துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கார்டூமை மீட்டுள்ள சூடான் இராணுவம்!

2023 ஆண்டு முதல் துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சூடான் நாட்டின் தலைநகர் கார்டூமை சூடான் இராணுவம் தற்போது முழுமையாக மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
2023 ஆண்டு முதல் துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சூடான் நாட்டின் தலைநகர் கார்டூமை சூடான் இராணுவம் முழுமையாக மீட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் கார்டூம் நகரம் இராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து தலைநகரில் உள்ள விமான நிலையமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்நாட்டு போரில் தலைநகர் கைப்பற்றப்பட்டமையானது இராணுவத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூடான் நாட்டின் ஆட்சியை கடந்த 2021 ஆம் ஆண்டு அந்த நாட்டு இராணுவம் கைப்பற்றியது.
இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை இராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயற்பட்டு வருகிறார்.
இதனிடையே, துணை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை இராணுவத்துடன் இணைக்க இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை இராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் கடும் மோதல் நிலவி வருகிறது. இம் மோதலை அடுத்து துணை இராணுவமானது, சூடான் தலைநகர் கார்டூமின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
தலைநகரை முழுமையாக கைப்பற்ற இராணுவமும் தீவிர நடவடிக்கை எடுத்துவந்தமையால், இரண்டு தரப்புக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் நிலைமை காணப்பட்டது. இந்த மோதலில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()