கச்சதீவு தொடர்பில் புதிய ஒப்பந்தம்; தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்து

தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சதீவில் மீன்பிடிக்க வழிவகை செய்யும் விதத்தில் இலங்கையுடன் புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று இந்திய மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் நாகை மாவட்டம் நாகூரில் அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.
‘மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. இலங்கையின் வெளிநாட்டு மீனவர் தடை சட்டத்தால் அரங்கேறும் கொடுமைகள் பல.இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னரான கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையினரால் 3656 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.611 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.அதேபோல், கடந்த நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டு மீனவர்கள் 736 தடவை தாக்குதலுக்குட்பட்டிருக்கிறார்கள் என வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்.
ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு மத்திய அரசின் பொறுப்பாகும்.ஆனால்,இதுவரை அந்த பொறுப்பை மத்திய அரசு செய்யவில்லை.2010 ஆம் ஆண்டு முதல் இருநாட்டு மீனவர்களுக்குமிடையில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் இப்பொழுது நடைபெறுவதில்லை.2014 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய மீனவர்களுக்கிடையில் அமைச்சுக்கள் மட்டத்தில் நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தைகளின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் தற்பொழுது மீறப்படுகின்றன.
எனவே இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு பிரதமர் நரேந்திரமோடி நேரடியாக தலையிட்டு தீர்வை காணவேண்டும்.இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் தொடர்ந்தும் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது.இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும்.அதற்குரிய தீர்வை காண பிரதமர் மோடி தமிழ் நாட்டு மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடிப்பதை அனுமதிக்கக்கூடிய வகையில் புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டுமென தமிழ் நாட்டு முதலமைச்சர் என்ற அடிப்படையில் நான் உங்களை மீண்டும் வலியுறுத்துகிறேன்’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
![]()