் எங்க இருக்குன்னு தெரியாது ஒரு வெறுப்பில் இங்கே வந்த அமர்ந்தேன்.
15 ஆண்டுகள் ஆகி ஓடிவிட்டது யார் மீதும் பிடித்தம் இல்லை
நீங்கள் வந்தபோது உங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். குளத்தில் குளிக்கும் போது எல்லா ஆண்களும் கழுகு பார்வை வீசும் இடத்தில் நீங்கள் கண்டு கொள்ளாமல் போனது. சாப்பிடும் இடத்தில் எங்கேயுமே யாரையும் காணாமல் இருந்தது எனக்கு உங்க மேல் மரியாதை கூடியது.என்று அத்தனையும் சொல்லி முடித்தாள்.

குழந்தை முகம் கௌரி உடையது அவளை பார்த்தவுடன் மனதுக்குள் அடக்கி வைத்து இருந்த அத்தனை வேதனையும் குட்டி விடலாம் என்று நினைத்தான் மாணிக்கம்.

எங்க ஊர்ல பந்தல் மாணிக்கம் என்றால் எல்லாருக்கும் தெரியும் லட்சக்கணக்கில் சம்பாதித்தேன் எத்தனையோ பேருக்கு கல்யாணம் பந்தல், அரசியல் மாநாடு, எழவு பந்தல் எந்த பந்தல் போட்டாலும் நானில்லாமல் எங்கள் சுற்றுவட்டாரத்தில் எந்த நிகழ்ச்சியும் நடக்காது.
சம்பாதித்து வீடு கட்டி சந்தோஷமா வாழ்ந்த குடும்பம் எங்களுடையது. அழகான மனைவி அன்பான குழந்தை தரித்திரியும் எப்ப வரும் சொல்ல முடியாது.

என் கூட பந்தலுக்கு கூடமாட உதவியா இருந்தவன நம்பி எல்லா பொறுப்புகளையும் ஒப்படைச்சேன் நான் சேர்த்து வைத்த காசெல்லாம் மொத்தமா எடுத்துக்கிட்டு என் பொண்டாட்டியும் கூட்டிட்டு ஓடிட்டான்.

என்ன செய்யறதுன்னு புரியல நான் வளர்த்த மகளை எங்க அண்ணன் கிட்ட ஒப்படைச்சிட்டு என் கிட்ட இருந்த மீதமுள்ள சொத்துக்களை என்னுடைய பங்கு என் மகளுக்கு கொடுத்துவிடு என்று சொல்லிட்டு துரோகத்தை தாங்க முடியாம ஊரை விட்டு ஓடி வந்து விட்டேன்.
விவரம் தெரியாத வயசுல மகளை விட்டு வந்துட்டேன் வேதன ஒரு பக்கம் இருக்கத்தான் செய்யுது ஆனாலும் என் அண்ணன் மேல் உள்ள நம்பிக்கை
எதுவும் வேணாம்னு ஓடி வந்துட்டேன். என்னைக்காவது ஒருநாள் என் மகளை போய் பார்க்கணும்னு ஆசை வருது ஆனாலும் நட்டாத்துல விட்டு போன அப்பனப் பார்த்தாலும் அவ என்ன சொல்லுவா விவரம் தெரிஞ்சு என்னை ஏத்துக்கிடுவாளா என்ற எண்ணத்தில் போக மனசு இல்ல .சாக மாட்டேன்.

இருவரும் தங்கள் கதையை சொல்லிக் கொண்ட பொழுது மனபாரம் குறைந்ததாக நம்பினர். ஒரு வாரம் கழித்து கயிறு கட்டின சாமி மறுபடி கோயிலுக்கு வந்தான்
அங்கே புதுசா வந்த சாமியையும் காணோம் சக்தி சாமியின் அந்தப் பெண்மணியும் காணும் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள் இது சாமி போட்ட முடிச்சு எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று கயிறு கட்டின சாமி மனதார வேண்டிக்கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *