இலங்கை

யுத்தத்தில் மருத்துவமனைகள் மீது விமானக் குண்டு வீச்சுகள் நடந்தன; அல் ஜசீராவிடம் ஒப்புக்கொண்ட ரணில் 

யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன, மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனினும் இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அல் ஜசீரா தொலைக்காட்சியில் பதிவு செய்யப்பட்ட நேர்காணலின் போது ஒரு பரபரப்பான நிலைமை உருவானது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Head to Head நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்தார்.

கேள்வி – பாராளுமன்றம் உங்களை இலங்கையின் ஜனாதிபதியாக நியமித்தது. நீங்கள் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மைக்குக் கொண்டு வந்தீர்கள். ஒரு வருடத்தில் நாட்டின் பணவீக்கத்தில் 70% ஐ 1.3% ஆகக் குறைத்தீர்கள். ஆனால் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்கள். இவ்வளவு நல்ல சாதனையைப் பெற்றிருந்தும், இலங்கை மக்களால் நீங்கள் முழுமையாக நிராகரிக்கப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் – நான் ஏன் தோற்றேன் என்பதை விளக்க நான் இங்கு வரவில்லை. ஆனால் எனக்கு வழங்கப்பட்ட பணியை நிறைவேற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கேள்வி – 2022இல் ஆட்சிக்கு வந்த சில மணி நேரங்களுக்குள், நீங்கள் பாதுகாப்புப் படையினரை அழைத்து, சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யுமாறு அறிவுறுத்தினீர்கள், இல்லையா? பின்னர் அவர்கள் போராட்டக்காரர்களை வன்முறையைக் கொண்டு அடக்கினார்கள்தானே?

பதில் – இளைஞர்களின் கருத்துக்களை யாரும் புறக்கணிக்கவில்லை. பாராளுமன்றம் என்னை ஜனாதிபதியாக நியமிக்கும்போது, ​​நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். நாடாளுமன்றம் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டால் என்ன நடக்கும்? அதுதான் ஜனநாயகமா?

கேள்வி – அம்னஸ்டி இன்டர்நேஷனல் கூற்றுப்படி, உங்கள் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் 944 கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தியது?

பதில் – அம்னஸ்டி இன்டர்நேஷனல் எமது நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அவர்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன.

கேள்வி -அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக தேவையற்ற பலப்பிரயோகம் நடந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது?

பதில் – ஐரோப்பிய ஒன்றியம் சில அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது. என்னையும் இராஜினாமா செய்ய வற்புறுத்தினர். பின்னர் இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவித்ததற்காக அவர்கள்தான் என்னைப் பாராட்டவும் செய்தார்கள்.

கேள்வி – உங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பிடிக்கவில்லை. அம்னஸ்டி இன்டர்நேஷனலும் பிடிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் எதிராக உள்ளீர்கள்…

பதில் – இல்லை. எனக்கு ஐரோப்பிய ஒன்றியம் பிடிக்கும். நிறுவனங்களைப் பற்றி நீங்கள் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லுங்கள். அடுத்து பதில் சொல்கிறேன். நீங்க பிறப்பதற்கு முன்பிருந்தே நான் அரசியலில் இருக்கிறேன்.

கேள்வி – கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பேராயர் மெல்கம் ரஞ்சித், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து உண்மையான விசாரணை நடத்த நீங்கள் முயற்சிக்கவில்லை என்றும். அதற்காக நீங்கள் நியமித்த ஆணைக்குழு பயனற்ற அறிக்கையை வெளியிட்டதாக குறிப்பிடுகிறார்.

பதில் – கத்தோலிக்க திருச்சபையில் அரசியல் இருப்பது எனக்குத் தெரியும்.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலுக்கு பதிலளித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *