இலங்கை

கொழும்பு மாநகர சபை உட்பட 18 சபைத் தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீதிமன்றால் இரத்து!

கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.

இதேவேளை உரிய காலத்திற்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தால் குறித்த உள்ளூராட்சி சபைகளுக்காக கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டள்ளது.

உரிய காலத்திற்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்ற அடிப்படையில் தமது வேட்பு மனுக்களை தெரிவத்தாட்சி அதிகாரிகள் நிராகரிக்க எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என்று அறிவிக்குமாறு கோரி அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த மனுக்களை கடந்த 7ஆம் திகதி ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவவர் நீதிரியரசர் மொஹமட் லபார் தாஹீர் மற்றும் கே.பீ.பிரானந்து ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம், அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியதுடன், குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளின் தேர்தலை மே 6ஆம் திகதி நடத்துவதற்காக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

இதன்படி இதன்படி கொழும்பு மாநகர சபை மற்றும் குளியாப்பிட்டிய, ஹரிஸ்பத்துவ, உடபலாத, பன்வில, பாததும்பர ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தடையுத்தரவு தொடர்பில் சட்டமா அதிபர் தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்கு வழங்கிய இடைக்கால தடையை இரத்துச் செய்ய தீர்மானித்தது.

அத்துடன் 18 உள்ளூராட்சி சபைகளுக்காக குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட குறித்த வேட்பு மனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *