சட்டங்கள், மனித உரிமைச் சட்டங்களை மீறியிருந்தால் இராணுவ பிரதானிகளாக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க வேண்டும்

நாட்டின் சட்டத்தையோ, சர்வதேச சட்டங்கள் அல்லது மனித உரிமை சட்டங்களையோ மீறியிருந்தால் அவர்கள் இராணுவ பிரதானிகளாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்கியே ஆக வேண்டும் என்றும், இராணுவப் பிரதானிகள் என்பதற்காக அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கடப்பாடு எந்த அரசாங்கத்திற்கும் கிடையாது என்றும் முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னாள் படைகளின் பிரதானி சவேந்திரசில்வா உள்ளிட்ட முன்னாள் இராணுவ பிரதானிகள் மூவருக்கு எதிராக பிரித்தானியாவால் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பிலும், அது தொடர்பில் இலங்கை அரசாங்கதத்தின் பதில் தொடர்பிலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மனித உரிமைகளை மீறியிருந்தால் இராணுவம் என்பதற்காக ஒருபோதும் மன்னிப்பு வழங்க முடியாது. வரலாற்றில் மனம்பேரி கொலை, யாழ்ப்பாணத்தில் குமாரசுவாமி என்ற பாடசாலை மாணவனின் மரணம் ஆகியன தொடர்பில் இராணுவம் என்று பார்க்கவில்லை. தண்டனை வழங்கப்பட்டது. இதனால் இராணுவத்தினர் என்பதற்காக வித்தியாசமான முறை இருக்க முடியாது. குற்றம் செய்திருந்தாலோ, கொலை மற்றும் மனித உரிமைகளை மீறியிருந்தாலோ அல்லது ஏதேனும் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுவே எனது நிலைப்பாடாகும். இதனை விடுத்து அவர் அதனை கூறினார், இவர் இதனை கூறினார். இவற்றால் நல்லிணக்கம் சீர்குலையும் என்பதெல்லாம் இங்கு பொருத்தமற்றது.
எவ்வாறாயினும் மூன்று இராணுவ அதிகாரிகள் தொடர்பில் இப்போது கதைக்கப்படுகின்றது. இவர்களில் இருவர் தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் கதைத்துள்ளதுடன், அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளேன். எனது நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் பாராளுமன்ற ஹன்சாட்டை எடுத்துப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.
குறிப்பாக கரன்னாகொட மற்றும் ஜகத் ஜயசூரிய ஆகியோர் முன்னணியில் இருந்து போராடியவர்கள் அல்ல. பின் அணியில் இருந்தவர்களே. இதனால் பின் அணி பகுதியில் ஏதேனும் குற்றம் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் இருக்குமாக இருந்தால் கட்டாயம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஜகத் ஜயசூரிய தொடர்பில் நான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னரே விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன்.
எவ்வாறாயினும் சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர் முன்னிலையில் இருந்து யுத்தம் செய்தவர். யுத்தக் களத்தில் முன்னணியில் எவ்விடத்திலும் மனித உரிமை மீறலோ, கொலைகளோ, வேறு குற்றங்கள் இடம்பெறுவதற்கே நான் இடமளிக்கவில்லை.
இதேவேளை இராணுவப் பிரதானிகளை பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசாங்கமும் கடப்பாட்டை கொண்டில்லை. இராணுவ பிரதானியொருவர் குற்றம் செய்திருந்தால், நாட்டின் சட்டத்தை மீறியிருந்தால், மனித உரிமைகள் சட்டம் அல்லது சர்வதேச சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
எவ்வித அரசாங்கத்தையோ, நபர்களையோ நான் பாதுகாக்கவில்லை. ஐக்கிய குடியரசால் எனக்கு எதிராக போடப்பட்ட தடை இன்னும் இருக்கின்றது. எனக்கு இருந்த நிரந்த வதிவிட நிலைமையையும் அவர்கள் இரத்தச் செய்துள்ளனர். நான் எவருடைய உதவியையும் எதிர்பார்க்கவில்லை.
எவ்வேளையிலும் முறையான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளேன். உள்ளக ரீதியில் அதனை நடத்தலாம். அதில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு வரலாம். குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நாடுகளில் இருந்து அவர்கள் வரலாம். அதன்போது அவற்றுக்கு பதிலளிக்க நான் தயாராக இருக்கின்றேன். ஆனால் எனக்காக எந்த அரசாங்கமும் முன்வரவில்லை.
இங்கே நல்லிணக்க கதை அவசியமல்ல. வடக்கில் இராணுவ வீரர் ஒருவர் குற்றம் செய்திருந்தால், அவருக்கு சாதாரண சட்டத்தின்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.
![]()