சேர்பிய நாடாளுமன்றில் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!

சேர்பியாவின் நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவ தினமான நேற்று பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நடைபெற இருந்த நிலையில், அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் இராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும் கூட்டணி (SNS) யை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது இருக்கைகளை விட்டு இறங்கி மக்களவை சபாநாயகரை நோக்கி ஓடியதுடன் சில எதிர்கட்சி உறுப்பினர்கள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற புகைக்குண்டுகளை மக்களவைக்குள் வீசி, அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
![]()