இலங்கை

கச்சதீவு பெரு விழாவுக்கு செல்பவர்கள் படிவமொன்றை பூர்த்தி செய்து தமது பதிவுகளை உறுதிப்படுத்த முடியும்; 9 ஆயிரம் பேர் பங்கேற்பர்  

கச்சதீவு பெருவிழாவுக்கு செல்பவர்கள் படிவமொன்றை பூர்த்தி செய்து கச்சதீவில் சமர்ப்பிப்பதன் மூலம் தமது பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், பெருவிழாவுக்கான ஒத்துழைப்பை சகல பக்தர்களும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், யாழ் மறை மாவட்ட குரு முதல்வர், கடற்படையினர், துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து துறைசார் தரப்பினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்தத் தெரிவித்த மாவட்ட பதில் செயலாளர் கூறுகையில்,

திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.எங்களால் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கச்சதீவில் சமர்ப்பிப்பதன் மூலம் தமது பதிவுகளை பக்தர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்

இதேநேரம் பேருந்துசேவையை முன்னெடுக்க இ.போ.ச.மற்றும் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கான ஒரு வழி போக்குவரத்து கட்டடணமாக 1000 ரூபாவும், குறிகட்டுவானிலிருந்து ஒரு வழி போக்குவரத்து கட்டடணமாக 1300 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணம் செய்கின்ற படகுகள் பரிசோதனை செய்யப்பட இருக்கின்றது.

உணவு தங்குமிட வசதிகள் கடற்படையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வமாக,குறிகட்டுவானில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வதற்கான அறிவித்தலை வழங்கி இருக்கின்றோம். இருந்தாலும் சிலர் இலங்கையின் வேறு பிரதேசங்களில் இருந்து நேரடியாக வர வாய்ப்பு இருக்கிறது. அவர்களிடம் நாம் வினயமாக கேட்டுக்கொள்வது முறையாக அந்தந்த பகுதி பங்குகள் மூலம் அறிவுறுத்தலை வழங்கி அந்த இடத்திற்கு வரும் பொழுது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடற்படையினரால் செய்ய முடியும்.

பெருந்திருவிழாவுக்கு இம்முறை இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் இலங்கையின் 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் அனுமதிக்கப்படவுள்ளதுடன் இரு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் ஆயிரம் பேருமாக 9 ஆயிரம் பேர் வருகை தரவுள்ளனர் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *