தையிட்டி விகாரையில் புதிய அரசின் இரகசியச் செயல்; காணி உரிமையாளர் விசனம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கூடிய விரைவில் தீர்வை தருவதாகக் கூறிய அதே நேரம்,தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் இரகசியமாக புதிய கட்டிடத் திறப்பு இடம்பெறவுள்ளது. இது வேதனைக்குரிய விடயம் எனத் தெரிவித்துள்ள காணி உரிமையாளர் சாருஜன் பத்மநாதன் தமிழ் மக்கள் இதனை புரிந்துகொள்ளாவிட்டால் இதுபோன்று பல விடயங்கள் இடம்பெறும் எனத் தெரிவித்தார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தப் போராட்டத்தை போயா தினத்தில் தான் நடத்திக் கொண்டிருந்தோம் , போராட்டம் வலுப்பெற்றதால், அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாத நிலையில், யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள பௌத்த சாசன அமைச்சர், 20 ஆம் திகதி எங்களை கொழும்புக்கு அழைத்து இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தார்.
பௌத்த சாசன அமைச்சர் அவருடைய அலுவலகத்தில் வைத்து ஒரு மக்கள் சந்திப்பை ஒழுங்கு செய்தார். அவர் அங்கு, மக்களின் காணிகள் என்றால் மக்களிற்கே கையளிக்கவேண்டும் என்று தெளிவாக சொல்லியிருந்ததுடன் இது தங்கள் அரசாங்கத்தின் கொள்கை என்றும் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையிலே நாங்கள் உறுதிகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் அவரிடம் காட்டியிருந்தோம்.
இது தங்களுடைய விடயங்களிற்கு பொறுப்பானதல்ல காணி அமைச்சிற்கும் பொறுப்பானது என அமைச்சர் தெரிவித்தார்.அவர்களும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள், இதற்குரிய முடிவை எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்க முயல்கின்றோம் என அவர் எம்மிடம் கூறிய நிலையில் , அவருடைய அரசாங்கம் யாருக்கும் தெரியாமல், தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் இரகசியமாக புதிய கட்டிடத்தை திறக்க முயல்வது மன வருத்தத்திற்குரிய விடயம்.
எமது மக்கள் இதனை உணராவிட்டால் இதுபோல பல விடயங்கள் நடக்கும். சகல மக்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
![]()