உலகம்

ஹசீனா நாடு கடத்தப்படுவாரா?

பங்களாதேஷ் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடா்பாக இந்தியாவிடம் அதிகாரபூா்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா்.

பங்களாதேஷில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் திகதி அந்நாட்டு பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா இராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்ற முகமது யூனுஸ், ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், தொழிலாளா்கள் என 1,500 போ் கொல்லப்பட்டதாகவும், 19,931 போ் காயமடைந்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.

இந்தக் குற்றத்துக்காக பங்களாதேஷில் உள்நாட்டு குற்றங்களை விசாரிக்கும் சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம், ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது. அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்துமாறு அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவிடம் வலியுறுத்தி வருகிறது.

இதுதொடா்பாக பிரிட்டன் தொலைக்காட்சிக்கு முகமது யூனுஸ் அளித்த நேர்காணலில், ‘மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக ஹசீனா மீது நீதிமன்ற விசாரணை நடைபெறும். அவருக்கு எதிராக மட்டுமின்றி, அவரின் குடும்ப உறுப்பினா்கள், அவருடன் தொடா்புகொண்டவா்கள் என அனைவருக்கு எதிராகவும் நீதிமன்ற விசாரணை நடைபெறும்.

ஹசீனாவை பங்களாதேஷுக்கு நாடு கடத்துமாறு இந்தியாவுக்கு முறைப்படி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கடிதங்களுக்கு இந்தியாவிடம் அதிகாரபூா்வமாக எந்தப் பதிலும் இல்லை’ என்றாா்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *