உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் குறித்து புதிய தகவல்கள் வரும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் தொடர்பான சில தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 21ஆம் திகதியுடன் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 6 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில், அன்றைய தினத்திற்குள் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, உள்ளூராட்சித் தேர்தலையொட்டி தெய்யன்தரவில் கடந்த மார்ச் 30ஆம் திகதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
இதன்படி எதிர்வரும் நாட்களுக்குள் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் சில குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 268 பேர் கொல்லப்பட்டதுடன், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் சம்பவத்தில் பிரதான சூத்திரதாரிகளை வெளியிடாவிட்டால் வீதிக்கு இறங்குவோம் என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் 21ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படலாம் என்று ஜனாதிபதியின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கத்தோலிக்க சபையின் ஊடக பேச்சாளரான ஆயர் சிறீல் காமினி, ஏப்ரல் 21ஆம் திகதி வரையில் மிகவும் எதிர்பார்ப்புடன் அரசாங்கத்தின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
![]()