பெருந்தொகை பண மோசடி : வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது !

பண மோசடி குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் வைது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்திய ரூபா மதிப்பில் 13 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018 ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.
கரீபியன் நாடான அண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021 ஆம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் இறுதியாக மெகுல் சோக்சி தஞ்சம் அடைந்தார்.
மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதால் அதன்மூலம் மெகுல் சோக்சியும் பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றார்.
இந்நிலையில் புற்று நோய் சிகிச்சைக்காக சுவிற்சர்லாந்து வைத்தியசாலைக்கு மெகுல் சோக்சி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவரை பெல்ஜியம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சோக்சி, பெல்ஜியம் சிறையில் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மெகுல் சோக்சி எதிராக இரண்டு பிடிவிறாந்துகளை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்திருந்தது.
சிறை வைக்கப்பட்டுள்ள சோக்சி, மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி பிணையில் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், உடனடியாக அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()