திருமலை குச்சவெளியில் 28 விகாரைகளுக்காக 3750 ஏக்கர் காணி!; ஏற்கனவே 6 விகாரைகளுக்கு காணி அபகரிப்பு

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 28 விகாரைகளுக்காக மாத்திரம் 3750 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கையகப்பட்டுள்ளதாகவும் இதற்குள் தமது விவசாய காணிகளும் அடங்குவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுடைய பெருமளவான காணிகள் -வனவள பாதுகாப்பு திணைக்களம், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்களாலும் பௌத்த பிக்குகளாலும் கையகப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 34க்கு மேற்பட்ட விகாரைகளில் 28 விகாரைகள் மாத்திரம் 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றுக்காக 3750 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அளிப்பு மற்றும் பூஜாபூமி அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் இவற்றுக்கு மேலதிகமாகவும் பௌத்த பிக்குகளால் மக்களுடைய காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றில் விவசாயமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் காலாகாலமாக குறித்த காணிகளில் விவசாயம் மேற்கொண்டுவந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
486 பௌத்த மக்களே இங்கு வாழும் நிலையில் 34 விகாரைகளா? அதுவும், பௌத்த மக்கள் எவருமே வசிக்காத இடங்களிலும் பெருமளவான மக்களுடைய காணிகளை அபகரித்து விகாரைகள் கட்டி வருகின்றார்கள்.
அதுமட்டுமல்லாமல் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள, காலாகாலமாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுவந்த 10,432 ஏக்கர் நிலங்களை விடுவிக்குமாறு கோரப்பட்டு வருகின்ற நிலையிலும் இதுவரை எவ்வித காணிகளும் விடுவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் அரசாங்கம் நெல் உற்பத்தியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
![]()