Clean Srilanka- சுத்தமாகும் இலங்கை

நகரம் அழகாகி வருகிறது.
சுவர் முழுக்க மினுமினுப்பின் திரை.
அழுக்கு நீங்கிய தடங்கள்.
புதிய சிமெந்து வாசம்.
சுத்தமாகும் இலங்கை.
ATM மெஷின் பக்கத்தில்
இரண்டு உடல்கள் உறங்குகின்றன.
ஒருவன் செய்தித்தாள்போல் சுருண்டு.
மற்றவன் இறந்த உடல் போல அசைவற்றுத் தேய்ந்து.
அவர்கள் நகரத்திற்கு இல்லை.
நகரம் அவர்களுக்கு இல்லை.
அசுத்தம் என்கிறார்கள்.
சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அழுக்கை எடுத்து வீசுகிறார்கள்.
எங்கே?
ஒரு உடல் மறையவும்,
அடுத்த உடல் தழைக்கிறது.
வறுமை தரையில் படுத்திருக்கும் வரை
நாடு எங்கே சுத்தம்?
இன்று காலையே மயூராபதி அம்மனை காணச்சென்றாயிற்று. மிதமான கூட்டம்.
கோயிலின் பக்கவாட்டு வெளி முன்றலில் சிறிதாய் ஒரு கூட்டம். சில வேட்டி சட்டை மற்றும் பட்டுச்சேலை பளீர் மனிதர்கள். கனகாம்பரம் , மல்லிகை சூடி அறநெறி பாடசாலை மாணவிகள் பலர் பாவாடை தாவணியில். கோயிலின் முக்கிய பிரமுகர் ஒருவர் முன்னகர்ந்து வந்து கொடியேற்றி வைக்க, வரிசையில் நடந்த வந்த மாணவிகள் தேசியகீதத்தை பாடினார்கள். ‘நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்..’ என்ற இடத்தில் நான் இலண்டனில் நின்றபோதுகூட இல்லாத சிலிர்ப்பு எழுந்தமர்ந்தது.
அடுத்ததாய் பேச வந்த பிரமுகர், இந்த எழுபத்தி ஏழாவது சுதந்திர தினத்தன்று அரசாங்கம் தொடங்கியுள்ள ‘சுத்தமான இலங்கை’ எனும் கோட்பாடு வெற்றியடைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக உரையைத் தொடங்கி, தொடர்ந்து பேசினார்.
தேசத்தின் விடுதலையையும் இறையாண்மையையும் கொண்டாடும் இன்றைய நாளில், சுத்தமான இலங்கை என்ற கருத்தின் உண்மையான அர்த்தம் என்னவென்பதை சிந்தித்தபடி வெளிவந்தேன்.
அரசாங்கம் சமீபத்தில் ‘கிளீன்- ஶ்ரீலங்கா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தெரிந்ததே. ஊழல், லஞ்சம், சட்டவிரோத செயல்கள் ஆகியவற்றிலிருந்து தேசத்தை சுத்தமாக்குவதாக அது வாக்களிக்கிறது. இது ஒரு உயரிய குறிக்கோள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஒரு தேசத்தைச் சுத்தமாக்குவது என்பதன் உண்மைப் பொருள் என்ன?
நேற்றுப் பின்னிரவில், மருத்துவமனையில் ஒருநாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, உடல் முழுக்க பரவலான சோர்வு. தெருவின் மறுபக்க ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றேன். வாசலருகே இரண்டு உடல்கள் உறங்கிக்கொண்டிருந்தன. நாட்பிச்சைக்காரர்கள். ஒருவர் இறந்த உடல்போல் அசைவற்று சுருண்டு. மற்றயவர், முகம் முழுக்க வறண்டு போய், கைகள் அகல விரித்து- ‘பிதாவே ஏன் என்னை கைவிட்டீர்?!’ எனும் சிலுவையேறிய தேவபாலன் பாவத்தில்- கசங்கிய காகிதம் போலக் கிடந்தார். அழுக்கின் அத்தனை அளபெடைகளும் கூடியிருந்தன.
வழக்கம்போல் ஏடி எம் மெசின் சுத்தமாக இருந்தது.
சுத்தப்படுத்துவது என்பது வெறும் குப்பைகளை அகற்றுவது, சுவர்களை புதிதாக பொடித்துப் பூசுவது, கடுமையான ஒழுங்குமுறைகளை அமல்படுத்துவது என்பன மட்டுமல்ல,இவர்கள் தெருவில் விழுந்து கிடக்க வேண்டிய சூழலை உருவாக்கிய அடிப்படை பிரச்சனைகளை அகற்றுவதும்தான். கிளீன் ஶ்ரீலங்கா இவர்களுக்கு என்ன செய்யப்போகிறது என்ற தீவிர யோசனை எழுந்தது.
இலங்கையை உண்மையில் சுத்தமாக்க விரும்பினால், வறுமைக் கயிற்றில் உழலும் மக்கள் இருண்மையும் சுத்தமாக்கப்பட வேண்டும். ஊழல் என்பது வெறும் அதிகார மேடைகளில் நடக்கும் லஞ்ச ஊழல்களை மட்டுமே குறிக்காது; அது, எளிய மக்களை மீண்டும் மீண்டும் புறக்கணிக்கும் ஒரு அமைப்புசார் அநீதியையும் குறிக்கிறது. ஒரு நகரத்தின் அழுக்கானது, வெறும் தெருக்களில் கிடக்கும் குப்பைகள் மட்டுமல்ல; அந்தக் குப்பைகள் போலவே, வாழ்க்கையின் எல்லைகளில் தள்ளப்பட்ட மக்களும்தான்; சுரண்டல் என்பதன் படிம அழுக்குகள்.
ஒரு தேசத்தை சுத்தமாக்குவது என்பது, அது நகரங்களை, திணைக்கள நிர்வாகங்களை சுத்தமாக்குவது மட்டுமல்ல, இந்த இருவரும் அங்கே படுக்க வேண்டிய நிலையை உருவாக்கிய சூழலை சுத்தமாக்கலும்தான். ஊழல், லஞ்சம், அதிகாரக் கொடுமைகள்—அவை நிச்சயமாக நீக்கப்படவேண்டும். ஆனால் ஒரு நாட்டின் அழுக்கானது அதன் நிர்வாகத்தில், பொருளாதாரத்தில், நீதியமைப்பில் மட்டுமல்லாமல் தெருக்களில், புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையிலும் இருக்கிறதெனும் தெளிவு, புரிதல் ஆட்சியாளர்களுக்கு அவசியம். இரண்டையும் ஒரே நேரத்தில் சுத்தமாக்காவிட்டால், எந்த Clean Sri Lankaவும் முழுமை பெறாது.
Clean Sri Lanka உண்மையான மாற்றத்திற்கான இயக்கமாக இருக்க வேண்டுமெனில், அது இந்த அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்க முனைய வேண்டும். வீடற்றவர்களை மீட்டெடுக்கும் திட்டங்கள்,வேலை வாய்ப்புகள், ஒவ்வொருவரும் இந்த சமூகத்தில் ஒரு இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு, மற்றும் பொதுவெளிகளில் தனிமனித ஒருக்கம் பேணப்படல் என்பன அதில் அடங்க வேண்டும். இது ஊழல் அகற்றும் திட்டமாக மட்டுமல்லாமல் மானுடத்தை உயர்த்தும் திட்டமாகவும் பயணிப்பதே பயனுள்ளது.
நகரம் எத்தனை முறை சுத்தமாக்கப்பட்டபோதும், சாலை மனிதர்கள் மட்டும் அங்கேயே இருந்து விடுகிறார்கள்.ஏனென்றால், சுவரில் ஒட்டியிருக்கும் போஸ்டர்கள், தெருக்களில் புரண்டுகிடக்கும் காகிதங்கள்,குப்பை கூளங்கள்—அவற்றை அகற்றுவது எளிது.
ஆனால் ஒரு மனிதனை அகற்றுவது?அவனை மாற்றுவது?அவனை வாழ்க்கையில் திரும்ப சேர்ப்பது? எளிதே கிடையாது!
கிளீன்-ஶ்ரீலங்கா திட்டம் உண்மையில் தேசத்தை மாற்றவேண்டும் என்றால், அதன் முதல் படி ‘Clean Governance, Clean Humanity’ என்ற இரட்டை நோக்குடன் இயங்க வேண்டும். ‘Clean Sri Lanka’,வெறும் ஒரு அரசியல் பொருளாதார உயர்வை குறித்ததான உணர்வெழுச்சி மட்டும் அல்லாமல், ஒரு மனித நேய இயக்கமாக இருக்க வேண்டும்.
அடுத்த முறை கிளீன்-ஶ்ரீலங்கா திட்டம் குறித்து யாராவது பேசும்போது, அந்த இரு உறங்கும் மனிதர் முகங்களை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் உண்மையான சுத்தம் தெருக்களில் இல்லை; அது தனது மக்கள் அனைவருக்கும் வாழ்வதற்கான மரியாதையையும், பரிசுத்த நிம்மதியையும் கொடுக்கிறதா என்பதில்தான் இருக்கிறது.
வீடற்றவர்களை மீட்டெடுக்கும் திட்டங்கள் , வேலை வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்,சூழல் மற்றும் வறுமை உத்தரவாத திட்டங்கள், சமூக சேவைகள் மற்றும் நலன்புரிகளின் மேம்பாடு- அவற்றில் அரசு மற்றும் தனியார் அமைப்புக்களின் இணக்கப்பாடு,கடன் சீரமைப்பு மற்றும் நிதி உதவிகள் என சிலதை யோசித்துப் பார்த்தேன். என்னைவிட சமூக, அரசியல், பொருளாதார விற்பனர்களை கொண்டுள்ள ஒரு மகா அரச எந்திரத்திற்கு இது பற்றி தெருந்திருக்காமல் போவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அதை செயற்படுத்த, பின்தங்கிய மூன்றாம் உலக நாடொன்றுக்கு இருக்கும் பன்னூறு இடையூறுகள் பற்றி எல்லோருக்கும் விழிப்பு இருக்கிறது. அவற்றின் முதன்மை இடையூறு அது அரசு மட்டுமே செய்யவேண்டிய ஒன்று என்று நாம் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது. மந்திரம் நிகழ காத்திருப்பது. நாமும் அரசின் பங்காளிகள் என்பதை மறந்திருப்பதுதான் இந்த மூன்றாம் உலக நாடுகளின் சாபக்கேடு. அரசே வந்து அதை எமக்குணர்த்தும்வரை காத்திருக்காது, நாமாக பங்களிப்பை தொடங்கும்போது அது சுத்தத்திற்கான முதற்திறப்பாக அமைகின்றது. அதுவே இன்றையதிலிருந்து நாளைக்கு செல்லும் உண்மையான வழி.
‘இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே ..’
![]()