இலங்கை

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக இன்று நீதிமன்றில் வழக்கு தாக்கல்

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் என நாடு முழுவதும் 250 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன . எம்மை பொறுத்தவரையில் ஒரே காரணத்தின் அடிப்படையிலேயே 9 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக எழுத்து மூல ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.
இளம் வேட்பாளர்களை உறுதிப்படுத்தும் வகையிலான அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமையே நிராகரிப்புக்கான காரணமாக சொல்லப்பட்டுள்ளது. ஆயினும் நாங்கள் சகல சபைகளிலும் தேவையான இளைஞர்களுக்கான அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச்சான்றிதழ்கள் வழங்கியிருக்கிறோம்.

உரிய இடத்தில் உரிய உறுதிப்படுத்தல்களுடன் பெற்றுக்கொண்ட பிறப்பு சான்றிதழ்களுக்கான போட்டோ பிரதிகள் சமாதான நீதவானின் உறுதிப்படுத்தல்களுடன் வழங்கப்பட்டுள்ளன. மூலப்பிரதிகள் வழங்கப்பட வேண்டும் என எங்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை.
எம்மை பொறுத்தவரையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

சட்டத்தின் நோக்கம் குறித்த நபர்கள் இளைஞர்கள் என்பதை உறுதிப்படுத்துவதே ஆகும். இந்த விடயத்தை உறுதிப்படுத்த பிறப்பு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை பிரதி வழங்குகிறோம்.

இவற்றை வைத்து குறித்த நபர் இளைஞரா இல்லையா என முடிவு செய்ய முடியும். இந்த நிலையில் குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தவறான ஒன்று.

இது தொடர்பாக நாம் ஏற்கனவே சட்டத்தரணியுடன் பேசியிருக்கிறோம். எதிர்வரும் திங்கட்கிழமை இது குறித்த வழக்கு தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *