கதைகள்

“தட்டுவண்டியும் தங்கராசும்” … கதை…. சோலச்சி.

உச்சி வெயில், ஆள் நடமாட்டம் மிகுந்த கீழராஜ வீதியில் இறுக்கமான பேண்ட், டி-சர்ட்டை அணிந்து கொண்டு யாரோ ஒருவருடன் அலைபேசியில் பேசியபடி நடந்து சென்று கொண்டு இருந்தாள் வெண்ணிலா. அவளது இடது தோள் பட்டையில் மாட்டியிருந்த சின்னஞ்சிறிய கருப்புநிற கைப்பை, சிறைக்குள் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் கைதியைப் போல தொங்கிக் கொண்டு இருந்தது.

அலைபேசியில் பேசியவாறு, தான் தங்கி இருக்கும் தெய்வானை மகளிர் விடுதியைக் கடந்து சென்றுகொண்டு இருந்த வெண்ணிலாவை, முதல் மாடியின் சாளரத்தில் நின்று கொண்டு இருந்த அட்சயா “ஏய்… வெண்ணிலா… ஏய்… வெண்ணிலா…” என்று இரண்டு முறை சத்தமாக கத்தினாள். அட்சயாவின் சத்தம் அவளின் காதுக்குள் நுழைவதற்கு தடுமாற்றம் கண்டது. அந்த அளவுக்கு அலைபேசியின் பேச்சில் மூழ்கி போயிருந்தாள் வெண்ணிலா.

“ஏம்மா… அந்தப் பொண்ணு அங்கேருந்து கூப்புட்டுக்கின்னே இருக்கு. நீ பாட்டுக்கு பேசின்னே.. போற.. அப்புடி யாருட்ட பேசுறேளோ… ம்…. சத்தம் கூட வெளியே கேட்காம…” என்றாள் விடுதியின் எதிரே பூக்கடை வைத்திருக்கும் நாகலெட்சுமி.

“சாரி.. ஆண்டி… பேச்சுவாக்குல… ஹாஸ்டல தாண்டி போயிட்டேன்….” புன்முறுவல் பூத்தபடி இடது கையை தூக்கி விரல்கள் அசைத்து அட்சயாவுக்கு சைகை காட்டினாள்.
“ஒங்களயே மறந்துறாமடி யா..த்தா. இவளுக போட்டுருக்க சட்ட துணிமணிய பாரு.. டானுசுகாரிக மாறி. . இவளுக சொல்லி என்ன பண்ண. பெத்துவுட்ருக்காகள அவுக ஆத்தா அப்பன சொல்லனும்.. நடயப் பாரு டின்டுக்கு டின்டுக்குனு…..” முனுமுனுத்துக் கொண்டாள் நாகலெட்சுமி.

விடுதியின் அறைக்குள் வந்தவளை, “ஏண்டி எங்க தங்கிருக்கோம்ங்கிறதயே மறக்குற அளவுக்கு யாருகிட்டடி பேசிக்கிட்டு போன… தொண்டை வலிக்க கத்துறேன். எனக்கென்னன்னு போய்கிட்டிருக்க ஏ…ய்.. மகேந்திரன் தானே.. வரவர ஓம்புட்டு போக்கே சரியில்லயே….” சொல்லிச் சிரித்தாள் அட்சயா.

“அவள வம்புக்கு இழுக்கலனா, ஒனக்கு மத்தியானம் சாப்புட்ட சோறு செரிக்காதுல.. நாம என்னடி கெழங்கெட்டையா. வயசுப்புள்ள தானடி.. விடுவியா.. இதப் போயி.. பெருசா……” தன் பங்குக்கு கிண்டலடித்தவாறு துணிகளை மடித்துக் கொண்டு இருந்தாள் ஓவியா.
“நானு யாருகிட்ட பேசுனாலும் ஒடனே.. மகேந்திரன் தானா.. ஏன்டி… ஒங்களுக்கு வேற நெனப்பே இல்லையா. நம்ம பூரணி கிட்டதான் பேசுனேன். வேணும்னா.. நீங்களே அவகிட்ட கேளுங்களே…” பேசிக்கொண்டே தனது பையிலிருந்த வார இதழ் ஒன்றை தரையில் விரித்திருந்த பாய் மீது தூக்கிப் போட்டாள்.

“அட… அதுக்குள்ளயுமா வந்துருச்சா…? நம்ம இருக்க பட்டணத்துக்கு சாய்ந்தரம் தானடி வரும்” இது அட்சயா.

“ஏன்.. சீக்கிரமா வந்தா…. ஒங்க அப்பத்தா கனகவள்ளி கோவிச்சுக்குமா…? இப்ப இவ வாங்கி வரலனா.. நீ போயி கிளுகிளுனு வாங்கி வந்துட்டுதான் மறு வேல பாப்ப…ம் அப்புடித்தானே” நக்கலடித்தாள் ஓவியா.

அதற்குள் வார இதழை புரட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்த அட்சயாவிடமிருந்து வெடுக்கென வாங்கி “மொதல்ல இந்தக் கதையப் படி.. இதப்பத்திதான் அவகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்”
“ம்க்கூம்… அப்படி என்னடி இதுல இருக்கு?” அரபு நாட்டுல கச்சா எண்ணெய்ய கொறச்ச வெலைக்கி வாங்கி.., கொள்ள லாபத்துக்கு நம்ம நாட்டுல விக்கிறாங்களே… அதப்பத்தி ஏதும் எழுதிருக்காங்களா …..” உற்றுப் பார்த்தாள் அட்சயா.

“இவ ஒருத்தி.. பெட்ரோல் டீசல் மட்டுமா வெல ஏறி நிக்கிது. தங்கம் வெள்ளியும்தான் தாறுமாறா எகிறிக் கெடக்குது. அதப்பத்தி இல்லடி…. சத்தியமா சொல்றேன்…. எங்கேயோ நெசமாலுமே நடந்துருக்குமோனு தோனுதடி… மொதல்ல கருமம்புடிச்ச பேண்ட் சட்டையை கழட்டி தலைய சுத்தி எரியனும்டி…” சொல்லிக் கொண்டே பக்கத்து அறைக்குள் உடைமாற்றச் சென்றாள் வெண்ணிலா.

“போட்டுருக்க சட்ட துணி என்னடி பாவம் பண்ணுச்சு… நமக்கு புடிச்ச மாறித்தான் போட முடியும். அவனுக என்ன நெனப்பாக… இவுக என்ன நெனப்பாகனு நெனச்சோம்னா.. பதினாறு மொழ சேலைய வாங்கி ஒடம்பு பூரா சுத்திக்க வேண்டியதுதான். நம்ம மேல என்னடி கொறை கண்ட. பாக்குறவங்க பார்வையில தான்டி இருக்கு…” அட்சயாவின் பேச்சுக்கு ங்க்கூ..ம் என அசட்டுத்தனமாக சிரித்தாள் வெண்ணிலா.

“ம்… அத வாசிச்சுட்டு அப்புறம் சொல்லு. இப்ப தெரியாது…” வெண்ணிலாவின் பேச்சு புரியாத புதிராக இருந்தது. எல்லோரும் பல ஊர்களில் இருந்து நகரத்திற்கு வந்து தங்கி வேலை செய்பவர்கள். வந்த இடத்தில் பழக்கமானதால் ஒரே அறையில் தங்கி இருக்கிறார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகங்கள் வாசிப்பது அதை குறித்து விவாதிப்பது அரசியல் பேசுவது என எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். பட்டன் செல்போன் அப்போதுதான் அறிமுகமாகி பலரின் கைகளுக்கும் வந்திருந்தது. அறையில் தொலைக்காட்சியும் வானொலியும் இல்லாததால் புத்தகம் வாசிப்பதில் அனைவருமே ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
ஓவியாவைப் பார்த்து “நீயும் வர்றியா….” என்றவளிடம் “இல்லடி நா தனியா வாசிச்சாதான் எனக்குப் பிடிக்கும்.. நீ.. இந்த தலவாணிய தொணைக்கி வச்சுக்க…” சொல்லிக் கொண்டே ஒரு தலையணையை அவளருகே தூக்கிப் போட்டாள்.

மெல்ல மெல்ல கதைக்குள் ஊடுருவ தொடங்கியிருந்தாள் அட்சயா… அந்த குறுகலான தெருவில் இருக்கும் ஓட்டு வீடு முன்னால் தட்டு வண்டியை நிறுத்தினார் தங்கராசு. வண்டிச் சத்தம் கேட்டதும் வீட்டுக்குள் இருந்த மூன்றரை வயது காவியாவும் ஆறுவயது அகிலாவும், “அ…,ய்…. அப்பா வந்துருச்சு…” என்று கத்திக்கொண்டே வாசலுக்கு ஓடி வந்தனர்.

“ம்… அந்த ஆளு என்னம்மோ எலிக்காப்டருலயா வந்து எறங்குறாரு…. அப்பன பாத்ததே இல்ல பாரு. ம்…. அவுத்து விட்ட காள கயித்தோட கெளம்புச்சாம். அஞ்சாறு பேத்த.. அங்க்கிட்டும் இங்கிட்டும் அலப்புச்சாம்….” கொள்ளைப் புறத்தில் யாரிடமோ அலைபேசியில் பேசியபடி சளித்துக் கொண்டாள் பானுமதி.

“இவன் ஒருத்தன் எப்ப வர்றான் போறானே தெரியல. நா அப்புறமா பேசுறேன். ம்…..” அலைபேசி இணைப்பை துண்டித்து விட்டு பாத்திரம் கழுவுவது போல் பாவனை செய்யத் தொடங்கினாள்.
தங்கராசின் கழுத்தை குழந்தைகள் இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டனர். உடம்பு கசகசனு இருந்தாலும் குழந்தைகளுக்கு அப்பாவின் வேர்வை வாசனை பிடித்துப் போயிருந்தது.
“ஏ… ராசா… இங்க வாயா ஓங்கிட்ட ஒரு சேதி சொல்லனும். அவ வாசலு பக்கம் இல்லதானே….” என்றாள் பக்கத்து வீட்டு அடைக்கி பாட்டி.

“என்ன ஆத்தா….?” என்றவர் குழந்தைகளை ஆளுக்கொரு கைப் பக்கமாக அணைத்தவாறு அவளருகில் சென்றார்.

“நீ நல்லா இருக்கனும்யா…” அடைக்கி பாட்டி சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக மெல்லியதாக சிரித்துக்கொண்டார்.

“நா பெத்த மவனா நெனச்சு சொல்றேன்… என்னைய தப்பா எடுத்துக்காதய்யா….”
அடைக்கி பாட்டிதான் தங்கராசின் நல்லது கெட்டது என அனைத்திலும் பெத்த தாய் போல் கூடவே இருப்பவள். எதுவாக இருந்தாலும் அடைக்கி பாட்டியிடம் மறைக்க மாட்டார். சொல்லுக்கு சொல் ஆத்தா.. ஆத்தா.. என்று ரொம்பவும் பாசமாகவே இருப்பார் தங்கராசு. பெத்த தாயி சொன்னா கேட்டுக்க மாட்டேனா…. என்று தங்கராசு சொல்லும்போதெல்லாம் கண் கலங்கி விடுவாள் அடைக்கி பாட்டி.

“சொல்லு ஆத்தா… ஒன்னய போயி கோவிச்சுக் கிட்டா… அந்த வானத்து சூரியனே என்னய எரிச்சிருவான்…த்தா” பேசிக் கொண்டே அவள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார். குழந்தைகளும் மடியில் அமர்ந்து கொண்டனர். அப்போது வீசிய காற்றில் பறந்து வந்த தூசி காவியாவின் இரு கண்களையும் சீண்டிப் பார்க்க அழ ஆரம்பித்து விட்டாள்.

“சரி..சரி… அந்தக் காத்தப் புடுச்சு பைக்குள்ள போட்டுருவோம். நமக்கிட்டயே மோதிப் பாக்குதா… ச்சூ..சூ…சூ…..” உச்சுக் கொட்டிக்கொண்டே தன் வாயால் ஊதி ஊதி தூசியை எடுத்தார் தங்கராசு. அருகிலிருந்த குடத்தில் தண்ணீர் மோந்து முகத்தை கழுவி விட்ட பிறகுதான் அமைதியானாள்..
“பாழாப் போன காத்துக்கு பச்சப்புள்ள எது.. பசப்புக்காரி எதுனு கூடவா கண்ணு தெரியாம போச்சு.. அப்பறம் வரட்டும். அந்தக் காத்த கட்டி வச்சு அடி போடுவோம்…” அடைக்கி பாட்டி சொன்னதும் க்….ம்ம்ம் என குழந்தைகள் இருவருமே சிரிக்க ஆரம்பித்தனர்.

“நா… சொல்ல வந்தத சொல்லி முடிச்சர்றேன்யா.. அப்புறம்.அவ வெளில வந்துட்டானா ஏழு ஊர் சண்டக்காரி என்னய விட்டு வைக்க மாட்டா…. பன்னெண்டு மணி இருக்கும் யா… ரோட்ல குலுப்பி அய்சுக்காரன் போகவும் இந்தப் பச்சப்புள்ள அய்சு கேட்டு அழுதுருக்கு… அப்பதைக்கி யாருகிட்டயோ போன்ல கினுகினுனு பேசிக்கிட்டு இருந்துருப்பா போல… பேச்சை நிறுத்தியவள் , ம்,… என பெருமூச்சு விட்டாள்.

ஏய்யா…. போனுல சிரிச்சுசிரிச்சு பேசிக்கிட்டு இருந்தவ என்ன நெனச்சாளோ தெரியல… புள்ளய காட்…டு காட்டுனு காட்டிப்புட்டாயா… புள்ளயோட முதுகு எப்புடி இருக்குனு பாருய்யா…” என்று காவியாவின் முதுகைத் திருப்பிக் காட்டினாள்.

காவியாவின் சட்டையை தூக்கிப் பார்த்த தங்கராசு கண் கலங்கிப் போனார். காவியாவின் முதுகு தடிச்சும் சிவந்தும் இருந்தது. முதுகை தடவிக் கொடுத்து மீண்டும் மடியில் உட்கார வைத்தார்.

“பெரியவ பள்ளிக்கொடம் போக ஆரம்பிச்சுட்டாள… அவ ஏதோ புரிஞ்சு நடந்துக்குறா ராசா…. சின்ன புள்ள என்னய்யா பண்ணும். ஆனா…. அவ போக்கு சரியல்லய்யா.. நீ சூதானமா நடந்துக்கய்யா. அவ அடிக்கடி போன்ல யாருக்கிட்டயோ சிரிச்சு சிரிச்சு கொலஞ்சு கொலஞ்சு பேசுறாய்யா… அவ மேல ஒரு கண்ணு வச்சுக்கய்யா. இல்லாட்டி குடும்பம் கெட்டுப் போயிரும்ய்யா…” காதருகே வந்து கிசுகிசுத்தாள்.

அக்கம்பக்கத்துல இருக்குறவுங்க ஆயிரம் சொல்லுவாங்க. அது எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு போயி சண்டை போட்டா குடும்பம் என்னத்துக்கு ஆகும். யாரு என்ன சொன்னாலும் மண்டைய ஆட்டிக்க வேண்டியதுதானே. எது சரினுபடுதோ அது ஏத்துக்கிட்டு குடும்பத்த கட்டுக்களையாம கொண்டுபோக வேண்டியதுதானே என கல்யாணம் ஆன புதுசில் அடைக்கி பாட்டி சொன்னதை நினைத்துக் கொண்டாலும் மனைவியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்து பேசவில்லை. ஆனாலும் அவளின் மனசு சங்கடப்பட கூடாது என்று சரித்தா…சரித்தா… என்று அசை போட்டுக் கொண்டார். தங்கராசு நல்லா வாழனும் என்கிற எண்ணம் அடைக்கிக்கு எப்பவுமே உண்டு என்பது தங்கராசுக்கு நன்றாகவே தெரியும்.

“பேச்சுதான் ஆத்தா அப்புடி… நல்லவ. கொஞ்சம் கோவக்காரி. அவ்ளோதான். அவங்க பிரண்டுக்கிட்ட யார்ட்டயாச்சும் பேசிருப்பா.. அவளும் பத்தாங்கிளாசு வரைக்கும் படிச்சுருக்காள. அப்புடி தப்பா போயிரா மாட்டாத்தா. ஒனக்குத் தெரியாதா…. கல்யாணம் பண்ணும் போது நான் மட்டுமா போயி கட்டிக்கிட்டு வந்தேன். நீயும் தானே வந்தே. ஓம்மனசுக்கு சரினுபட்டுச்சில்ல. என்னய அவளுக்கு ரொம்ப புடிக்கும்த்தா.. விடுத்தா… போகப் போக சரியாயிடும்.. பாத்துக்கலாம்…” என தங்கராசு சொன்னாலும் அடைக்கிக்கு அரைமனசாவே இருந்துச்சு.
சரித்தா… ரொம்ப நேரம் ஆச்சு… இங்கிட்டு வந்தாலே அவளுக்கு பாதி உசுரு போயிரும்… நா கெளம்புறேன்..” பிள்ளைகளை தூக்கிக் கொண்டு கிளம்பினார்.

“அவ ஏமாத்துறானு தெரிஞ்சும், அவள விட்டுக் கொடுக்காம பேசுறானே…! இவனோட நல்ல மனசுக்கு இப்புடியா பொண்டாட்டி அமையனும்….? ம்….எங்கிட்டோ மனுச மக்களோட சேர்ந்து நல்லாருந்தா சரி..” தனக்குள் நினைத்தவள் திண்ணையில் அப்படியே கால்நீட்டி சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.

“அம்மாடி மெதுவா எறங்குங்க…” கீழே இறக்கி விட்டவர் தனது இடது கை தோள்பட்டையில் மட்டும் மாட்டியிருந்த சட்டையை கழட்டி ஆணியில் தொங்கப் போட்டார்.
குழந்தைகள் பொம்மைகளை வைத்து விளையாடத் தொடங்கினர்.
“பானு கொஞ்சம் சோறு…” கேட்டதுதான் தாமதம்.

“ஏ…ங்… இம்புட்டு நாளா… நா போட்டுக் கொடுத்துதான் உள்ள எறங்குச்சோ.. எப்பவும் போல ஆக்கி வச்சுருக்கேன் போட்டுத் தின்னுட்டு கழுவி வைக்க வேண்டியதுதானே…” கடுகடுத்தாள் பானுமதி.

“ரெண்டு புள்ளை பொறந்துருச்சேனு பொறுமையா இருக்கேன். ஒரு நேரம் இல்லனாலும் ஒரு நேரம் அனுசரிக்குறவதான் பொம்பள. குடும்ப மானம் வீதிக்கு வந்துருமேனு உள்ளயே அழுதுகிட்டு ஒன்னும் நடக்காது மாறியே திரிய வேண்டியிருக்கு. மனுசிக மாறியே இருசிகளும் இங்க இருக்கத்தானே செய்றாங்க. இவ மனுசியே இல்ல. ஆத்தாடி… எங்க அப்பாக்கிட்ட எங்க அம்மா அதிர்ந்து பேசி ஒருநாளும் பாத்ததில்ல. அதனாலதான் எங்க அப்பா மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டே காலத்தை ஓட்டுனாரு. ஒருநாளும் சண்டை சல்லு போட்டுக்கிட்டு பார்த்ததே இல்ல…” என்று தனக்குள் நினைக்க மட்டுமே முடிந்தது. சமையலறைக்குள் சென்றார்.
“கொத்தவரங்காய் இப்புடி தீஞ்சு போயிருக்கே.ஏ…ங் சிலிண்டர சிம்முல வச்சு சமைக்கக் கூடாதா.. டவுனுக்குள்ள வாக்கப்பட்டு வர்ற பொண்டாட்டி விறகில் சமைக்க கூடாதுன்னு தானே எப்பாடுபட்டோ சிலிண்டரை வாங்கினேன். பார்த்து பக்குவமா பொழங்க கூடாதா.. மாடா ஒழைக்கிறது இந்த ஒரு சாணு வயித்துக்குத்தானே… சொற்கள் மெதுவாக வந்து விழுந்ததுதான் தாமதம்.

“ம்… இப்பத்தான் ஏழெட்டு பேரு வந்துட்டு போனானுக. அதான் அவனுகள கவனிக்கவே நேரஞ்சரியாருந்துச்சு… கோவிச்சுக்காதீங்க சாமி…”

அப்டி என்ன தப்பா கேட்டுட்டேன். இப்படி ஒரு சொல்ல யோசிக்காம கொட்டுகிறாளே. இதுக்குத்தான் வாயே தொறக்கிறது இல்ல. அவளின் பேச்சு ஆத்திரமூட்டினாளும் குழந்தைகளுக்காக பொறுத்துக் கொண்டார்.

புது மண் சட்டியை முதன்முதலில் வெறும் அடுப்பில் வைத்து இறக்கிய நிறத்தில் இருந்தது கொத்தவரங்காய். நாய்க்கு வைத்தால் நோந்து பார்க்க கூட கிட்டே வராது.

அவளது நோக்கமோ தன் வயது ஒத்த ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டு வேலைக்கு ஆள் வைத்து சொகுசாக வாழ வேண்டும் என்பதுதான். தங்கராசோ தட்டுவண்டி ஓட்டும் கூலித் தொழிலாளி. இவரை விட எட்டு வயதுக்கு இளையவள் பானுமதி. எங்க ஆயி அப்பன எதைச் சொல்லி ஏமாத்துனானோ தெரியலையே. இப்படி இங்கே வந்து மாட்டிக்கிட்டு அல்லல்படுறேன் என பலமுறை தங்கராசுவிடம் நேரடியாகவே சண்டை போட்டிருக்கிறாள். தனது கொகுசு வாழ்க்கைக் கனவு நடக்காமல் போய் விட்டதே என்ற வெறுப்பின் உச்சம் தான்… இந்தமாதிரி நடந்து கொள்கிறாள்..

வழக்கம் போல் தட்டில் சோறு போட்டுக் கொண்டு தரையில் உட்கார்ந்தார். விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகளும் ஓடி வர அவர்களுக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டார். கொள்ளைப் புறத்திலிருந்து அடுப்படிக்குள் நுழைந்தவள் பாத்திரங்களை கீழே போட்டு யுத்தம் நடத்திக் கொண்டு இருந்தாள். யுத்தத்தில் தெறித்து சொம்பு ஒன்று சுவரின் கீழ் இருந்த பல்லியின் மீது விழுந்து அதன் வாலை நறுக்கி சுகம் கண்டது.

சத்தமில்லாமல் சாப்பிட்டுவிட்டு தட்டைக் கழுவி வைத்துவிட்டு திரும்பினார். செவத்து ஓரமாய் துணிகள் கன்னாபின்னான்னு சிதறிக் கிடந்தன.

“சின்னப் புள்ளைக இருக்கிற வீடு தானே. துணிகள இப்புடி குமுச்சு போட்டிருந்தா அதுக எங்கிட்டு வெளையாடும். இதச் சொன்னாலும் ஆட்டங்கட்டி ஆடிருவா. தரையில போட்டு ஒடச்சவ…. தலையில போட்டாலும் போட்டுருவா. கட்டுன பொண்டாட்டிய அடிக்கிறதுதானாக்கும் பொல்லாத வீரம். புருஞ்சுக்காதவள என்ன பண்ணி என்ன செய்ய….” உள்ளூர பேசிக்கொண்டே துணியை கூடைக்குள் அள்ளி வைத்தார்.

அப்போது அவளது அலைபேசி கிடிங்கிடிங்….. என் சினுங்க ஆரம்பித்தது. “இந்த போனுக்கு வேற…. நேர காலமெல்லாம் தெரியாது. சும்மாவே கெடக்க மாட்டேங்குது. டவுனுக்கு கட்டிக்கிட்டு வந்தேனுதான் பேரு. நா என்னமோ மாளிகைள வாழுறோமங்கிற நெனப்புல கத்திக்கிட்டு இருக்கு. இங்க பாருவே…. வாலு அந்து போனாலும் நாசமாபோன பல்லி இன்னமும் இங்கேயே தான் சுத்திக்கிட்டு கெடக்குது. நகர மாட்டேங்குது. அங்கிட்டு போயி தொலைய வேண்டியதுதானே.” முனுமுனுத்துக் கொண்டே கொள்ளைப்புற வாசலுக்குச் சென்றாள்.
தங்கராசுக்கு சுருக்கென இருந்தது. அவர் காதில் விழ வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னாள்.

அலைபேசி சினுங்கள் நின்றது. ஆனால், அவளது உதடுகள் மட்டும் சத்தமில்லாமல் அலைபேசியில் உரையாடலை நிகழ்த்திக் கொண்டு இருந்தது.

தன் பிள்ளைகளுக்கு முத்தம் கொடுத்து முத்தம் பெற்றுக் கொண்டு தட்டுவண்டியை அழுத்திக் கொண்டு வடக்குராஜ வீதி நோக்கி சென்றார்.

“எப்…பா… தங்கராசு… ஒன்னதாயா தேடிக்கிட்டு இருக்கேன். எதுவும் வேற லோடு இருக்கா…?” மயில் அரிசி மண்டி கடையில் இருந்து சத்தம் போட்டார் முதலாளி வேலு.
“இப்பதாங்கண்ணே சாப்புட்டு வர்றேன். நமக்கு லோடு இருக்கா…?” வண்டியை கடைக்கு ஓட்டி வந்தார்.

“யேயா…. இப்புடி நேரங்கெட்ட நேரத்துலயா சாப்புடுறது. மத்தவங்க மாதிரி மத்தியான சாப்பாட்ட கடையில சாப்புட்டுக்கலாம்ல…”

“கடை சாப்பாட்டுல ருசி கண்டமுனா பொம்பளப் புள்ளைங்க ரெண்டையும் கரை சேக்க முடியுமாங்கண்ணே…?” துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டார்.

நகரத்தில் கூலி வேலை செய்யும் பலரும் கடை சாப்பாட்டை நம்பித்தான் பொழப்பு ஓடுது. காலையில ரெணடு டீ ரெண்டு வடையோ போண்டாவோ உள்ள தள்ளிட்டாப் போதும் மத்தியானம் மூனு மணி வரைக்கும் வயிறு கம்முனு கெடக்கும். அதுக்கு அப்புறம் பசிச்சா நாலு பொராட்டாவோ இல்ல குசுக்காவோ உள்ள தள்ளுனா போதும். ராத்திரி வூடு போற வரைக்கும் தாக்குப் பிடிக்கும். வூட்டுக்குப் போயி நிம்மதியா சாப்பிட்டு வரலாம்னு நெனச்சா கூலி வேலை கொடுக்குறவன் நமக்காக காத்துக் கிட்டு இருப்பானா…. இதெல்லாம் தெரிஞ்சுதான் பலபேரு கடை வீதியே கெதினு கெடந்தாங்க. ஆனா, தங்கராசு காசு பணத்த தாண்டி புள்ளைக்களுக்காக மத்தியான நேரத்துல வூட்டுக்கு போறத வழக்கமா வச்சுருந்தாரு…..

“வர வர நீ ரொம்ப பெரிய மனுசனாயிட்ட… சரி…. இந்த ரெண்டு சிப்பம் அரிசிய மச்சுவாடில நம்ம ரெங்கநாதன் வக்கீல் வீட்ல கொடுத்துரு. வரும் போது, காசையும் வாங்கி வந்துரு…” வேலு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே இரண்டு மூட்டைகளையும் தூக்கி வண்டியில் வைத்துக் கொண்டார்.

யார் எந்த வேலை சொன்னாலும் தங்கராசு தட்டிக் கழிப்பதே இல்லை. அதனால் எல்லோருக்கும் தங்கராசு செல்லப்பிள்ளைதான். எவ்வளவு விலை உயர்ந்த சரக்குகளையும் தங்கராசுவை நம்பிக் கொடுப்பார்கள். கை சுத்தம் வாய் சுத்தம்னா அது தங்கராசுதான்.
தட்டுவண்டி மச்சுவாடி நோக்கி கிளம்பியது. நகரத்துலருந்து எங்க வேணாலும் தட்டு வண்டிகாரங்க சுமைய ஏத்திக்கிட்டு போவாங்க. ஆனா…. மச்சுவாடினா மட்டும் ரெண்டு ரூவா சேத்து தாரேனு சொன்னாலும் ஏத்திக்கிட்டு போறதுக்கு யோசிப்பாங்க. பெடல் போட்டு அழுத்துறதுக்குள்ள வானா போயிரும். மெனக்கெட்டு பெடல அழுத்தி மிதிக்கும் போது செயினு தெறிச்சு போறதெல்லாம் நடக்கும். இதுக்கு பயந்துகிட்டே பலரும் மச்சுவாடிக்கு சவாரிக்கு போவதில்லை. இங்கேருந்து பாத்தா வானத்துக்கும் பூமிக்கும் ஒரே கணக்கா மச்சுவாடி மேடு இருந்தா எவன்தான் போவான். சைக்கிள்ல போறவனுகளே எறங்கிதான் தள்ளிக்கிட்டுப் போறானுக…..

“எங்கன வேணாலும் லோடு ஏத்தலாம். இந்த மச்சுவாடி மேட்டுல ஏத்துறதுக்குள்ள நாக்கு வெளில வந்துரும். மொதல்ல தட்டு வண்டிக்கு மோட்டார வச்சுட்டோம்னா முறுக்கிக்கிட்டு போயிடலாம். ஆத்தாடியோ..வ் மிதிக்கவே முடியல…” எப்போது மச்சுவாடிக்கு சவாரி என்றாலும் இப்படி நினைக்காமல் இருப்பதே இல்லை. இப்போதும் அதையே தன்னுள் அசை போட்டபடி வண்டியை மிதித்துக்கொண்டு போனார் தங்கராசு.

அன்றொரு நாள்.. இரவு ஒன்பது மணி இருக்கும்…

பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கராசு வீட்டு முன் கூடியிருந்தனர். குழந்தைகள் இருவரும் அழுதுகொண்டே ஓடி வந்து தங்கராசை கட்டி அணைத்துக் கொண்டனர்.
என்ன ஏதுனு சரியாக கணிக்க முடியவில்லை. ஏதும் புரியாதவராய் தயங்கியபடி நடை போட்டார் தங்கராசு.

“சிறுக்கி மக இப்புடி பண்ணிட்டாளேய்யா…!” எதிர் வீட்டு மாரிக்கண்ணு வானத்திற்கு கைகளை நீட்டிக் கத்தினாள். அவளின் சத்தம் கேட்ட தங்கராசுக்கு திக்திக் என்றிருந்தது
“செத்துட்டாளோ… இருக்காது…. அவ பண்ணுன சித்ரவதைக்கு நாந்தானே இந்நேரம் போய் சேந்துருக்கனும்…? பச்சப்புள்ளைக மொகத்துக்காக பல்லக் கடிச்சுக்கிட்டு பெருவெரல ஊனில நடந்துக்கிட்டு இருக்கேன். அப்படிருக்க நாம ஒன்னும் சொல்லலையே. அவ போக்குலதானே விட்டேன். குடிச்சிட்டு சண்டகிண்ட போட்டுருந்தாலாச்சும் அய்யோ….. புருசன் வந்துட்டானே…. சண்டை போடுவானேனு கொஞ்ச நெஞ்ச பயம் இருந்துருக்கும். பல வீடுகள்ல குடிகார புருசனுக்குத்தானே பயப்படுறாக.. நாம்தான் அந்த வேலைக்கிப் போறதில்லையே…” கண்கள் விரிய வீட்டை உற்று நோக்கினார்.

“ஏய்யா…. செத்துப் போயிட்டாளோனு பயந்து பயந்து பாக்குறீயா…? நெசமாலுமே செத்துதாயா போயிட்டா…. அதான் அந்த பைனான்சு காரனோட ஓடிப் போயிட்டாயா…! அந்த பைனான்சுகாரப்பய திடுதிப்புனு தட்டுவண்டி ஓட்டி குடும்பம் நடத்துற அன்னாடம்காச்சிக இருக்க நம்ம வீடுகளுக்கு வழியக்க கொண்டாந்து வட்டிக்கி பணம் கொடுக்கும்போதே ஏதோ தப்பு நடக்கப்போவுதுனு நெனச்சேன். அந்த கருமத்த இப்ப சொல்லி என்ன பண்ண… நாலு மணில இருந்து ஒன்ன தேடுறோம்… எங்கிட்டுய்யா போன…?” தங்கராசுவின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டாள் அடக்கி பாட்டி.

அவகிட்ட போன கொடுக்காத.. நீ வச்சுக்கனு எத்தனையோ வாட்டி சொன்னேனே.. அவ மூச்சுக்கு விடாதேனு தலையால அடிச்சுக்கிட்டேனே…. ஒரு சொல்லாச்சும் கேட்டியா..? போனு வச்சுக்கிட்டு திரிஞ்சா மூட்ட தூக்கும் போது விழுந்துரும். போன் வச்சுக்கிட்டு திரிஞ்சா பொழப்ப யாரு பாக்குறது. நானு…. ஆபிசர் வேலையா பாக்குறேன். வீட்டுக்காரி வச்சுருக்கட்டுமேனு சொன்னியே…! அவ வேலைய காட்டிட்டாளே…! மாம மகனுதானே கட்டிக்கிட்ட…! இதுதானா அந்த ஒறவோட லெச்சணம்.. வாயில அப்புடியே வார்த்தை கக்கிக்கிட்டு வருதுய்யா.‌ அவ எப்புடி நல்லா இருப்பான்னு பாத்துப்புட்டுதாய்யா இந்தக் கட்ட மண்ணுல சாயும்…!” அடைக்கி பாட்டி கூப்பாடு போட்டு அலறினாள்.

“என்னப்பா? நீ…..தாயி தகப்பன் இல்லாத புள்ளனு எம் மகள கட்டிக் கொடுத்தா… அவளயே. நடத்தை சரியில்ல.. கண்டிச்சு வையிங்கனு எங்ககிட்டயே வந்து சொல்ற… வக்கத்து பயலுக வார்த்த சரியில்லங்கிறத காட்டிபுட்டியே…!” என்றோ ஒருநாள் மாமனார் சொன்னது தங்கராசுக்கு நினைவுக்கு வந்தது.

“தாய அமுக்கி புள்ள போன கதையா… ஆடுனாளே..!”

“பொண்டாட்டிய அடங்கி ஒடுங்கி இருக்க வச்சுருக்கனும். ஆரம்பத்துலயே லூசா விடவும்… இப்ப மானம் கப்பலேறிருச்சா…? போன மானமருவாத பொழுது விடிஞ்சா வந்துருமா…”
“அவ இவன வேண்டா வெறுப்பாத்தானே கட்டிக்கிட்டா… நாலெழுத்து படிச்சவ… அவ மனசுல என்ன ஏது இருக்குனு ஊனி கேட்டுருந்தா.. இப்ப இந்தமாதிரி நடந்துருக்குமா..‌”
“இவன கட்டிக்கிட்டதே அவன் கூட பழகுறதுக்குத்தானே… இதோட ரெண்டாவது தடவையா அவன்கூட ஓடிப் போயிருக்கா…. ஏப்பசோப்பையா இவனிருக்கவும்தானே மாமனாரு, மாமியாரு பேச்சக் கேட்டு அன்னைக்கி சமாதானமா கூட்டி வந்தான்ல…., என்ன பாவம் செஞ்சானோ…?”
“எதுக்குய்யா இப்புடி ஆளாளுக்கு பேசுறீங்க…? அவுகஅவுக சோலிய பாருங்க… பச்சப்புள்ளைங்க வச்சுக்கிட்டு அவனே நொந்து போயி இருக்கும் போது…” அடைக்கி புருசன் முத்துப்பழனி சத்தம் போட்டார்.

“புள்ளைக ரெண்டும் கத்தவும்தாயா… நாங்க வெளில வந்து பாத்தோம். பாவி மக… அவன் இடுப்புல கைய போட்டுக் கிட்டு பைக்குல சிங்குசிங்குனு கண்ண மூடி தொறக்குறதுக்குள்ள சிட்டா பறந்துட்டாய்யா… சனியன் தொலஞ்சுருச்சுனு நெனச்சுக்கய்யா. அவுக ஆயி அப்பனுக்காச்சும் அடங்குறவளா இருந்துருக்கனும். அவுககிட்ட போயி சொல்லி…. கதை ஆகுறாப்புல இல்ல. எதுக்கும் டவுனு போலீஸ்காரங்ககிட்ட போயி பேருக்கு எழுதி வச்சுட்டு வருவோம். நாளப்பின்ன ஒதவும்ல ..” அடைக்கி ஆறுதல் கூறினாள்.

தன் பிள்ளைகளை மார்பில் அணைத்தவாறு வீட்டுக்குள் தெற்கு பார்த்த சுவரில் சாய்ந்தவாறு உட்கார்ந்தார். அப்போது மின்தடை ஏற்பட அடைக்கி பாட்டி சிம்னி விளக்கை பற்ற வைத்தாள்.
ஆம்பளப்புள்ளனா கூட நாலுகடவு போயி பொழச்சுக்குங்க. ரெண்டும் பொட்டப்புள்ளையா போச்சே. எப்புடி கரை சேக்கப் போறானோ….. தனக்குள் ஏதேதோ புலம்பியவாறு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தாள் அடைக்கி பாட்டி.

குழந்தைகள் தங்கராசின் மடியில் உறங்கிக் கொண்டு இருந்தனர். தங்கராசு மட்டும் வாசலை பார்த்தபடியே இருந்தார். சிம்னி விளக்கிலிருந்து ஒளி கிளம்பி வாசலுக்கும் பரவியது.
“குடும்ப போர்வைக்குள் செய்யாத குற்றத்துக்கு ஆண்கள் மட்டுமே பல நேரங்களில் தண்டனையை அனுபவித்து விடுகிறார்கள். இதை அறியாமலேயே இந்த உலகம் உறங்குவதும் விழிப்பதுமாய் இருக்கிறது…” தங்கராசின் மனசு ஞானியைப்போல் தானாக பேசிக் கொண்டது.
“நாம சொன்னதுக்கெல்லாம் எதுத்து எதுத்து கேட்ககூடாத சொல்லெல்லாம் கேட்குறமாறி பேசுனா… வெறும் வாயாடிதான். தப்பானவ இல்லனு தப்பா புரிஞ்சுக்கிட்டேன். கட்டிக்கும்போதே புடிக்கலனு நேர்ல சொல்லியிருந்தா இவ்ளோ தூரம் வந்துருக்காதே.. அவ அப்பனும் ஆத்தாளும் அன்னைக்கி அப்புடி குதிச்சாக…” வேதனையை மெல்லிய சிரிப்பு மூலம் வெளிக் காட்டிக் கொண்டார்.

புள்ள பொறக்காதானு பணத்த கட்டி வச்சுக்கிட்டு பெருங்கொண்ட ஆளுக அலையும்போது கெட்டிசமத்தா ரெண்டு வைரங்க இருக்க எனக்கென்ன கவலை.. ராத்திரி பூராவும் ஏதேதோ நெனச்சு தூங்கவே இல்லை.வீட்டு வாசலில் ஆள் நடமாட்டம் இருப்பதைக் கண்டு வீட்டுச் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். அதிகாலை மணி ஐந்தை நெருங்கிக் கொண்டு இருந்தது.

உழவர் சந்தைக்கு செல்லுகுடிக்காரர்கள் தங்கராசு வீட்டு வழியாகத்தான் கூடையில் தோட்டத்துக் காய்கறிகளை சுமந்து கொண்டு செல்வார்கள். செல்லுகுடிகாரர்களின் வருகையைப் பார்த்த பிறகுதான் அங்கு பொழுதே விடியும்.

தனியாக தட்டுவண்டியில் சென்ற தங்கராசு தன் மகள்களையும் தட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டு வழக்கம் போல சவாரிக்குச் சென்றார். பச்சப்புள்ளைகள தனியா எதுக்கு விட்டுட்டு வரனும். வண்டில ஒரு ஓரமா உக்காந்துகட்டும். ஆம்பளப்புள்ளைங்க மட்டுந்தான் ஒசத்தியா..? ஏம்புள்ளைகள நானு வளர்த்துக் காட்டுறேன் பாரு. தோது கெடைக்கிறப்போ வண்டில வச்சுக்குவோம். அக்கம்பக்கத்துல நமக்கும் நாலு மக்கமனுசல சேத்து வச்சிருக்கேன்ல. பதவிக்காக வராமலா போயிடுவாங்க… தட்டு வண்டியில் தன் குழந்தைகளுக்கு இருக்கும் இடம் போக மீதி இடத்தில் சாமான்களை ஏற்றிக் கொண்டு செல்வது வாடிக்கையாகிப் போனது.
காலை ஒன்பது மணி வரை தட்டுவண்டி பயணம். பிறகு பொதுக் கழிப்பறை குளியல். காலையில் ஓட்டல் சாப்பாடு, ஒன்பது மணிக்கு மேல் பெரிய மகளை சந்தைப் பேட்டை பள்ளியிலும் சின்ன மகளை பக்கத்திலிருக்கும் பால்வாடியிலும் விட்டுவிட்டு சவாரிக்கு செல்வது என பழக்கிக் கொண்டார்.

“எம்மாடி, பாப்பாவ மத்தியானம் சாப்பிட்டதும் கூட்டியாந்து ஒங்கூட வச்சுக்க… நா… சாய்ந்தரம் வந்து கூட்டிப் போறேன்” தங்கராசின் உதடுகள் சிரிப்பது போல் பேசினாலும் கண்கள் பல நேரம் அழுவதை காட்டிக் கொடுத்து விடுகின்றன. என்னதான் பெத்தவன் பாத்துக்கிட்டாலும் தாயி மாதிரி வருமா…. என்பது அவரின் நெனப்பு.

விடுமுறைக் காலங்களில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஆளில்லாததால் தட்டு வண்டியிலதான் பயணம்… சவாரி இல்லாத நேரத்தில் உழவர் சந்தை பெரிய வேப்பமரம்தான் குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல்.

அன்றும் அப்படித்தான் தக்காளி பெட்டிகளை ஏற்றிக் கொண்டு இருக்கும் போது…
“ஏண்டா…? சாமான ஏத்த போற எடமெல்லாம் ஓம் புள்ளைகளையும் கூட்டிக்கிட்டே திரியுறீயே…! ஏதாவது ஆச்சுனா என்ன பண்ணுறது…? புள்ளைகள ஆஸ்டலுல விட்ரு.. இல்லனா நல்ல புள்ளயா பாத்து கல்யாணத்த பண்ணுடானா… இன்னொருத்திய கட்டிக்கிட்டா ஏம்.. புள்ளைக அனாதையா போயிரும்னு சொல்ற… இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்புடி இருக்கப் போறீயோ… வண்டிவாசிக்கு பாத்துப் போ…..” லாரி மார்க்கெட்டில் ஏ.ஆர்.கே தக்காளிக் கடை முதலாளி முத்துச்சாமி சொன்னதும்…

“நெதமும் இதைத்தான் நீங்களும் சொல்றீக. நானும் என்ன… இன்ன்கினு எதையும் புதுசாவா சொல்லப்போறேன். இந்தப் புள்ளைகள கரை சேக்குர வரைக்கும் இந்த வண்டி ஓடுனா போதும்ணே…”

“அடப்போடா பைத்தியக்காரப் பயல. ம்……இந்த வயசுலயே இவ்வளவு சோதனையா ஒனக்கு…”
தட்டுவண்டி கிளம்பியது. குழந்தைகள் வண்டியை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்கள்.
முத்தம்மாள் திரையரங்கு வளைவில் தட்டுவண்டி திரும்பிய போது எதிரே வேகமாக வந்த டாட்டாய்சி வண்டி கட்டுப்பாட்டு இழந்து தட்டுவண்டியில் மோதியதில் வண்டியும் ஒருபக்கமாக சாய்ந்தது. தங்கராசு சாக்கடை பக்கமாக விழுந்து உருண்டார்.
அப்பா… அப்பா…. அப்பா….!” குழந்தைகளின் கதறல் ஒலி காண்பவரை நிலை குலையச் செய்தது.
ஆட்கள் கூடி விட்டனர்.

“நல்ல வேளை தக்காளி பெட்டிக புள்ளைக மேல விழுந்து காப்பாத்திருச்சு…!
“யோ… ஆட்டோக்காரன போட்டு மிதிங்கய்யா…”
“அட… உள்ள கெடக்குற ஆள தூக்குங்கய்யா….”

தலையில் அடிபட்டு தங்கராசுக்கு இரத்தம் கொட்டியது. அருகிலிருந்தவர் தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து தங்கராசின் தலையில் கட்டினார். முகத்தில் தண்ணீர் தெளித்தனர். குழந்தைகள் எந்திருச்சு வந்து தங்கராசை கட்டி அணைத்துக் கொண்டனர்.

அப்போது அதன் வழியே பைக்கில் “என்னங்க… ஹெல்மட்ட தூக்கி வேடிக்கை பாக்காம வண்டியப் பாத்து ஓட்டுங்க. குடிகாரப் பயலுக குடிச்சுட்டு மோதிருப்பானுக. எதும் வாங்கனும் வைக்கனும்னா இங்க வேணாம். திருச்சியப்பக்கம் போவோம்னா… இங்க கூட்டி வர்றீங்க….” முக்காடுக்குள் தன்னை ஒளித்துக் கொண்டு பைனான்ஸ்காரன் கார்த்திக்குடன் போய்க் கொண்டு இருந்தாள் பானுமதி.

கதையை வாசித்து முடித்த அட்சயாவின் கண்கள் குளமாக்கிக் கொண்டு இருந்தது.

 

Loading

One Comment

  1. அடித்தட்டு மக்களின் வாழ்வியல் விழுமியங்களை நகக் கணுக்குள் குண்டூசியை இறக்குவதைப்போல
    கதை சொல்லுவதில் சோலோச்சிக்கு நிகர் சோலச்சியே.

    தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, தன் சரீரத்தை சாரெனப் பிழியும் தங்கராசு போன்றோரின் மௌனமும், பக்குவமும், சகிப்புத்தன்மையும், பொறுமையும், வலிகளும், வேதனைகளும், துயரங்களும் சில பானுமதிகளின் ஆடம்பர ஆசைக்குள் குரூரமாய் புதைக்கப்படுவதை நியாயத்தின் பக்கம் நின்று பேசுகிறது கதை..

    தங்கராசுவின் மறுத்துப்போன முதுகு வலியில் கொஞ்சம், காப்பேறிக் கொப்பளித்த கை ரணத்தில் கொஞ்சம் , குதிகால் வெடிப்பில் கசியும் உதிரத்தில் கொஞ்சமென தன் பசலைக்கு பயன்படுத்திக்கொண்ட பானுமதியின் குறுகிய வாழ்க்கை, தங்கராசுவின் கண்ணீரால் அழியுமா தெரியவில்லை ஆனால் காவியா, அகிலாவின் கண்ணீருக்குள் சீக்கிரமே முழ்கிச் சாகும், இது அட்டைக்கி பாட்டி மீது சத்தியம்….

    …… நிகழ்பாரதி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *