இலங்கை

பாரிய கூட்டணிக்கான முயற்சிகள் தொடரும்; சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலும் எதிர் காலத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில்  நடைபெற்ற கட்சிகளுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி நடத்தி வருகின்றது. அந்த அடிப்படையில் இன்றும் நாங்கள் வடகிழக்கு நிலைமைகள் தொடர்பாகவும் இந்த தேர்தலை கையாளுவது பற்றியும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் குழுக்களை நியமிப்பது தொடர்பாகவும் பேசிக் கொண்டோம்.

இன்னமும் சில கட்சிகளும் எம்முடன் இணைந்து கொள்வதற்கான விருப்புக்களை முன்வைத்திருக்கின்றன. வடக்கில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் ஒரு சில அமைப்புகள் எங்களுடன் இணைவதற்கு விருப்பங்களை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய அனைத்து சக்திகளையும் உள்ளடக்கி இந்த விடயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு ஊடாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளாக தமிழ் மக்களுடைய சகல பிரச்சனைகளையும் முன்னெடுத்துச் செல்வதை எண்ணமாக கொண்டு செயல்படுகிறோம்.

இந்தக் கூட்டணி இத்துடன் முடிந்து விடாது. வடக்கு கிழக்கை உள்ளடக்கிய வகையில் பரந்துபட்ட கூட்டணியாக இதனை நாம் உருவாக்க விரும்புகிறோம். அதற்கான முயற்சிகள் கட்சித் தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் எதிர் காலத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம்.

ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டணி, சமத்துவக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி ஆகியன இணைந்துள்ளன.

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றாக திரள வேண்டும் என தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். அதற்காக நாங்கள் வேலை செய்கின்றோம். இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று சொன்னால் அது அவர்கள் எடுக்க வேண்டிய விடயம் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *