நல்லூர் பிரதேச செயலகத்தில் யாழில் எம்.பி.க்களை எச்சரித்த பொதுமக்கள்

யாழ். நல்லூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோர் ஒருவருக்கொருவர் அரசியல் ரீதியான நக்கல் நையாண்டிகள் செய்து நேரத்தை வீண்விரயம் செய்ததால் கூட்டத்தில் பங்கேற்ற பல பொதுமக்கள் ஆத்திரமடைந்து எச்சரித்துள்ளனர்.
நல்லூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. வீதிப் புனரமைப்பு, புகையிரதக்கடவை அமைப்பு, வீதிச் சமிக்ஞை பொருத்துதல், வடிகாலமைப்பு உள்ளிட்ட விடயங்கள் பற்றி பேசப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆளுந் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கடும் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் நக்கல் நையாண்டியிலும் ஈடுபட்டார்.
இதன்போது, பல விடயங்களில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ரஜீவன் ஆகியோர் ஒருவருக்கொருவர் அரசியல் ரீதியான நக்கல் நையாண்டிகள் செய்து நேரத்தை வீண்விரயம் செய்ததால் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.இதன் காரணமாக கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
“உங்கள் அரசியலையும் நக்கல், நையாண்டிகளையும் இங்கு கதைத்து நேரத்தை வீணாக்காதீர்கள்” என்று சபையில் அவர்கள் காட்டமாகத் தெரிவித்தனர்.
அதன் பின்னர் ஓரளவு அரசியல் நக்கல்,நையாண்டிகள் இன்றி கூட்டம் முன்னெடுக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, சிறீ பவனாந்தராஜா உள்ளிட்டோரும் துறை சார் திணைக்கள பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம சேவகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கருத்துக்கள் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எழுப்பப்பட்ட நிலையிலேயே இந்த நிலைமை ஏற்பட்டது.
![]()