உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு நான் கூறுபவர்தான் பிரதான சூத்திரதாரி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மெளலவியே என்றும், இவரை தவிர வேறு பிரதான சூத்திரதாரி இருப்பராக இருந்தால் அரசாங்கம் தேடிக் கண்டுபிடித்து காட்டட்டும் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த சரத் வீரசேகரவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக நீங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது கூறினீர்கள். நெளபர் மௌலவியே பிரதான சூத்திரதாரி என்றும் கூறியிருந்தீர்கள். அவர்தான் பிரதான சூத்திரதாரியென்றால் அரசாங்கம், பேரயர் மற்றும் வேறு அமைப்புகளும் தேடும் பிரதான சூத்திரதாரியென யாரை தேடுகின்றது என்று அந்த நிகழ்ச்சியில் சரத்வீரசேகரவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதன்போது பதிலளித்த அவர் கூறுகையில்,
அவர்தான் பிரதான சூத்திரதாரி, சஹரானை தவிர மற்றைய அனைவரையும் போராயர் ஏசுகின்றார். ஆனால் சஹரான்தான் இந்த தாக்குதலை நடத்தினார். சஹரானை நௌபர் மௌலவியே வழிநடத்தியுள்ளார். இவரை விட வேறு பிரதான சூத்திரதாரி இருந்தால் தேடிக்கண்டுபிடியுங்கள். 700 பேரை கைது செய்துள்ளதுடன், மேல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இவரை தவிர பிரதான சூத்திரதாரி இருப்பராக இருந்தால் 6 வருடங்களாக அவர் ஒளிந்து இருந்தாரா? ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு யாராவாது இருந்தால் அவர் யார் என்று பார்ப்போம். அநுரகுமார யாரை காட்டப் போகின்றார் என்று பார்ப்போம்.
கோதாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கவே இந்த தாக்குதலை நடத்தியதாக கூறுவதற்கே முயற்சிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் மக்கள் சிங்கள பௌத்த தலைவரை நாட்டின் தலைவராக்க செயற்படுவார்களா? என்று சிந்திக்க வேண்டும். இவருக்காக தமது உயிரை முஸ்லிம்கள் மாய்த்துக்கொள்வார்களா?
இதேவேளை இந்த தாக்குதல் எதற்காக நடந்தது என்று கூறப்பட்டுள்ளது. இதில் ஐஎஸ் அமைப்பு தொடர்புபட்டுள்ளது என்றும், நௌபர் மௌலவி தொடர்புபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளளது. சஹரானே எதற்காக தாக்குதல் நடத்தப்படுகின்றது என்பதனையும் கூறியுள்ளார். இதனால் வேறு சூத்திரதாரி இருப்பதாக நான் நம்பவில்லை என்றார்.
![]()