இலங்கை

பிரிட்டனின் தடையை எதிர்க்கட்சியினர் அரசியலாக்க முயற்சி

இலங்கையின் இராணுவ பிரதானிகள் உள்ளிட்ட நால்வருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடையை தமது அரசியல் தொனிப்பொருளாக மாற்றிக்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும், ஆனால் அரசாங்கம் அதற்குள் சிக்கிக்கொள்ளாது என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நாட்டின் ஸ்தீர நிலைமையை கருத்திற்கொண்டு, உலக நாடுகளுடனான பயணத்தின் போது மிகத் தெளிவாக இராஜதந்திர கொள்கைகளை பின்பற்றியே செயற்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இராணுவ பிரதானிகள் மூவருக்கும் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பிலும் ஐக்கிய இராச்சியத்தால் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் மிகத் தெளிவாக அறிவித்துள்ளார். நாங்கள் நாடென்ற வகையில், சுயாதீனமான நாடாகும். ஒருதலைப்பட்சமாக ஐக்கிய இராச்சியம் எடுத்துள்ள இந்த தீர்மானம் தொடர்பில் நாங்கள் கூடிய விரைவில் எமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளோம்.

நாட்டின் நல்லிணக்க பொறிமுறைக்கு ஐக்கிய இராச்சியத்தின் தீர்மானம் பாதிப்பாகும் என்பதனையும் கூறியுள்ளோம். நாடென்ற வகையில் மிகத் தெளிவாக நேராக இருந்து எமது தீர்மானத்தை அறிவித்துள்ளோம்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் எதையாவது கூறி அதனை அரசியல் தொனிப்பொருளாக மாற்றிக்கொள்ளவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். அதற்குள் நாங்கள் சிக்கப்போவதில்லை. நாங்கள் நாட்டின் பக்கத்தில் இருக்கின்றோம். நாட்டின் ஸ்தீர நிலைமையே இப்போது எங்களுக்கு முக்கியமாகும். இதற்காக உலக நாடுகளுடனான பயணத்தின்போது மிகத் தெளிவாக இராஜதந்திர கொள்கைகளுக்கமைய செயற்படுவோம்.

நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்தல் மற்றும் சொத்துக்களை தடை செய்தல் என்பன 2020, 2021, 2022, 2023 காலங்களில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் செய்துள்ளன. இது தொடர்பான புரிந்துகொள்ளல்களுடனேயே இந்த விடயத்தில் எமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *