இலங்கை

இந்தியாவுக்கு வருமாறு சஜித்தை மோடி அழைப்பது ஏன்?

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இந்தியாவுக்கு வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இச்சந்திப்பின் நிறைவின் போது, சஜித் பிரேமதாசவுக்கு டெல்லிக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அறிவிப்பை வெளியிடும் நோக்கத்துடன், சஜித் பிரேமதாசவை தனியாக சந்திக்க விரும்புவதாக நரேந்திர மோடி முன்கூட்டியே தெரிவித்திருந்தார் என்று பலர் நம்புகிறார்கள்.

டொனால்ட் டிரம்ப் விதித்த அதிக வரிகளால் இலங்கை தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், எனவே, இலங்கை ஆடைகளுக்கு இந்தியா வழங்கும் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச மற்றொரு கோரிக்கையையும் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வது வழமையான விடயமாக இருந்தாலும் இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது அவரை தனியாக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு அவ்வாறே சந்திப்பும் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேசிய மக்கள் அரசாங்கத்தில் இந்திய பிரதமரின் விஜயம் இடம்பெற்றிருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவருக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்பட்டமை அரசியலில் பரபரப்பான விடயமாக மாறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *