அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?; இலட்சம் பேர்வரை தொழில் வாய்ப்புகளை இழக்கலாம் !

அமெரிக்காவின் புதிய தீர்வை வரித் திட்டத்தால் இலங்கையில் பெருமளவிலானோர் தொழில் வாய்ப்புகளை இழக்கலாம் என்பதுடன், நாடு பெரும் பொருளாதார பின்னடைவை நோக்கி செல்ல நேரிடலாம் என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதனை அவசர நிலைமையாக கருதி இது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்பதனை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று புதன்கிழமை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்க ஜனாதிபதியின் புதிய தீர்வை வரி முறைமையை செயற்படுத்துவதை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார். ஆனால் மூன்று மாதங்கள் நிறைவடைந்த பின்னர் இந்த வரி முறைமை செயற்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் தனது தேர்தல் அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்த நிலையில், இப்போது ஆரம்பித்துள்ளதை நீக்க முடியாது. எமக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரியை குறைத்தாலும் 25 முதல் 30 வரையான வீதத்திற்கு தீர்வை வரியை செலுத்தினாலும் எமக்கு அது பெரும் பிரச்சினையாகும்.
எமது வர்த்தகங்களின் லாபங்களை பார்த்தால் அவ்வாறான அதிக தீர்வை வரிகளில் லாபம் பெற முடியாது. நஷ்டமே ஏற்படும். தீர்வை வரி அதிகரிக்கும் போது நுகர்வோரின் எண்ணிக்கையும் குறைவடையும். இதனால் பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுக்க நேரிடும். இதனை நிறுத்த முடியாது. தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போதல் இதிலொரு தாக்கமாகும். தொழில் இழப்புகள் இலட்சமாக இருந்தாலும் அதிலும் குறைவாக இருந்தாலும் அந்த எண்ணிக்கையில் உயர்வே ஏற்படும். இதனுடன் தொடர்புடைய அறை வாடகை வழங்குனர்கள், கடைத் தொகுதிகளை வழங்குபவர்களின் வருமானங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக எமது பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும். எமது கணக்கு இருப்பிற்கும் சுமை ஏற்படும். எமக்கு கிடைக்கும் நிதியும் குறைவடையும். இதனால் நாங்கள் பெறும் கடன் தொகையும் அதிகரிக்கும். இந்த நெருக்கடி நிலைமையால் ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைந்துள்ளது. 2028 இலக்கை அடைய முடியுமா என்று சிந்திக்க நேரிட்டுள்ளது. அத்துடன் பொருளாதார வளர்ச்சி வேகமும் குறைவடையலாம்.
ஆகவே இலங்கைக்கு பிரச்சினைகள் பல உள்ளன. இதனால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். அதேபோன்று எவ்வாறு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்று ஆராயுங்கள். இதனை அவசர நிலைமையாகக் கருதி அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைன தொடர்பில் அறிவிக்காவிட்டால் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். எவ்வாறாயினும் அரசாங்கம் இது தொடர்பில் வேலைத் திட்டங்களை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
![]()